ஞாயிறு, 17 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1166


திருக்குறள் -சிறப்புரை :1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. ----- ௧௧௬௬

கூடிக்களிக்கும்  காம இன்பம் கடல்போல் பெரிதாயிருக்க , அந்நிலையில் பிரிவால் விளையும் துன்பமோ கடலைவிட மிகப் பெரிதாம்.

வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அஃது அறிந்திசினோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.” ----குறுந்தொகை.

மூங்கிலை வேலியாக உடைய, வேரில் பழக்குலைகளை உடைய பலா மரங்கள் செறிந்த மலை நாடனே..!  நின் நாட்டுப் பக்க மலையில் வளர்ந்துள்ள பலாவின் சிறிய கொம்பில், பெரிய பழம் தன்னைத் தாங்கும் எவ்வகைப் பற்றுக்கோடுமின்றித் தானே பழுத்துத் தொங்குவதுபோல, இத்தலைவியின் உயிராகிய கொம்பு மிகவும் சிறியதாய் உள்ளது, அதன்கண் விளங்கும் காமநோய் என்னும் பழமோ மிகவும் பெரியதாய் உள்ளது, அந்நிலையை அறிந்தவர் உன்னையன்றி வேறு யாவர் உளர்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக