தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -46.
முனைவர் இரெ. குமரன்: 1. நற்றிணை:
தொல்தமிழர் - ஆரவார விழாக் கோலம்:
நெய்தல் :
”நிலவே நீல்நிற விசும்பில் பல்கதிர் பரப்பி
பால்மலி கடலின் பரந்து பட்டன்றே
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபுதொகுபு ஈண்டி
கலிகெழு மறுகின் விழவு அயரும்மே
கானே பூமலர் கஞலிய பொழில் ழ் அகம்தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே
யானே புனைஇழை ஞெகிழ்த்த புலம்புகொல் அவலமொடு
கனைஇருங் கங்குலும் கண்படை இலனே
அதனால் என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங்கொல் என் அவலம் உறு நெஞ்சே.”
- வெள்ளி வீதியார், நற். 348.
நீலநிறம் பொருந்திய ஆகாயத்தில் பல கதிர்களைப் பரப்பி பால் நிரம்பிய கடல்போல ஒளிபரவியதாய்ச் செய்து நிலவு விளக்கும் ; இந்நிலவொளியில் ஊரினர் பெருகும் ஆரவாரத்துடன் மிகுதியாய்க் கூடி், ஓசையுடைய தெருவில் விழாக் கொண்டாடுகின்றனர் ; காட்டிலே பூக்கள் மலர்ந்து செறிந்த சோலைகளின் இடந்தோறும் தாம் விரும்பும் துணையுடன் வண்டுகள் ஒலித்து விளங்கும் ; இத்தகைய பொழுதில் யானோ...! அணிந்த இழைகளை நெகிழச் செய்த தனிமையால் விளைந்த வருத்தத்துடன் ; செறிந்த இருளை உடைய இரவிலும் உறங்காது இருக்கின்றேன் ; இவ்வாறு உலகத்தார் இயல்புக்குப் பொருந்தாது மாறுபடுவதால் இவ்வுலகம் என்னோடு போர் புரியுமோ...? இவ்வுலகத்துடன் அவலமுற்ற என் நெஞ்சுதான் போர் செய்யுமோ...?
( நிலவின் ஒளி படருங்காலத்துக் காமநோய் பெருகுவதால் அதனை முற்குறித்தாள் தலைவி ; ஊரவர் மகிழ்வுடன் விழா எடுக்கின்ற காலத்து தலைவன் உடன் இல்லாமையால் துயருற்று விழாவினையும் வெறுத்தாள்.)
( ஒலிவரல் - தழைத்துப் பெருகுதல் ; சும்மை - ஆரவாரம் ; ஈண்டி - சேர்ந்து / திரண்டு ; புலம்பு - தனிமை ; கங்குல் - இரவு.)
...............................தொடரும்..............................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக