திருக்குறள் -சிறப்புரை
:1094
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
------
௧0௯௪
யான் அவளை நோக்கியபோது,நாணித் தலைகுனிந்து நிலத்தை நோக்குவாள் ; யான்
அவளைப் பார்க்காதபோது அவளோ என்னைப் பார்த்து இதழ் நெளிய புன்முறுவல் பூத்துத் தன்னுள்ளே
மகிழ்வாள்.
” பரிமுடுகு தவித்த தேரன் எதிர்மறுத்து
நின்மகள் உண்கண் பன்மாண் நோக்கிச்
சென்றேன் மன்ற அக் குன்று கிழவோனே.” –அகநானூறு.
மலை நாட்டிற்குரிய தலைவன், பரிகளின் வேகத்தை
அடக்கி மெல்லெனச் செலுத்தும் தேரனாகி, நின் மகளது மையுண்ட கண்களை, நோக்கிய பின் எதிர்நோக்கலாகப்
பலமுறை நோக்கி நின்று சென்றனன்.
எதிர்மறுத்து நோக்கலாவது, தலைவி தன்னை நோக்காதிருக்க,
தான் அவளை நோக்குதல், தலவன் நோக்குழித் தலைவி எதிர் நோக்காள் என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக