திங்கள், 31 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1093


இணையத்தில் என்னை இயக்கும்
இனிய தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்…நன்றியுடன்.

திருக்குறள் -சிறப்புரை :1093

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். ------ ௧0௯௩

அவள் என்னை அன்புடன் நோக்கினாள் ; நோக்கிய நிலையில் குறிப்பொன்றினை மனத்திற்கொண்டு நாணித் தலைகுனிந்து நின்றாள். அஃது அவள்  மனமொத்தஅன்பாகிய காதல் பயிர் வளர நீர் பாய்ச்சியதைப் போலாயிற்று.

“ செல்வம் கடைகொளச் சாஅய் சான்றவர்
அல்லல் களைதக்க கேளிருழைச் சென்று
சொல்லுதல் உற்று உரைக்கல்லாதவர் போலப்
பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்
மெல்ல இறைஞ்சும் தலை. “ ----கலித்தொகை.

அறிவுடையோர், தம் செல்வம் தீர்ந்துவிட, வறுமையடைந்து, துன்புற்றுத் தம்முடைய வருத்தத்தைக் களைதற்குரிய தக்க உறவினரிடத்தே சென்று தம் குறையை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னர் அதனை முடியச் சொல்ல மாட்டாது,தயங்கி நிற்பாரைப் போல, இவனும் நின்றனன் ; தான் கூறக் கருதியதனைக் கைவிட்டுப் பலமுறையாகப் பார்க்கும்; பின்னை யான் தன்னைப் பார்க்கின் தான் மெல்லத் தலை இறைஞ்சி நின்றனன்.

1 கருத்து: