வியாழன், 30 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் – 48. தமிழர் மருத்துவம்


தன்னேரிலாத தமிழ் – 48. தமிழர் மருத்துவம்

 வேப்பந் தழை செருகுதல்

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லாமனையும் கல்லென்றவ்வே
                                          வெள்ளைமாளர், புறநா.296 : 1 - 3

போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு .ஒளவைசு.து. -உரை
புண்பட்டோரைப் பேய்கள் அணுகாதிருத்தற் பொருட்டு வேப்பந்தழையை வீட்டின் முன் இறப்பிற் செருகுதலும் காஞ்சிப் பண்ணைப் பாடுதலும் ஐயவியைப் புகைத்தலும் மரபு. (.வே.சா, உரை)  
   
                        இன்றுங்கூட நாட்டுப்புற வழக்கில் அம்மை நோய் கண்டாரைத் தனித்திருக்கச் செய்வதும் வீட்டில் வேப்பிலைச் செருகுதலும் வீட்டில் தூய்மையைப் பாதுகாத்தலும்  அவர் அருகில் இருந்து மாரியம்மன் தாலாட்டுப் பாடல் பாடுவதும் தமிழர்தம் வழக்கமாகும். 

MUSIC THAT  HEALS – 10-02-14,Times of India.

“……..On the scope of music therapy in the country.” An interview with Prof. Michael Thorne,  By Anisha Sahijwala………………….”
It was very interesting to me, when I read your article. I would like to suggest some more information’s to support   your article. Music Therapy is not a new one to Indians especially for Tamils. In ancient Tamil literature gives us a reference about Music Therapy.

PuRanaanuRu,  281, Arisilkizaar, in his poem,  clearly narrates, the heroes who have got severe injuries in the battlefield, they have  treated in their homes. 1.  House cleaned. 2. Herbals inserted  in veranda . 3 with musical instruments  singing  Kaanci PaN …… Music that heals …sure.. Music must  touch one’s MIND; It is possible only through their mother tongue.

புதன், 29 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்- 47. தமிழர் மருத்துவம்


 தன்னேரிலாத தமிழ்- 47. தமிழர் மருத்துவம்
மருத்துவம்
 போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு . (உரை வேந்தர்-)

தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
                 ………… அரிசில்கிழார்.புறநா.281: 1 – 6

இனிய கனிகளைத்தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி ; யாழுடன் பல இசைக கருவிகள் ஒலிக்க; கையில் மையாகிய மெருகினை இட்டு; வெண் சிறு கடுகினைத் தூவி ; ஆம்பல் குழலை ஊதி ; மணியோசையை எழுப்பி ; காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து... இரவமொடு வேம்பு மனைச் செருகுதல் முதலிய செயல்கள் பேய்கள் புண்ணுற்றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன.


செவ்வாய், 28 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 46


தன்னேரிலாத தமிழ் - 46

காலம்அறிந்து ஆங்குஇடம் அறிந்துசெய் வினையின்
மூலம்அறிந்து விளைவுஅறிந்து மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். --- நீதிநெறிவிளக்கம்.

ஒரு செயலைச் செய்வதற்கான காலம், இடம், காரணம் ஆகியவற்றையும் அச்செயலைச் செய்வதினால் ஏற்படும் பயனையும் அறிந்து, மேலும் தாம் ஆராய வேண்டியவற்றைச் செம்மையாக ஆராய்ந்து, தம் முயற்சிக்குத் துணை ஆவார் வலிமையையும் அறிந்து, அதன் பின்னர் முயற்சி மேற்கொள்ளப்படும். எனவே காலம் , இடம் முதலியவற்றைக் கருதியே ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 45


தன்னேரிலாத தமிழ் - 45

தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறு அல்ல தீயன
நல்லன ஆகாவாம்  நா இன்புற நக்கிக்
கொல்லும் கவயமாப் போல்----” ---நீதிநெறிவிளக்கம்.

தான் கொல்ல விரும்பும் உயிரைத் தன் நாவினால் நக்கி இன்பம் ஊட்டி, அவ்வுயிர் இன்பத்தில் திளைத்து நிற்கும் போதே எதிர்பாராமல் தாக்கிக் கொல்லும் (கவயமா) காட்டுப் பசுவினைப் போல்,   தீமைமிக்க செயல்களைச் செய்கின்றவர்களின் செல்வம் பெருகி வளர்ந்தாலும் தீய செயல்களால் திரட்டிய செல்வம் எல்லாம் தீமை பயப்பனவே ஆம்.  

சனி, 25 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 44


தன்னேரிலாத தமிழ் - 44

ஆனமுதலில் அதிகம் செலவானால்
 மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
 எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
 நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.” --- நல்வழி.

தன்னிடம் இருக்கும் பொருளுக்குமேல் செலவு அதிகமானால் மானம் கெட்டு, அறிவு அழிந்து பயணம் சென்ற திசை எங்கும் அனைவருக்கும் திருடனாய், எல்லாப் பிறவிகளிலும் தீயவனாய் நல்லோரால் வெறுக்கப்படுபவன் ஆவான்.
எனவே வரவறிந்து,  செல்வழி அறிந்து வாழ்வாயாக.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 43


தன்னேரிலாத தமிழ் - 43

சிறுமுயற்சி செய்து ஆங்கு உறுபயன் கொள்ளப்
 பெறும் எனில் தாழ்வரோ தாழார் அறன் அல்ல
எண்மைய வாயினும் கைவிட்டு அரிது எனினும்
ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார்.”  ---நீதிநெறிவிளக்கம்.

செய்து முடிப்பதற்கு எளிதாக இருந்தாலும் அறநெறிக்குப் புறம்பானவற்றைச் செய்தலை ஒழித்து, செய்வதற்கு அரியதாக இருந்தாலும் அறநெறியிலிருந்து பிறழாமல் ஒழுகிப் பயன் அடைவோர் எளிய சிறு முயற்சி செய்து மிகுந்த பயனை அடைய முடியும் என்றால் அம்முயற்சியை மேற்கொள்ளத் தயங்க மாட்டார்கள் . எனவே மேலோர் நன்மைதரும் எம்முயற்சிக்கும் பின் வாங்கார்.