சனி, 19 ஆகஸ்ட், 2023

களப்பாளனாகிய களந்தைக் கூற்றுவன் - களப்பிரர்-19.

 

களப்பாளனாகிய களந்தைக்  கூற்றுவன் - களப்பிரர்-19.

முனைவர் இரெ. குமரன்

                         இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான், கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல் அளந்தனர். இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும் இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம் இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல் கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள் கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல் கொடுக்கப்பட்டது.

 

                              இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும் காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக் கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.

 

                        சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?

 

                                      இப்பொழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும். பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து போனவர்களுக்குக் கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று. விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன் தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர் என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.

…………………………………………….தொடரும்……………………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக