வியாழன், 31 ஜனவரி, 2019


திருக்குறள் -சிறப்புரை :1123

கருமணியிற் பாவாய்நீ போதாய் யாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். ----- ௧௧ ௨௩

என் கண்ணின் கருமணியில் உறைந்திருக்கும் பாவையே…! நீ அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடு ;யாம் விரும்பும் அழகிய நெற்றியை உடைய  எம் காதலி  இருக்க வேறு இடமில்லை.

துறைநணி யிருந்த பாக்கமும் முறைநனி
இனிதுமன் அளிதோ தானே துனிதீர்ந்து
அகன்ற அல்குல் ஐதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகள்
மானமர் நோக்கங் காணா ஊங்கே.” -----நற்றிணை.

அகன்ற அல்குலையும் மெல்லியதாய் அமைந்த இடையையும் உடைய மீன்பிடிக்கின்ற பரதவரின் இளமகளின், மான்போலும் ஒன்றோடொன்று தொழிலின் மாறுபட்ட பார்வையைக் காணப் பெறாதமுன்…..  துறைக்கு அணித்தாயிருந்த பாக்கம் மிகவும் இனிமை உடையதாயிருந்தது ;  ஆனால் இன்று, பரதவர் மகளின் நோக்கம் காணப்பெற்றமையால் , பாக்கம் அழகிழந்ததாயிற்று.

புதன், 30 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1122


திருக்குறள் -சிறப்புரை :1122

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. ----- ௧௧ ௨.

இம்மடந்தையொடு  எனக்கு உண்டான காதலானது, உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு எத்தன்மை உடையதோ அத்தன்மையினை உடையதாகும்.

உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவு அரியோளே.” –அகநானூறு.

நெஞ்சே…! உடலோடு உயிர் ஒன்றினால் போன்ற நட்பினையும் அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் காதலையும் உடைய தலவிக்குச் சாதல் போலும் துன்பத்தைத் தருமே, பிரிவு.

செவ்வாய், 29 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1121


திருக்குறள் -சிறப்புரை :1121

113. காதல் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். -------- ௧௧ ௨௧

மென்மையான  இனிய மொழிபேசும் இவளுடைய வெண்மையான பற்களில் ஊறிய நீரானது பாலொடு தேன்கலந்த சுவையினைப் போன்றதாகும்.

கிளி புரை கிளவியாய்…’
ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்
ஆறு நீர் இல என அறன் நோக்கிக் கூறுவீர்
யாறு நீர் கழிந்தன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான்…..” ----கலித்தொகை.

கிளியின் பேச்சினைப் போலப் பேசும் மொழியினை உடையாய்…..!
இதழ்க்கடையிலே அமிழ்தத்தைப் போன்ற வாயூறல் ஊறும் பல் வரிசையினை உடையாய்; சுரத்திடைச் செல்லும்போது. நீர் உண்ணலை நீ விரும்பிக் கேட்பின், வழியிடை நீர் இல்லை என்று அறத்தைக் கூறினீர் ; ஆறு நீர் கழிந்தால் போன்று இளமை கழிந்து போகும் தன்மை உடையது ; நும்முடைய நெஞ்சம் என்கின்ற தெளிந்த நீரைப் பெற்றிருப்பவள் யான்.

திங்கள், 28 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1120


திருக்குறள் -சிறப்புரை :1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம் ----- ௧௧ ௨0

மிகவும் மென்மைத் தன்மை உடைய அனிச்சமலர் இதழும் அன்னப் பறவையின் சிறகும் மண்மகள் அறிந்திலாத இவளின் வண்ணச் சீரடிகளுக்கு, நெருஞ்சிப் பழத்தின் மேலுள்ள முள், தைப்பதைப் போன்துன்பத்தைத்  தரும்.

இம்மென் பேரலர் நும்மூர் புன்னை
வீமலர் உதிர்ந்த தேனாறு புலவின்
கானல் ஆர்மணல் மரீஇக்
கல்லுறச் சிவந்த நின் மெல்லடி உயற்கே. “ -----நற்றிணை.

மெல்லிய பெரிய அலர் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக உதிர்ந்த்தினாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின் மிக்க மணலிடத்தே நடந்து, இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாது இருத்தற் பொருட்டு…. ஆலின் நிழலில் தங்கிச் செல்வாயாக.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1119


திருக்குறள் -சிறப்புரை :1119

மலரன்ன  கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. ------ ௧௧௧

மதியே..! அழகிய மலர்போலும் கண்களையுடைய என் காதலியின் முகத்தை ஒத்திருப்பாயானால், நான் மட்டும் காணுமாறு தோன்றுவாயாக ; பலரும் காணுமாறு தோன்றாதிருப்பாயாக…!

வாளரம் பொருத கோண் ஏர் எல்வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மடநோக்கே.” ---நற்றிணை

கைவல் வினைஞன் வாள் அரத்தால் அராவிய வளைந்த அழகிய ஒளியை உடைய வளை அணிந்த முன்கையினையும் ஒளி பொருந்திய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும்  இளமை அழகுடைய எமது காதலியின் குவளை மலர் போன்ற மையுண்ட கண்களின் இளம் பார்வை, இவள்பால்  எம்மை ஈர்க்கிறதே.

சனி, 26 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1118


 திருக்குறள் -சிறப்புரை :1118

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி. ----- ௧௧௧

நிலவே நீ வாழ்வாயாக…! மாதர் முகம்போல் நீயும்  ஒளிவிட்டு மகிழ்ச்சியைத் தருவாயானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்..!

அணிமுகம் மதி ஏய்ப்ப அம்மதியை நனி ஏய்க்கும்
மணிமுகம் மாமழை நின்பின் ஒப்ப பின்னின் கண்
விரிநுண் நூல் சுற்றிய ஈரிதழ் அலரி
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீந்தகை ஒப்ப
அரும்படர் கண்டாரைச் செய்து ஆங்கு இயலும்
விரிந்து ஒளி கூந்தலாய்…… “ -----கலித்தொகை.

நினது அழகிய முகம் மதியை ஒத்துள்ளது; மணிகள் விளங்கும் நின் பின்னின கூந்தல், அம்முகத்துக்கு ஒப்பாகிய மதியை மிகவும் பொருந்தும் கருமையாகிய மழையை ஒத்திருக்க ;  கூந்தலிடத்தே நீ சூடியிருக்கும் பூவோ. நுண்ணிய நூலால் கட்டப்பட்டுத் தேனால் ஈரமான இதழைக் கொண்டிருக்க ; கரும் பாம்பிடத்தே கிடந்து அதன் கரிய நிறத்தோடு மாறுபடுகின்ற ஆரல் மீனினதுஅழகை ஒப்ப,  பின்னிய கூந்தலிலே கட்டிய பூ திகழ ;  கண்டவர்க்கு வருத்தத்தைச் செய்து போகின்ற பரந்து, தழைத்த கூந்தலை உடையாய்…!

வெள்ளி, 25 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1117


திருக்குறள் -சிறப்புரை :1117

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. ------ ௧௧௧

நிலவானது தேய்ந்தும் பின்னர் நிறைந்தும் ஒளிவிடும் காலத்து மறுவுடன் தோன்றுவதைப்போல , இப்பெண்ணின் முகத்தில் களங்கம்  (மறு) உண்டோ…? இல்லையே…!

ஐ வாய் அரவின் இடைப்பட்டு நைவாரா
மையில் மதியின் விளங்கு முகத்தாரை
வெளவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று.” ---கலித்தொகை.

ஐந்து வாயினை உடைய பாம்பினது பார்வையிலே அகப்பட்டு வருத்தம் வந்து என்ன செய்வது என்று அறியாது நின்றேன் ; இனி யாது  செய்வேன் என நெஞ்சொடு சினந்து நின்றனன் ; மாசற்ற முழு மதிபோல விளங்கும் முகத்தினை உடைய மகளிரை வலிதிற் பற்றிப் புணர்தலும் அறத்தொடுபட்டது என மணநூல் கண்டது எனத் துணிந்து கூறினன்.

வியாழன், 24 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1116


திருக்குறள் -சிறப்புரை :1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன். ------ ௧௧௧

விண்மீன்கள், நிலவுக்கும் நிலவைப்போல் ளிவிடும் என் காதலியின் முகத்திற்கும் வேறுபாடு அறியாது கலங்கித் திரிகின்றன.

நுதலும் முகனும் தோளும் கண்ணும்
இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ
ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று
மைதீர்ந்தன்று மதியும் அன்று.” ----கலித்தொகை.

தலைவன் என் அருகே வந்து, நுதலையும் முகத்தையும் தோளையும் கண்ணையும் சாயலையும் சொல்லையும் நோக்கி….. நின் நுதல் கண்டார் வியக்குமாறு தேய்ந்தது ஆயினும் பிறையும் அன்று ; நின் முகம் மறுவற்றுலது ஆயினும் மதியும் அன்று என்று மேலும் பலவாறு பாராட்டிக் கூறினான்.

புதன், 23 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1115


திருக்குறள் -சிறப்புரை :1115

அனிச்சப்பூக்  கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை. --- ௧௧௧

மிகவும் மென்மையான அனிச்சப்பூக்களின் காம்புகளை நீக்காமல், இவள் தலையில் சூடிக்கொள்வாளானால், அவளின் மெல்லிய இடை தாங்காது ;  அதனால் நல்ல பறைகள்  ஒலிக்கா…!
( சாப்பறைதான் ஒலிக்கும்,)

இகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
நுதல் அடி நுசப்பு என மூவழிச் சிறுகி
கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு.” ---கலித்தொகை.

இகலிடத்தே வேந்தனின் சேனை, உயிரோடு போம்படி படை தொடுமாறு போல, அகன்ற அல்குல், தோள், கண் என மூன்றிடமும்  பெருத்து ; நெற்றி, அடி, இடை, என மூன்றிடமும்  சிறுத்து , மன்மதனும் தனக்குத் தொழில் இல்லை எனக் கவலையால் தன் படைக்கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு வந்தனளே…!

செவ்வாய், 22 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1114


திருக்குறள் -சிறப்புரை :1114

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று. ---- ௧௧௧

குவளை மலர்களுக்குப் பார்க்கும் திறன் இருக்குமேயானால், சிறந்த அணிகலன் அணிந்த இவளின் கண்களுக்குத் தாம் இணையாக மாட்டோமென்று வெட்கித் தலைகுனிந்து நிலத்தை நோக்கும்

சுரஞ்செல விரும்பின ராயின் இன்நகை
முருந்தெனத் திரண்ட முள் எயிற்றுத் துவர்வாய்க்
குவளை நாள்மலர் புரையும் உண்கண் இம்
மதியேர் வாள்நுதல் புலம்பப்
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே.” ----அகநானூறு.

இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும் , குவளையும் புதிய மலரையும் ஒக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய,  இந்த மதியினை ஒத்த ஒளிபொருந்திய நெற்றியினையுடையாள் வருந்த , இவ்விடத்தை நீங்கிப்போய்த் தங்குதல் உமக்குப் பொருந்துவதாகுமோ..?

திங்கள், 21 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1113


திருக்குறள் -சிறப்புரை :1113

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. --- ௧௧௧

இவளுக்குப் பசுமையான மூங்கில் போலும் தோள்கள் ; இளந்தளிர் போலும் மேனி ; முத்துக்கள் போன்ற பற்கள் ; இயல்பாக அமைந்த நறுமணம் ;  வேல் போலும் மையுண்ட கண்கள்.

நுணங்கு அமைத்திரள் என நுண் இழை அணை என
முழங்கு நீர்ப் புணை என அமைந்த நின் தடமென்தோள்
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நிற் கண்டார்க்கு
அணங்காகும் என்பதை அறிதியோ அறியாயோ.” –கலித்தொகை.

வளைந்த முன் கையினையும் வெள்ளிய பற்களையும் உடைய அழகிய நல்லாளே, நிறத்தாலும் திரட்சியாலும் நுண்மையை உடைய மூங்கில் என, மென்மையால் நுண்ணிய துகிலினை உடைய அணை என, காமக் கடலை நீந்துவதற்கு வேழக் கோலால் செய்த தெப்பம் என அமைந்து விளங்குகின்றன மெல்லிய தோள்கள் ; இத்தோள்கள் கண்டார்க்கு வருத்தம் செய்வன என்பதை நீதான் அறிவையோஅறியாயோ..?