ஞாயிறு, 2 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1064


திருக்குறள் -சிறப்புரை :1064

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.----- ௧0௬௪

இரந்துண்டு வாழும் அவலநிலைக்கு ஆளான போதும், பிறரிடம் சென்று இரந்து நிற்காத மேன்மைக்குணம், அகன்ற இவ்வுலகமெல்லாம் கொள்ளாத அளவு பெருமை உடைத்து.

” திருத் தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று
எருத்து இறைஞ்சி நில்லாது மேல். “ -----நாலடியார்.

திருமகள் தன்னைக் கைவிட்டாலும் தெய்வம் சினந்து வருத்தினாலும்  அயராது மனத்துள் தம் (தன்மான வாழ்வை) மேன்மையை நினைப்பதே யல்லாமல்,  வீணே பொருள் சேர்த்துவைத்திருக்கும் அறிவிலார் பின் சென்று, இரந்து நிற்கமாட்டார் மேலானவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக