வியாழன், 21 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –357. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –357. .கன்னி முத்தம்....!

……………….17………………

அன்பே உன்னிடம் 

கண்டதும் உண்டதும்

கொண்டதும் கொடுத்ததும்

கணக்கில் வருமோ?

இருட்டில் எழுதிய

இந்தக் கணக்கு

கணக்கில் வாராக்

கள்ளக் கணக்கு …!

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

திங்கள், 18 அக்டோபர், 2021

திருக்குறள் சிறப்புரை- அறிமுகவுரை

 இன்றைய தினமணி நாளிதழில் திருக்குறள் - சிறப்புரை ; அறிமுகவுரை

ஆசிரியருக்கு நன்றி...!

சனி, 16 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –356. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –356. .கன்னி முத்தம்....!

……………….16………………

கண்ணே……

நீயும் பொய்

நானும் பொய்

நித்திய வாழ்வை

அநித்தியம் எனச்

சொன்னதும் பொய்!

நீயும் உண்மை

நானும் உண்மை

இணைந்தே இருப்பது

இறைவனுக்கும் பெருமை.

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

செவ்வாய், 12 அக்டோபர், 2021

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –355. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –355. .கன்னி முத்தம்....!

……………….15………………

பருவம் தரும்

பள்ளிப் பாடங்கள்

சொல்லி வருவதில்லை

சொல்லி முடிவதில்லை

என்னென்ன சுகங்கள்

எங்கெங்கே எங்கெங்கே

தேர்வுகள் தினமும்

நடக்கட்டும் சொர்க்கத்தில்...!

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

வியாழன், 7 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

……………….14………………

காதலர் கணக்கில்

ஒன்றும் ஒன்றும்

இரண்டல்ல

ஒன்றினார் வாழ்க்கை

“ஒன்றே”.

---களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

செவ்வாய், 5 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –354. .கன்னி முத்தம்....!

……………….14………………

பூந்துகில் பூமாலை

சந்தனம் புனுகு

நன்னாரி கத்தூரி

மல்லிகை முல்லை

பைந்தினை செந்தினை

செந்நெல் வெண்ணெல்

கன்னல் சுவையென

பொன்னார் மேனியில்

பொதிந்த இரு கனிகள்

மென்மையும் குளிர்ச்சியும்

மணமும் மதுவும்

நிறைந்து பொலிந்த –நீ

ஊடினாலும்

கூடினாற்போன்ற இன்பமே…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

திங்கள், 4 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –353. .கன்னி முத்தம்....!

தன்னேரிலாத தமிழ் –353. .கன்னி முத்தம்....!

……………….13………………

அண்டவெளியில் நான்

ஆட்சி செய்தேன்

சூரியனும் சந்திரனும்

சொன்னபடி கேட்டார்கள்

தேவரும் அசுரரும்

காவல்,ஏவல் செய்தனர்

ஊர்வசியும் ரம்பையும்

 ஓடி ஒளிந்தனர்

கண்ணே…!

ஓலைக் குடிசைக்குள்

உன்னோடு இருந்தபோது..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  -

சனி, 2 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –352. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –352. .கன்னி முத்தம்....!

……………….12………………

பொன் வேண்டாம்

பொருள் வேண்டாம்

ஆண்டவன் அருள் வேண்டாம்

படியளக்கும் பரமனின்

பாதமும் வேண்டாம்

வேண்டும்…வேண்டும்1

காலமெல்லாம் களித்திருக்க

காதலி நீ வேண்டும்

நினைத்து மகிழ

நீ வேண்டும்

இணைந்து மகிழ

ஆயிரம் இரவுகள் வேண்டும்!

அத்தனை இரவுகளும்

விடியாமல் இருக்க வேண்டும்…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

வெள்ளி, 1 அக்டோபர், 2021

தன்னேரிலாத தமிழ் –351.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –351.. .கன்னி முத்தம்....!

……………….11………………

உடம்பை உருக்கி

உயிரைச் சுருக்கி

ஊசிமுனையில்

ஒற்றை விரலில்

நின்று தவம் செய்வேன்

என்றும் உனக்காக

கண்ணே…!

கன்னி முத்தம்

தந்தருள்வாய்!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

வியாழன், 30 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –350.. .கன்னி முத்தம்....

 தன்னேரிலாத தமிழ் –350.. .கன்னி முத்தம்....!

……………….10………………

எண்ணக் கனவுகளில்

வண்ண நிலவாய்

வந்து போனவளே

இன்னமுதும் நீயே

இந்திரர் அமிழ்தமும் நீயே

உன்னைக்

கண்டவர்க்கு

உறக்கமேது?

உண்டவர்க்கு

இறப்பேது..?

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

புதன், 29 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –349.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –349.. .கன்னி முத்தம்....!

……………….9………………

கண்ணே…..

ஒளிவீசும் உன்மேனி

ஞாயிறு

குளிர்தரும் உன்முகம்

திங்கள்

ஒட்டி உறவாடி

உவந்த போது

தேனாய் இனித்தது

செவ்வாய்

புதனும் வியாழனும்

வெள்ளியும் சனியும்

செவ்வாய்த் தேன் போலவே.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –348.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –348.. .கன்னி முத்தம்....!

……………….8………………

கண்ணே….

காத்திருக்க நேரமில்லை

கண்ணைத் திற

உன்னுள்

 என்னைக் காணவேண்டும்.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

திங்கள், 27 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –347.. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –347.. .கன்னி முத்தம்....!

……………….7………………

இளமைக் கனவே

இன்ப ஊற்றே

பராசக்தியே..

உன்னைப்

பாரா சக்தி

எவருக்கேனும் உண்டோ…?

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995  

சனி, 25 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –346. .கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –346. .கன்னி முத்தம்....!

……………….6………………

முனிவர்களே…!

முற்றும் துறந்து

முடிவில் எதைக் கண்டீர்?

கற்றுத் தேருங்கள்

காதல் பாடங்களை

இன்ப வடிவாய்

இறைவன் இருப்பதை அறிவீர்..!

காமத்தை வெல்லுதல்

கடவுளுக்கும் எளிதன்று.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995 

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –345. .கன்னி முத்தம்....!

தன்னேரிலாத தமிழ் –345. .கன்னி முத்தம்....!

……………….5………………

காமத் தீ

காட்டுத் தீயாகி

என்னைச் சுட்டெரித்த போது….

கொட்டும் அருவியில்

குளித்தது போலாயிற்று

ஒரு

மொட்டு மலர்ந்து

முத்தமிட்ட போது…!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

வியாழன், 23 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –344. .கன்னி முத்தம்....!

தன்னேரிலாத தமிழ் –344. .கன்னி முத்தம்....!

……………….4………………

கட்டுண்டோம்

களித்திருப்போம்

காலை வரும் வரை….!

புலர்ந்தது பொழுதென்று

புலம்பிட வேண்டாம்

மாலை வரும் வரை

மயக்கத்தில் இருப்போம்.

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995

புதன், 22 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –343.கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –343.கன்னி முத்தம்....!

……………….3………………

பகலில் நிலவாய்

பார்த்ததினால்

இரவில் சூரியனாய்

எரிகின்றாய்..!

கொதிக்கும் என் உடல் மீது

கொட்டு உன்

முத்த மழையைக்

குளிர்ந்திட குளிர்ந்திடக்

கொட்டிட வேண்டும்

என்றும் அந்த

ஈரம் காயாமல்

இருந்திட வேண்டும்..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.-----

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2................

அல்குல் கண் தோள்

என மூன்றும் பெருத்து

நுதல் அடி நுசுப்பு

என மூன்றும் சிறுத்து

இன்னிசை யாழின்

செவ்வழிப் பண்ணேயன்ன

பெண்ணே….!

காரிருள் விளக்கு போல்

கண்கள் ஒளி விச

காமக் குறிப்பின்

கலங்கரை விளக்கமாய்

மேகலையும் சிலம்பும்

மெல்லவே புலம்ப

அன்னமேநீ

அடியெடுத்து வாராய்..!

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

திங்கள், 20 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

 தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2.................

மாணிக்கத் தூண் தாங்கும்

மரகதமணி மண்டபத்து!

முற்றம் முழுதும்

தூமலர் தூவி

மாவிலைத் தோரணம்

மஞ்சள் குங்குமம் பொலிய

மங்கல மங்கையர் கூடி

இலவங்கம் பச்சிலை

நாகணம் கொட்டம்

நன்னாரி  கத்தூரி

இலாமிச்சம்

குவளை மல்லிகை

மனோரஞ்சிதம் முல்லை

சண்பகம் மகிழம் மணக்கும்

சந்தன நறுநீராட்டி….

கத்தூரி எண்ணெய்

கற்பூரம் புனுகுபூசி

அகிற்புகை இட்டு

ஐம்பால் கூந்தல் அழகுற

சுருண்முறை வகுத்துக்

கருங்குழல் கட்டி

நறுமலர் சூட்டித்

திருநுதல் சுட்டித்

திகழச் சூட்டி

மலரும் மணியும்

முத்தும் பவழமும்

பொனணி பலவும்

மின்னும் மேனியில்

ஒளி மங்க….

பால் நுரை போலும்

பட்டுடை வருத்த

மங்கல ஒலியால்

மன்றம் நிறைய

பொன் தவிசு அமர்ந்த

பொற்பூ மணக்க..!...................தொடரும்…………..

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!

................2.................

பூவே நீ

பூத்தது இன்று தானோ..?

உருவும் திருவும் நிறைந்த

பருவமே வருக..!

பசுஞ்சோலையே வருக

பைந்தமிழே வருக

சூரியன் ஒளி புகா சோலையுள்

வெள்ளிய நீரருவி

விளங்கிடும்

பளிங்கு நீரோடை!

வாழை மா பலா

புன்னை தென்னை சூழ

தென்றல் தழுவ..

தேனடை சிதற..

மந்திகள் உண்டு

மயக்கத்திலிருக்க

மயில் அகவ..

குயில் கூவ

அன்னம் அசைய

மழலை வண்டினம்

நல்யாழ் இசைக்க

வண்ண மலர்

வாச மலர்

பூத்துக் குலுங்கும்

தண்பொழில் நடுவே….!

இலங்கை வேந்தனின்

எழில் மாடம் இயற்றிய

தேவதச்சன் விருப்போடு புனைந்த

தங்கத் தகடு வேய்ந்த ………………தொடரும்……

-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995. .