திங்கள், 28 ஆகஸ்ட், 2023

 

 தமிழர் ஓணநாள் விழா

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்

மாயோன் மேய ஓண நல் நாள்,

கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,

சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,

மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,

மாறாது உற்ற வடுப் படு நெற்றி,

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்

கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட

நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,

கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர

                                 --மாங்குடி மருதனார், மதுரைக்காஞ்சி: 590-599.

 

 கரு நிறம் உடைய திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாளில்  ஊரிலுள்ளார் விழா எடுப்பர் ;அவ்விழாவில் மறவர்கள் சேரிப்போர் நிகழ்த்துதல் வழக்கமாகும். யனைகளுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கும் முறையும் இருந்தது. மறவர்கள், கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக,  மகிழ்ந்து திரிந்தனர்.

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-27.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-27.

முனைவர் இரெ. குமரன்

 

 

தொல்லியல் ஆய்வுக்குரிய களங்கள்

 

 1) திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம்  நறுவெளிக் களப்பாளில் வாய்க்காலைத் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட பழமை வய்ந்த முதுமக்கள் தாழி. தாழி நான்கு அடி உயரம். சில எலும்புத்துண்டுகள்.

2) களப்பாள் ஆதித்தேச்சுரம் கோயிலைச் சுற்றி புதையுண்ட கல்வெட்டுகள்.

3)  களப்பாள் பொதுப் பெயர் -ஏழு களப்பாள்கள்.

4) பட்டமுடையான் களப்பாளில் மண்மூடிப்போன கைலாசநாதர் கோயில்.

5) கற்சிலைகளும் லிங்கங்களும் சிதறிக்கிடந்த திடல் ,லிங்கத்தடி.

6) பொலிவிழந்த திரெளபதி அம்மன் கோயில்.

7) அரண்மனைக்குளம் நடுவே சுரங்கப்பாதை (ஊரார் வாய்மொழி)

8) நறுவளிக்களப்பாள் நாகநாதர் ஆலயம்.

9) இராஜாபாளையம் (தெரு).

10)           நாராயணபுரம் களப்பாள் ஆனைகாத்த பெருமாள் கோயில்.

தொல்லியல் துறை மேற்குறித்துள்ள இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டால் பல அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கக்கூடும்; விடை தெரியாத வினாக்களுக்கும் விடை கிடைக்க வாய்ப்புண்டு.

======================முற்றிற்று=======================

சனி, 26 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-26.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-26.

முனைவர் இரெ. குமரன்

 

                             1946- சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு, அன்றுதான்…..

அடக்குமுறையால் அழுத்தப்பட்டுக் கிடந்த அடிமைச் சமுதாயம் சினந்து…..கனன்று கிடந்த எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது. அதற்குப் பெயர்தான்களப்பாள் கலவரம்.’.

ஏழைகள் எரிமலை என்பதை அறியாது எருமை மாடுகள் என்று எண்ணி ஏறி விளையாடிய பண்ணை முதலாளிகள், எரிமலையின் மீது விழுந்த பஞ்சுப் பொதிகளாயினர்.

                                 மண்ணுக்குத் தெரியும் தனக்குச் சொந்தக்காரன் யாரென்று! மண்ணோடு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து உறவு கொண்டவன் பண்ணைகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கண்ணால் அல்ல, காலால் அடி அடியாக அளந்து உழுதுகளைத்தவன் இன்றும் அந்த மண்ணிலே! அந்த மண்ணைக் காலால் அல்ல, கன்ணால் கூட அளக்காதவர்கள் சொந்தம் கொண்டாடி இன்று எங்கோ தொலைந்து  போனார்கள். அவர்கள் வாழ்ந்து மறைந்த வழியில் புழுதி படிந்த அந்தத் தடத்தின் பழைய வரலாறு….!

 

                                இந்த வரலாறு ஓர் உண்மையை மிகத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. இனி….. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணமுடியாது எரிமலையைத்தான் காணமுடியும்.

 

 உலகம் முழுவதும் அழுது புலம்பிய ஆயிரமாயிரம் ஏழைகளின் கண்ணீரைத் தன் ஒர்றை விரலால் துடைத்தெறிந்த அந்த மேதை அன்றே சொன்னான், “முதலாலீத்துவம் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்கிறதுஎன்று! இந்த உண்மை வரலாற்றில் காலந்தோறும் மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதற்கு இன்னுமொரு சான்று  களப்பாள்தான்.

…………………………………………தொடரும்………………………………….

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-25.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-25.

முனைவர் இரெ. குமரன்

 

 

                                        சின்ன பண்ணை, பெரிய பண்ணை, நடுப்பண்ணை, ஐயர் பண்ணை, செட்டியார் பண்ணை இப்படிப் பல பண்ணைகள். ஒவ்வொரு பண்ணைக்கும் ஐம்பது அறுபது வேலி விளைநிலங்களும் ஒவ்வொரு ஊரும்(கிராமம்) சொந்தமாக இருக்கும்.ஊரில் உள்ள மக்களுள் 90% மக்கள் வேளாண் தொழிலாளிகளே. ஏழை எளிய இம்மக்கள் பண்ணைகளுக்கு அடிமைகளே! எவ்வித உரிமையும் கிடையாது. எல்லாத்தேவைகளுக்கும் பண்ணைகளிடம் கையேந்தி நிற்க வேண்டும். தீண்டதகாத உழவர்குடி மக்களுக்குச் சாட்டை அடி, சாணிப்பால் தண்டனை வழங்கப்படும். ஏன் என்று கேட்பாரில்லை.இந்தத் தண்டனைகளை மணியம், விசாரிப்பு வேலை பார்க்கும் குடியானவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்கள் பண்ணைவீட்டுத் தெருக்களில் செருப்போ, துண்டோ, சட்டையோ போட்டுக்கொண்டு நடக்கமுடியாது. ஐயாவைக் கண்டால் குடியானவர்கள் தள்ளி நிற்பார்கள்; ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளிகள் வேலிக்குள் ஒடுங்கி மறைந்து கொள்வார்கள். 

                                    குடியானவர்கள் பண்ணை வீடு சார்ந்த பணியாளர்கள் ; பண்ணை நிலம் சார்ந்த உழைப்பாளர்கள் அடிமைகள் போலக் கட்டுண்டுகிடப்பார்கள்; பண்ணைக்கு அன்றாடக் கூலிகளாகப் பாடுபவர்கள்கொடுத்ததுதான் கூலி வாய்பேச வழியற்றவர்கள். பண்ணையாளர்களுக்கு வியர்வை வெளியே வராது. பண்ணை ஆட்கள் வியர்வை செந்நீராய் நிலத்தில் வீழும். அந்ந வியர்வையில்தான் பண்ணயார்கள் குளிப்பார்கள்.

…………………………………………………….தொடரும்……………..

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-24..

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-24..

முனைவர் இரெ. குமரன்

 

காலச் சுழலில் களப்பாள்

                                   நெல்லைத்தவிர வேறு விளைபொருள் இல்லை ; விவசாயம் தவிர வேறு தொழிலும் இல்லை. ஆடி முதல் தைவரை சேற்றோடுதான் போராட்டம். மாசியும் பங்குனியும் மத்தளக் கொட்டு; சித்திரை பொறந்தோன குப்புறக் கொட்டு என்பதே நிலத்தின் பழமொழி. சேற்றோடு போராடியவன் சோற்றோடு போராடும காலம். இயலாமை எங்குமே இல்லை; இல்லாமை எங்கும் இருந்தது. இந்நிலை ஏன்…..எப்படி வந்தது….?

                         விளைநிலங்கள் அனைத்தும் பண்ணைகளுக்கே சொந்தம்; பண்ணை ஆட்களும் அடிமைகளாகப் பண்ணைக்குச் சொந்தம். ஆண்டான் அடிமைச் சமுதாயம் மலையும் மடுவுமாக தோற்றம் பெற்றது. பண்ணை முதலாளிகள் முதலியார்,ஐயர், மடாதிபதிகள். பண்ணை வீடுகள் சார்ந்த தொழிலாளிகள் பரிகாரி, பூசாரி, குருக்கள்,குடியானவர்கள். குடியானவர்கள் பண்ணை முதலாளியை ஐயா என்றும் அவர்தம் மனைவியை அண்ணி என்றும்  அவர்தம் குழந்தைகளைத் தம்பி என்றும் அழைப்பர். தாழ்த்தப்பட்டவர்கள், குடியானவரை ஐயா என்றும் அவர்தம் மனைவியை ஆச்சி என்றும் அவர்தம் குழந்தைகளை  ஐயா என்றும் அழைப்பர். பண்ணையார்க்குக் குடியானவர்கள் தீண்டத்தக்கதவர்கள்;  பண்ணையார்க்கும் குடியானவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள்.

 

                     இத்தகைய பண்ணை ஆட்சிமுறையில் முதல் நிலை-பண்ணையார்கள்; இடைநிலை -குடியானவர்கள் ; கடைநிலைதாழ்தப்பட்டவர்கள்.

 இவ்வகையான ஏற்றத்தாழ்வுகள் ஊரில் ஓர் இறுக்கமான சூழ்நிலையைத் தோற்றுவித்தன.

………………………………………………தொடரும்……………………………….

புதன், 23 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-23.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-23.

முனைவர் இரெ. குமரன்

 

 

                           களப்பாள் ஒன்றா இரண்டா..? ஏழு களப்பாள்கள், கூற்றங்களாகக் கொண்டு ஆண்ட  கூற்றுவன் (நாயனார்), மூவேந்தரை வென்றவன் இவ்வூரினன் என்பர்.

 ஏழு களப்பாளைச் சுற்றி வடக்கே அக்கரைக் கோட்டம், பன்னியூர்,கரம்பக்குடி, பனையூர், கோட்டூர்; மேற்கே வங்கத்தான்குடி, வேதபுரம், மானங்காத்தான் கோட்டம், பெருக வாழ்ந்தான்; தெற்கே குலமாணிக்கம், எடையூர், முத்துப்பேட்டை; கிழக்கே மீனவநல்லூர், எழிலூர், ஆட்டூர், மடப்புரம், திருத்துறைப்பூண்டி. (ஊர்ப் பெயர்கள் ஆய்வுக்குரியன).

 

                       பாமணி ஆற்றின் கிழக்கே பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பழம்பெரும் பூமி, வெண்ணாற்றின் கிளை ஆறுகளால் வளங்கொழிக்கும்  நெல் வயல்களைக் கொண்டது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சைப்பசேல் எனப் பச்சைப் பட்டு போர்த்திருக்கும். வயலில் நீர் பாய்ச்ச,  காலால் மடையை மிதித்தால் காவிரி வெள்ளம் பாயும்.

                         களப்பாள் எனும் இவ்வூர் களர்பாழ் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. ஊர், நத்தம், களர்பாழ் ஆறிடுபடுகை முதலியவை நிலப்பெயர்கள்.(சோழர் காலக் கல்வெட்டுகள். ) உண்மையில் இன்றுங்கூட களப்பாள் மண் உப்பு மண்ணே. களர்  எனும் சொல்  உவர், போர்க்களம் என்று இரு பொருள்படும்..

 

                  இன்று நாம் காண்பதுபோல், இவ்வூர்  பண்டைய காலத்தில் நெல் வயல்கள் நிறைந்த வளங்கொழிக்கும்  நிலமாக இருந்திருக்க வாய்ப்பில்லை; இது களர் நிலமாகையால் கூற்றுவனார் காலத்தில் அரண்மனைகளோடு  பரந்து விரிந்து கிடந்த நிலப்பரப்பாக இருந்திருக்கக் கூடும். இவ்வூரில் கிடைக்கும் எச்சங்களைக் கொண்டு ஆராய வேண்டியுள்ளது.

…………………………………………தொடரும்……………………………………

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-22.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-22.

முனைவர் இரெ. குமரன்

விடை தேடும் வினாக்கள்

களப்பிரர் எவ்வினத்தவர் ?

அச்சுதக் களப்பாளன் யார்?

 கூற்றுவ நாயனார் யார்?

களந்தைக்கோன்  யார்?

களந்தை தான் களப்பாளா?

களப்பாளர்தான் களப்பிரரா?

உண்மையில் விடைகள் மண்ணில் புதையுண்டு கிடக்கின்றன. அண்மையில்  நறுவழிக்களப்பாள் வயல் வெளியில் முதுமக்கள் தாழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தடயம் என்றே கருதவேண்டியுள்ளது.

 

 

களப்பாளில் இருந்தவர்களே களப்பிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர், என்று முன்னரே குறிப்பிட்டுள்ளேன்.

 

                                        களப்பாளில் பிறந்து வளர்ந்தவன் ஆகையால், அவ்வூரைப்பற்றிச் சில சொல்ல விழைகிறேன்.

 

                    கூழாங்கல் கற்கண்டானாலும் மூங்கில் கரும்பானாலும் மணல் சர்க்கரையானாலும் கழுதை உழவுக்கு வந்தாலும்  களப்பாளன் மட்டும் எதுக்கும் ஒத்துவர மாட்டான் என்று ஊரார் கூறுவதைக் கேட்டுள்ளேன்.

 

                            களப்பாள் ஒரு பெரிய ஆய்வுக்குரிய வரலாற்றோடு தொடர்புடைய ஓர் ஊர். சேர சோழ பாண்டியர்களை வென்று அவ்வரசர்கள் இருந்த இடம் தெரியாமல், வரலாற்றில் அவர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் செய்து, ஆண்ட களப்பிரர் இவ்வூரோடு தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

 

                       இடிந்து கிடக்கும் கைலாசநாதர் கோயிலும் சிதறிக் கிடக்கும் லிங்கத்தடி திடலும் அரண்மனைக்குளமும், ராஜபாளையத்தெருவும் அரண்மனைக் குளத்து அடியில் மறைந்து கிடக்கும் சுரங்கப் பாதையும் அண்மையில் கண்டுபிடித்த முதுமக்கள் தாழியும் இராசாதித்தன் சிவன் கோயிலும்  அதில் கேட்பாறற்றுக் காணாமல் ஒழிந்த கல்வெட்டுகளும் இன்னும் பல சான்றுகளும் மன்னர்களோடு தொடர்புடைய ஊராகவே இவ்வூர் காணப்படுகிறது.  

                    இடிந்து அழிந்த கைலாசநாதர் கோயிலில் இருந்த தில்லை நடராசர் சிலைக்கு ஒப்பான அழகிய நடராசர் சிலை உள்ளிட்ட தெய்வச் சிலைகள்  ஆதித்தேச்சுரம் சிவன் கோயிலுக்குள் வைக்கபட்டன.

 

தமிழகத்தை மட்டுமின்றிக் கடல் கடந்த நாடுகள் சிலவற்றையும் கட்டி ஆண்ட களப்பிரர் இவ்வூரினரா அல்லது வேற்றுப் புலத்தவரா..?

…………………………………..தொடரும்………………………………..

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-21.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-21.

முனைவர் இரெ. குமரன்

முத்தரையர் -களப்பிரர்

                                ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் சமண பெளத்த மதங்களை ஆதரித்து வளர்த்தனர் என்றாலும் நாட்டின் நிலை எப்படி இருந்தது என்று அறிதற்குப் போதிய சான்றுகள் இல்லை. பாண்டியன் கடுங்கோனும் பல்லவ சிம்மவிஷ்ணுவும் ஏறத்தாழ கி.பி. 575இல் களப்பிரரை வெற்றி கொண்டனர். வீழ்ச்சி அடைந்த களப்பிரர் சிற்றரசர்களாக தஞ்சாவூர், செந்தலை ஆகிய ஊர்களில் தங்கிவிட்டனர். பிற்காலத்தில் களப்பிரர் முத்தரையர் என்று பெயர் பெற்றனர். சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று தரைகளை அரசாண்டவர் என்ற பொருளுடைய சொல்லாக இது இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.


செந்தலைத் தூண், சாசனங்கள்வழி முத்தரையரும் களப்பிரரும் ஒருவரே என்று அறிய முடிகிறது. நான்கு தூண்களிலும் பெரும்பிடுகு முத்தரையனுடைய சிறப்புப் பெயர்களில் ஸ்ரீ கள்வர கள்வன் என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் களவர கள்வரும் களப்பிரரும் ஒருவரே என்று கருதுகின்றனர்


மேலும் வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்எனத் திருக்காட்டுப்பள்ளி நியமம் கல்வெட்டு கூறுகிறது. வல்லத்தரசன், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டப்பெயர்கள் கள்ளர் வகுப்பினர்க்கு உரியதாதலால் பெரும்பிடுகு முத்தரையனும் கள்வர் (கள்ளர்) மரபினர் என்பர். எனவே இவரும் களப்பிரராகிறார்.

……………………………………………………தொடரும்……………………

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-20.

 

 


களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-20.

முனைவர் இரெ. குமரன்

களப்பாள்

என்னும்

திருக்களந்தை ஆதித்தேச்சுர வைபவம்-7-1-1941.

திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயன்

காப்பு

அத்தி முகனடி நித்த நினைப்பவர்

சித்தி திருவொடு முத்தி பெறுவரே.”

---------------------

 இராசாத்தித்தன் வழிபாடு

                          அநாதி மலமுத்தராய், நித்தியராய், வியாபகராய், எல்லாவறிவும் எல்லா முதன்மையும் எல்லாவநுக்கிரகமும் உடையராய் விளங்கும் எண்குணக்கடவுளாகிய நமது பரமேசுவரன் தமது அடியார்களுடைய பக்குவாபக்குவத்துக்குத் தக்கபடிசாலோக, சாமீப, சாரூப, சாயுச்சியபதங்களை யளித்தாள்வதற்கான திருவுருவுடனெழுந்தருளியிருக்கின்ற சிவதலங்கள் பலவற்றுள்ளுஞ் சிறந்தோங்கிய இத்தலம்இராசாதித்தன்என்னும் அரசன் உண்டுபண்ணி வழிபட்டது. ( கற்பக்கிரகம் பின்புறத்தில் இராசாதித்தேச்சுரம் என்றிருந்த சிலாசாதனம் மறைந்துபோயிற்று.)

 

கூற்றுவநாயனார் திருத்தொண்டு

                                   இத்தலத்தை இராசதானியாகக்கொண்டு, புறங்கரம்பை நாட்டையாண்ட, குறுநில மன்னனாகியகூற்றுவனாயனார்சிவ திரு நாமமாகிய ஐந்தெழுத்தின் பலத்தினால்சோழ, சேர, பாண்டியர்களைப் போரில் வென்று, சபாநாயகப்பெருமான் தமது திருவடியை முடியாகச் சூட்டப்பெற்று, சபாநாயகப் பெருமானுடைய திருவுருவத்தைப் பிரபலமாக இத்திருக்கோயிலில் அமைத்து வைத்துத் திருப்பணிசெய்து, சிவபதமெய்தினர்,(கூற்றுவநாயனார் புராணம்,12ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் பெரியபுராணத்துளிருக்கின்றது.)

 

ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக் கோனடியேன்” (திருத்தொண்டத் தொகை)

ஓதந்தழுவிய ஞாலமெல்லா மொரு கோலின் வைத்தான்

கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே”- ( திருத்தொண்டர் திருவந்தாதி)

குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

 

கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு…” என, உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருத்தொண்டர் புராண சாரத்தினுள் கூறுதலும்.

 

விறற் களந்தைக் கூற்றுவனார் ..” என, சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் திருநாமக் கோவையுள்கூறியுள்ளதாலும்

 

கூற்றுவ நாயனார் என்பவர் சோழ வளநாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களப்பாளன் என்னும் திருநாமம் பெற்றவர்.. களந்தையைத் தன்பெயரால் ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவன் என்னும் பெயர் பெற்றார்.

………………………………………………..தொடரும்………………………………..

சனி, 19 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-19.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-19.

முனைவர் இரெ. குமரன்

                         இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது.

 

                              இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.

 

                        சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?

 

                                      இப்பொழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்குக் கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.

…………………………………………….தொடரும்……………………………

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

 களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-18.

  1. முனைவர் இரெ. குமரன்

 

                         அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில் சாமாதிக் கோயிலை பள்ளிப்படைஎன்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின் அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில் உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம்

 

                                 ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம் அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது இந்தக் கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின் பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105 கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும் வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த அடியார்களாக இருக்கவேண்டும். பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர் என்று கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும் இருக்கவேண்டும். தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள் இருநூற்றவர்என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம், வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று அறிகிறோம்.

……………………………..தொடரும்……………………………………………..

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-17.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-17.

முனைவர் இரெ. குமரன்

 

தொல்லியியல்.

இறந்தும் இறந்திலான்

இரா.நாகசாமி, தினமணி- 20-11-87.”

இறந்தும் இறந்திலான் -ஆதித்த சோழன்


     கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி
அதன் அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில் இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர் கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப் பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.

 

                   தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள் பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன் என்பவனை சண்டையில் வீழ்த்தி, தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் தொண்டை நாடு பாவிய சோழன் என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி முடிந்துவிட்டது.

 

                                        ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்குப் பொன் வேய்ந்தான். சோழ சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும் காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு எடுத்தவன்.  அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில் இருக்கின்றன. (களப்பாள் ஆதித்தேச்சுரம் கோயிலும் இவ்வரசன் எழுப்பியதாகலாம்.)  அவன் காலத்துச் சிற்பங்களும் செப்புத்திருமேனிகளும் உன்னதக் கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன் தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.

……………………….தொடரும்………………………………..

புதன், 16 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-16.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-16.

முனைவர் இரெ. குமரன்

களப்பாள் ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.

               பிற்காலச் சோழப்பேரரசு எழுச்சியுடன் தோன்றுவதற்கு வித்திட்ட ஆதித்தசோழனின் வரலாறு, களப்பாள் ஆதித்தேச்சுரம் கோயிலுடன் தொடர்புடையதை அறிதற்குக் கீழ்க்காணும் செய்திகள் துணைபுரிகின்றன.

 

                            ஆதித்த சோழன் (பொ.ஊ. 871–907),

                                      கோப்பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பியபோரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனைக் கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.

 

                  மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது. (விக்கிபீடியா)

…………………………………………தொடரும்……………………………………..

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-15.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-15.

முனைவர் இரெ. குமரன்


அச்சுதக் களப்பாளன்                                              அச்சுதக் களப்பாளன் களப்பிர மன்னர்களுள் ஒருவனாவான். மூவேந்தர்களையும் சிறை வைத்தவனெனக் கருதப்படுபவன் இவனாவான். தமிழ் நாவலர் சரிதை கூறுவது போன்று பாண்டிய நாடு இவனது ஆட்சிக்குக்கீழ் வந்தது. அமிர்தசாகரர், மற்றும் புத்ததத்தர் இருவரும் இவனைப் பற்றிக் கூறியுள்ளனர். புத்ததத்தர் அச்சுதக் களப்பாளன் தமிழகத்தினை ஆண்டதனால் உலகினை ஆட்சி செய்தான் எனப் புகழ்ந்தும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. புத்த சமயப் புலவர்களையும், புத்த மடங்களையும் இவன் ஆதரித்தான்.

                                  மூர்த்தி நாயனார் அச்சுத களப்பாளன் காலத்தில் வாழ்ந்தவரென்பதும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை காலத்துப் பூதமங்கலம் பௌத்தர்களுடையது கி.பி. 660 ஆம் ஆண்டளவில் புத்த மதத்தினர் சம்பந்தருடன் வாதிட்டுத் தோற்றுப் போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'புத்தர் விஹாரம்' களப்பிர மன்னனான அச்சுத களப்பாளனால் செய்யப்பட்டது. யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

                             களப்பாளர் என்பது கள்ளர் குலத்தின் பட்டபெயர்களில் ஒன்றாகும். கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனே அச்சுதக் களப்பாளன். இவன் காலம் கி.பி 2ஆம் நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனது நாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி என்னும் நூலில் இவனது படைகளின் போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. wikipedia [2]

                                 சோழநாட்டில் களப்பாள் என்னும் ஊரிலிருந்து அரசாண்ட மன்னன் அச்சுதக்களப்பாளன் என்றும் களப்பாள அரசன் மற்ற அரசர்களோடு போர்புரிந்து வெற்றி பெற்றான் என்பதை,

 

‘”படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடிவடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம். எனும் தனிப்பாடல் சுட்டுகின்றது.

 

                           கூற்றுவ நாயனார் என்பவர் சோழவள நாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களந்தையைத் தன் பெயரால் களப்பாளை ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவனென்னும் பெயர் பெற்றார்.” என்றும் கூறுவர். (திருக்களர் மு. சுமிநாத உபாத்யாயன்.)

…………………………………..தொடரும்………………………………….