ஞாயிறு, 31 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1179


திருக்குறள் -சிறப்புரை :1179

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.----- ௧௧௭௯

காதலர் வரவை எதிர் நோக்கிக் கண்கள் துயிலாது காத்துக்கிடக்கின்றன ; அவர் வந்தபின்போ, பிரிந்து சென்றுவிடுவாரோ என்று அஞ்சியும் துயிலாது இருக்கின்றன. ஆக இருவழியிலும் கண்கள் தூக்கத்தைத் தொலைத்துத் துன்பத்தில் உழல்கின்றன.

“…………………………….. இவள்
 பூப் போல் உண்கண் புதுநலம் சிதைய
வீங்குநீர் வாரக் கண்டும்
தகுமோ பெரும தவிர்க நும் செலவே,” -----நற்றிணை

பெருமானே..! இத்தலைவியின் நீல மலர்போன்ற மையுண்ட கண்களின் புதுமை மாறாத, அழகு கெடும்படியாக, அவள் கண்களிலிருந்து நீர் வடியக்கண்டாய் அவ்வாறு கண்டும் நீ சுர வழியில் செல்வது தகுமா,,? தவிர்க நின் பிரிவை..!

வெள்ளி, 29 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1178


திருக்குறள் -சிறப்புரை :1178

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.----- ௧௧௭௮

காதலர் மனத்தால் விருப்பம் கொள்ளாமல்  உதட்டளவில் சொல்லால் மட்டுமே நம்மை விரும்பியவராக இவ்விடத்தே உள்ளார்; அப்படியிருந்தும் அவரைக் காணாது கண்கள் துயில மறுக்கின்றனவே.

துனிநீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
 இன்னாது அன்றே அவர் இல் ஊரே.” ---நற்றிணை.

தலைவர் ஊடலைத்தீர்த்துக் கூடி  இன்புற என்னிடன் வாரார் . ஆயினும் முன்பு, பலமுறை அவர் மேனியை நோக்கி மகிழ்ந்துள்ளேன். அவ்வாறு அவருடைய அழகைக்கண்டு  உயிருடன் வாழ்தல் இனியதாகும்.  இப்பொழுது அங்ஙனம் காண்கிலேனே ; கண்ணில் விழும் நுண்ணிய துகளையும் கை விலக்குவதைப்போல, நாம் கொண்ட துன்பத்தைத் தலைவர் நீக்காமல் போயினும் அவர் இல்லாத ஊர் துன்பத்தைச் செய்யும் ; இவ்வூரால் நேரும் பயன் என்ன..? ஏதுமில்லையே..!

வியாழன், 28 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1177


திருக்குறள் -சிறப்புரை :1177

உழந்துழந்து ண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண். ----- ௧௧௭௭

அன்று விருப்பத்துடன் உளம் நெகிழ்ந்து, இடைவிடாது அவரைக் கண்ட கண்கள், இன்று  துயிலாது வருந்தி வருந்தி ; அழ  அழ,வீழும் கண்ணீர் அற்றுப்போகட்டும்.

கோடு உயர் பல்மலை இறந்தனர் ஆயினும்
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடைத்தெழு வெள்ளம் ஆகிய கண்ணே.” –ஐங்குறுநூறு.

தோழி..!  நம் காதலர் கோடு உயர்ந்த பல மலைகளையும் கடந்து பொருளீட்டச் சென்றாராயினும் அவர் விரைந்து வருகுவர். நீ அவரையே எப்பொழுதும் நினைத்தலால், நீ, துடைக்க துடைக்க நில்லாது, அடைக்குந்தொறும் அணையை உடைத்துக்கொண்டு பெருவெள்ளம் போலப் பெருகும் நின் கண்ணீர் அவரை மேலும் அவர் சென்ற நாட்டில் தங்கவிடுமோ..?

புதன், 27 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1176


திருக்குறள் -சிறப்புரை :1176

ஓஓ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. ---- ௧௧௭௬

 இக்காமமாகிய நோயைத்தந்த கண்கள், தாமும் துயிலாது துன்பத்தைத் துய்ப்பது, எமக்கு இனிதாக இருக்கின்றது.

முனிபடர் உழந்த பாடுஇல் உண்கண்
பனிகால் போழ்ந்து பணைஎழில் ஞெகிழ்தோள்
மெல்ல்லிய ஆகலின் மேவரத் திரண்டு
நல்ல என்னும் சொல்லை மன்னிய.” ----குறுந்தொகை.

மலைநாட்டின் தலைவன், நின்னைத் தழுவுவதற்கு முன்பு, பருத்து எழுச்சியுடையவாய் விளங்கிய நின்னுடைய தோள்கள், தன்னையே வெறுத்துக்கொள்ளும் அளவு துன்பத்தால் வருந்திய துயிலுதல் இல்லாத மையுண்ட கண்களில் வீழும் நீர்த்துளி, வாய்க்காலாய்க் கீறி ஒழுக, மென்மையுடையை யாதலால் நெகிழ்ந்தன.  இன்று அவை முன்பு பெண்பாலாகிய யானும் விரும்பும் வன்ணம் திரட்சியுற்று, நல்லன என்னும் பாராட்டுரையை நிலையாகப் பெற்றன என்றனள் தோழி.

செவ்வாய், 26 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1175


திருக்குறள் -சிறப்புரை :1175

 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.------ ௧௧௭௫

கடலே சிறிதெனச் சொல்லும்படியான பெரியதாய காமநோயை , எனக்குத் தந்த கண்கள், இன்று துயிலாது துன்பத்தில் உழல்கின்றன.

கண் தர வந்த காம ஒள் எரி
என்புஉற நலியினும் அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பைக் கோழி தனிப்போர் போல
களைவோர் இலை யான் உற்ற நோயே.” ---குறுந்தொகை.

கண் என்னும் பொறியினால் தரப்பட்ட, காமமாகிய ஒள்ளிய தீ என் உள்ளத்தளவில் நில்லாது,எலும்புவரை அகத்தேசென்று நலிவதாயினும் அவரை விரும்பிக் குறியிடத்திற்குச் சென்று, அவரோடு ஒன்றித் தழுவுவதற்கு அரிய நிலையில், அவரைக் காண்பதற்கும் அரியதாயிற்று. வரைவுடன்வந்து, நம்முடைய வருத்தத்தை நீக்குதலை அவரும் செய்திலர். வெற்றி, தோல்விகளுக்கிடையே விரைந்து வரைந்து கொள்ளுதலும் செய்திலர். குப்பையில் மேயும் கோழிகள், தாமே தனிமையில் நிகழ்த்தும் போரினைப் போல, அதுவாக முடியும் காலத்தில் முடியுமேயன்றி, யான் உற்ற நோயைக் களைவாரில்லையே.  

திங்கள், 25 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1174


திருக்குறள் -சிறப்புரை :1174

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து,----- ௧௧௭௪

என் கண்கள், காதலர் பிரிவினைத் தாங்கும் வலிமையினைத் தர இயலாது, உய்தல் இல்லாத நோயைத் தந்து, அழுது, அழுது மேலும் அழமுடியா வண்ணம் நீர் வற்றிவிடச் செய்து விட்டனவே.

எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தார் மெய்ம் மணம் கமழும் தண்பொழில்
வேழ வெண்பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி உகுமே.” -----ஐங்குறுநூறு

மணல் திட்டின்கண் நிற்கும் மாமரத்தின் புதிய மலர்களைக் கொண்ட பெரிய கிளை, திருமணத்திற்கூடிய பெண்களின் உடல்கள் மணப்பதுபோல் நறுமணம் கமழும் குளிர்ந்த பொழிலில் நாணலின் வெண்ணிறம் உடைய பூக்களின் பஞ்சுபோன்ற முனை அம் மாமரத்தின் அரும்புகளை துடைக்கின்ற ஊரினை உடையவன் தலைவன், என் கண்கள் அவன் கொடுமை கண்டு கலங்கி, மாரிக்காலத்தில் மழையில் நனைந்த மலர் போல் கண்ணீர் உகுக்கின்றன.

ஞாயிறு, 24 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1173


திருக்குறள் -சிறப்புரை :1173

கதுமெனத் தாம்நோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.---- ௧௧௭௩

 அன்று,  என்கண்கள் என்னையறியாது தாமே முன்சென்று காதலரைக் கண்டு மகிழ, இன்று,  பிரிந்துசென்ற  அவரைக் காணாது கண்ணீரைச் சிந்துகின்றன, இது மிகவும் நகைப்பிற்குரியதே..!

நனி மிகப் பசந்து தோளும் சாஅய்
பனி மலி கண்ணும் பண்டு போலா
இன்னுயிர் அன்ன பிரிவு அருங் காதலர்
நீத்து நீடினர் என்னும் புலவி
உட்கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை.” ----நற்றிணை.

பசலை மிகப்பெற்ற தோளும் வாட்டமுற்று நீர் வடிக்கும் கண்களும் பழைய அழகு கெட்டு வேறுபட்டன. இவ்வாறு வேறுபடுமாறு இனிய உயிர் போன்றவரு பிரிவதற்கரியவருமான காதலர் என்னைக் கைவிட்டு நெடுந்தூரம் சென்றவராய் விட்டுப்பிரிந்தனர் என்று கூறிச் சினத்தல் நீ உன் உள்ளத்தில் கொண்டு ஊடுதலைச் செய்யவில்லையே..!

சனி, 23 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1172


திருக்குறள் -சிறப்புரை :1172

தெரிந்துணரா நோக்க உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன். ----- ௧௧௭௨

எதனையும் ஆராய்ந்தறியாது, அன்று காதலரை எதிநின்று நோக்கி நின்ற மையுண்ட கண்கள் தலைவனிடம் தம்மை இழந்து, இன்று  நாமே விரும்பித்  தேடிக்கொண்ட உறவுதானே என்று உய்த்துணராது , துன்பத்தில் உழல்வது எது கருதியோ..?

மலர் ஏர் உண்கண் மாண்நலம் தொலைய
வளை ஏர் மெந்தோள் நெகிழ்ந்ததன் தலையும்
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்ட ஓர் சிறு நல் நட்பே.” -----குறுந்தொகை.

தோழி..! தன்னியல்பினை முற்றிலும் அறிந்து கொள்வதற்குப் பொருந்தாத தலைவனொடு யாம் ஏற்படுத்திக்கொண்ட சிறிய நல்ல நட்பானது, குவளை மலர் போன்ற அழகிய மையுண்ட  கண்களின் மாட்சிமைப்பட்ட தன்மை அழிய, வளையணிந்த அழகிய மெல்லிய தோள்களில் அவ்வளைகள் கழலுமாறு நெகிழ்ந்தமைக்கு மேலும் மாற்றாக அமைந்தது, அது குறித்து நீ ஆற்றினாயல்லை.

வெள்ளி, 22 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1171


திருக்குறள் -சிறப்புரை :1171

118. கண்விதுப்பழிதல்

கண் தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. ---- ௧௧௭௧

 தணியாத இக்காம நோயை எமக்கு அளித்தது இக்கண்கள் காதலரைக் காட்டியதாலன்றோ ; அப்படிச் செய்த கண்கள் இன்று அவரைக் காட்டு என்று சொல்லி அழுவது எது கருதியோ.?

யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன தோழி
……………………………………
குன்ற நாடன் கண்ட எம் கண்ணே.” ----குறுந்தொகை.

தோழி..! அவரால் காம இன்பம் துய்த்த யாம், அவர் பிரிவினால் உண்டாகிய காமநோயைப் பொறுத்துக்கொண்ட போதிலும் குன்றுகளை உடைய நாட்டின் அத்தலைவரைக் கண்ட எம் கண்கள், தமக்கு எம்பாலுள்ள மிக்க உரிமையினால் அழுதன…!

வியாழன், 21 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1170


திருக்குறள் -சிறப்புரை :1170

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.------ ௧௧ ௭0

பிரிந்துசென்ற காதலர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து சென்றடையும்  என் மனம் போல, என் கண்கள் விரைந்துசென்று கண்டு மகிழுமாயின் கண்கள் இங்ஙனம் சிந்தும் வெள்ள நீரினை நீந்திக் கடக்கவும்  வேண்டுமோ..?

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்தன்றோ வருத்தி
வான் தோய்வற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.”குறுந்தொகை

காதலரை நினைத்தால், அவர் பிரிவு என்னும் தீயினால், நினைக்கின்ற என்மனம் வேகா நிற்கும், அவரை நினையாமல் உயிர் வைத்திருந்தால் எம்முடைய ஆற்றலுக்கு உட்பட்டதன்று.
காமநோய் எம்மைச் சாகும்படி வருந்தச் செய்து, வானத்திலும் தோய்வது போன்ற பெருக்கத்தை உடையது. யாம் உள்ளம் பொருந்தியவர் நம்மை அருளாமையால் சால்புடையர் அல்லர்.

புதன், 20 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1169


திருக்குறள் -சிறப்புரை :1169

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா. ---- ௧௧௬௯

காதலரோடு  மகிழ்ந்திருந்த இரவுப் பொழுது மிகவும் குறுகியதாய் இருந்தது.  பிரிந்துசென்று கொடுமை செய்யும் காதலரைவிடக் கொடுமை செய்வதாக இரவுகள் உள்ளன. இப்பொழுதெல்லாம் இரவுக்காலம் நெடியதாய் நீண்டு கழிந்து போகிறது. 

இன் துணை நீ நீப்ப இரவினுள் துணையாகி
தன் துணை பிரிந்து அயாஅம் தனிக்குருகு உசாவுமே
ஒண்சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு.” ---கலித்தொகை.

இனிய துணையாகிய நீ, இவளைவிட்டு நீங்கினை ; ஒளி பொருந்திய கதிர்களை உடைய ஞாயிற்றினது மிக்க ஒளியான் தன் ஒளி கெடுகின்ற உச்சிக்காலத்து மதிபோல் ஒளிநலம் அழிந்த முகத்தினை உடையாளுக்குத் தன் துணையைப் பிரிந்து வாழும் தனிக்குருகு நாரைபேடுதான் இரவினுள் இவளுக்கு உற்ற துணையாகி, இவள் நிலைபற்றிக் கேட்கும்.