தன்னேரிலாத தமிழ் –370 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.
81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
உற்றார் உறவினர், மனைவி, மக்களோடு, இல்லறத்தை நல்லறமாக நடத்தி, மனநிறைவோடு வாழ்வதன் நோக்கமே வீட்டிற்கு வரும் விருந்தினர்களைப் போற்றிப் பாதுகாத்தல் பொருட்டே ! நல்ல விருந்தினர்களைப் பெறத் தவறியவன் பொருள்களைப் பாதுகாக்கும் பூதமேயன்றி நல்ல இல்லறத்தான் ஆகான் என்பதாம்..
“ நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்….” புறநானூறு., 316.
நேற்று தன்னை நாடிவந்த விருந்தினர்களைப் பேணுவதற்காகத் தன்னுடைய பழைய வாளை ஈடாக வைத்தான் ; இன்று வந்துள்ள விருந்தினரைப் பேணுவதற்குச் சிறிய யாழினைப் பணையம் வைத்துள்ளான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக