திங்கள், 11 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1160


திருக்குறள் -சிறப்புரை :1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர். ----- ௧௧௬0

தாங்குதற்கரிய தலைவனின் பிரிவுக்கு உடன்பட்டு, அதனால் விளையும்  துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு, பிரிந்திருக்கும் காலத்தையும் தனித்திருந்து ஆற்றிப் பின்னும் உயிர் வாழும்  மகளிர், உலகத்துப் பலர்.
வீங்கிழை நெகிழ விம்மி ஈங்கே
எறிகண் பேதுறல் ஆஉகோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின்படர் சேண்நீங்க
வருவேம் என்ற பருவம் உதுக்காண்
தனியோர் இரங்கும் பனிகூர் மாலை…” ---குறுந்தொகை

செறிந்து விளங்கிய அணிகலன்கள் நெகிழ்ந்து உழலுமாறு, அழுது நீர்த்துளிகளை வெளிப்படுத்தும் கண்களோடு ஈங்கு மயங்கற்க, ஆராய்தற்குக் காரணமாகக் கோடுகளைச் சுவரில் இட்டு, அதனைப் பற்றி நின்று கொண்டிருக்கும் உன்னுடைய துன்பம் நெடுந்தூரம் விலகிச் செல்லுமாறு யாம் வருதும் என்று தலைவன் தெளிவித்த கார்ப்பருவ வருகையை இதோ காண்பாயாக, காதலரைப் பிரிந்து தனிமையுற்றோர் வருந்துதற்குக் காரணமாய் உடனிருப்போர்க்கு நடுக்கம் தருவதாய மாலைபொழுது…. அவர் வருவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக