தன்னேரிலாத தமிழ் –384 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.
221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
இயலாதவர்க்கும் இல்லாதவர்க்கும் ஒன்று ஈவதே ஈகை ; ஏனைய ஈகை
எனப்படுவதெல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்யப்படும் ஈகையாகும்.
புகழ் கருதியோ, பெருமை கருதியோ, பதவி கருதியோ, இன்னபிற பயன்
கருதியோ கொடுப்பதெல்லாம் ஈகையன்று ; கையூட்டு.
உழைத்த பொருளைக் கொண்டு உதவி செய்தலே ஈகை.
”இலம்படு புலவர் ஏற்ற கைந்நிறையக்
கலம்பெயக் கவிழ்ந்த கழல்தொடித் தடக் கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி.” --- மலைபடுகடாம், 576 – 578.
நன்னனே..! இல்லாமையால் வருந்தும்
புலவர்தம் ஏந்தும் கைகள் நிறையும்படியாக, கழல் அணிந்த நின் கைகள் கவிழ்ந்து கொடுக்கும் பெருஞ் செல்வம், கெடுதல் இல்லாது, வற்றாமல் வளம் கொழிக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக