புதன், 1 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-25 வான்சிறப்பு


தன்னேரிலாத தமிழ்-25
வான்சிறப்பு

நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”--- புறநானூறு

நீரில்லாமல் அமையாத உடலுக்கு, உணவே முதன்மையானது ; உடலுக்கு உணவு கொடுத்தோர் உயிரைக் கொடுத்தவராவர்.

தைஇத் திங்கள் தண்கயம் போல
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியல்நகர்
அடுதீ அல்லது சுடுதீ அறியாது
 இருமருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்
கிள்ளிவளவன் நல்லிசை உள்ளி.”புறநானூறு.


தைத் திங்களின் குளிர்ந்த குளம் போலப் பலரும் கொண்ட பின்னும் குறையாத சோறுடைய அகன்ற நகரம் ; அது உணவிற்கென உண்டாக்கப்பட்ட நெருப்பையன்றி, ஊர் சுடுகின்ற நெருப்பினை அறியாது .  தண்ணீரும் உணவுமாகிய இரண்டு மருந்தைப் பசிப்பிணிக்குத் தரும் நல்ல நாட்டிற்குத் தலைவன், கிள்ளிவளவன், அவனுடைய நல்ல புகழைக் கருதுவாயாக…!

வெம்பாதாக வியன்நில வரைப்பு என
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்.”பரிபாடல்

இவ்வுலகம் மழையின்றி வருந்தாது இருக்க, மழை பொழிக என்று வேண்டிக்கொண்டு, கன்னிப் பெண்கள் நீராடினர்.

                       நீர் வளம் உடையதே நாடு.  நீர் நிலைகளைப் பாதுகாத்து ; நீர்
 வளத்தைப் பெருக்கி ; உயிர்களைக் காப்பாற்றுவதே  ஓர்அரசின் முழுமுதற்
கடமையாம் என்பதறிக. 

நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம் நயந்தருளி”.நற்றிணை.
தோழி..! நீரின்றி அமையாது உலகியல் வாழ்வு என்பதைப் போல, அவரின்றி நம் வாழ்வு சிறக்காது என்பதை நன்கு அறிந்த நல் உள்ளம் கொண்டவர் அவர்.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
 எல்லார்க்கும் பெய்யும் மழை.” ----வாக்குண்டாம்.

நெல் வயலுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியாக ஓடும்போது ஆங்கே முளைத்துள்ள புல்லுக்கும் உணவளிப்பதைப் போல, இவ்வுலகில் நல்லார் ஒருவர் இருப்பதால்தான் மழை பொழிகிறது. அவ்வாறு பெயும் மழை  எல்லோருடைய உயிர் வாழ்க்கைக்கும் பயன் படுகிறது
நல்லார் ஒருவர் என்றது நாட்டை ஆளும் தலைவரை. 

துளிமாறு பொழுதின் இவ்வுலகம் போலும்நின்
அளிமாறு பொழுதின் இவ் ஆயிழை கவினே.”கலித்தொகை.

தலைவ..! மழை பெய்யாத காலத்து வருந்தி அழியும்  இவ்வுலகத்தைப் போல, நின் அரவணைப்பு இல்லாத காலத்தில் இவள் அழகு கெட்டு அழிந்துவிடும். – தோழி.

 கடல் நீரைக் குடிநீராக்கும் ஆற்றல் மேகத்திற்குண்டு. கடலில் நன்னீர் கலவாது போமானால் கடல் நீர் இயல்பழிந்து குறைவுறும்; அஃது ஒருவகையில் கடல் மாசுறுதலாம். மேலும் முன்னர்க் கூறிய நிலவளம் அழிதலோடு கடல் வளமும் அழிவுறும் என்க.

குளம் தொட்டுக் காவு பதித்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்றிவை பாற்படுத்தான்
ஏகும் சொர்க்கம் இனிது. – சிறுபஞ்சமூலம்.

குளம் தோண்டி, சுற்றிலும் மரங்கள் நட்டு, மக்கள் நடக்கும் வழிகளைச் சீர்படுத்தி, தரிசு நிலங்களைச் செப்பம் செய்து உழு வயலாக்கி, கிணறு உண்டாக்கி ஆகிய இவ்வைந்தினையும் செவ்வனே செய்தவன் சுவர்க்கத்திற்கு இனிதாகச் செல்வான்.


மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த..”--- மதுரைக்காஞ்சி.

மழை வேண்டுங்காலத்துத் தவறாதுபெய்து, நாடெங்கும் விளையுள் பெருகி, வளம் கொழிக்கும் ; ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி விளைய;  விளை நிலங்களும் மரங்களும் பல்லுயிர்களும் தாம் பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுக்கொண்டு தவறாமல் வழங்கும்.

கழிந்தது பொழிந்து எனவான் கண்மாறினும்
தொல்லது விளைந்து எனநிலம் வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை.”புறநானூறு.

முன்பு மழை பொழிந்தோம் என்று கருதி இப்போது மழை பெய்யாது போகுமானால்,  முற்காலத்து விளைந்தோம் என்று கருதி இப்போது நிலம் விளையாது போகுமானால், இவ்வுலகில் எல்லா உயிர்க்கும் வாழ்க்கை இல்லாது ஒழியுமே.

  வானின்றி மழை இல்லை ; மழையின்றி வளம் இல்லை ;  வளமின்றி மக்கள் வாழ்க்கை இல்லை.  உலகப் பொதுமறை உலகிற்கு உணர்த்தும் செய்தி இதுவே.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக