தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -49.
முனைவர் இரெ. குமரன்:
2.குறுந்தொகை, கடவுள் வாழ்த்து :
தொல்தமிழர் - முருகக் கடவுள் வாழ்த்து:
“தாமரை புரையும் காமர் சேவடி
பவழத்து அன்ன மேனி திகழொளி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சுபக எறிந்த அம்சுடர் நெடுவேல்
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே.
- பாரதம் பாடிய பெருந்தேவனார்,
முருகக் கடவுள் வாழ்த்துப் பாடல். தாமரை மலரைப் போன்ற யாவர்க்கும் விருப்பத்தைத் தரும் சிவந்த அடிகளையும்,; பவழத்தைப் போன்ற செம்மேனியின்கண் திகழும் ஒளியினையும் ; குன்றிமணியைப் போன்ற செந்நிற ஆடையினையும் ; கிரெளஞ்சம் என்ற குன்றின் நடு இடம் பிளக்குமாறு எறிந்த ்செந்நிறம் பொருந்திய ஒளிவீசும் நீண்ட வேலினையும் உடைய ; சேவல் கொடி ஏந்திய முருகப்பெருமான் காத்தலால் உலகம் இன்பமுள்ள வாழ்நாளைப் பெறுவதாயிற்று.
(மருதத்துத் தாமரை; நெய்தல் நிலத்துப் பவழம் ; முல்லையின் குன்றிமணி ; குறிஞ்சியின் குன்று ஆகியவற்றைக் கூறுவதன் மூலம் நானிலப் பாகுபாடு குறிக்கப்பட்டது. இந்நால்வகை நிலமும் ஆண்டு உறையும் நல்லோர் காரணத்தால் முருகப்பெருமானால் காக்கப் பெறுவதும் உணர்த்தப்பட்டது.)
( குறுந்தொகை என்னும் இத்தொகை நூல் இன்பம் நுதலியது ஆகலின், அதற்கு ஏற்ப முருகக் கடவுள் காத்தலால், உலகம் இன்பம் உடைய வாழ்நாளைப் பெற்று மகிழ்ந்ததாகக் குறிக்கப்பட்டது. இத்தொகை நூல் களவும் கற்புமாகிய இருவகை ஒழுகலாறுகளை விளக்கும் அகநூலாதலின் அவ்விருவகை ஒழுக்கத்தையும் உலகிற்குக் காட்டிய முருகப்பெருமானை ஆசிரியர் நூன்முகத்தே நினைத்துப் போற்றியுள்ளார். முருகன் களவு மணத்தால் வள்ளி நாயகியையும், கற்பு மணத்தால் தெய்வயானையாரையும் மணம் புரிந்து கொண்டனன்.)
(புரையும், அன்ன, ஏய்க்கும் - உவம உருபுகள் ; காமர் - அழகிய (யாவர்க்கும் விருப்பம் நல்கும்.) ; பக - பிளக்கும்படி.; ஏமம் - இன்பம். ; வைகல் - வாழ்நாள். ; ஏம வைகல் - பிறவித் துன்பம் சாராத நாட்கள். ; நெஞ்சு - நடு இடம். ; சேவல் - கோழிச்சேவல் (மயில் சேவலும் ஆம்.)
...............................................தொடரும்.........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக