சனி, 4 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-27: விருந்து பேணல்


தன்னேரிலாத தமிழ்-27:
விருந்து பேணல்

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்….” புறநானூறு.

 நேற்று தன்னை நாடிவந்த விருந்தினர்களைப் பேணுவதற்காகத் தன்னுடைய பழைய வாளை ஈடாக வைத்தான் ; இன்று வந்துள்ள விருந்தினரைப் பேணுவதற்குச் சிறிய யாழினைப் பணையம் வைத்துள்ளான்.

மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
 உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
உண்ம் என இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்.”புறநானூறு.

இடுமணல் முற்றத்தே சான்றோர் பலர் வருவர் அவ்வேளையில், அவர் உண்ணாராயினும்நீங்கள் உண்ணவில்லை என்றால் நானும் உண்ண மாட்டேன்என்று சூளுரைத்துஉண்மின்என்று அவர்களை வேண்டிக் கொள்ளும் பெரும் புகழாளன் சாத்தன்.

பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால்வரை கண்விடுத் தன்ன
அடையா வாயில்….. “ – சிறுபாணாற்றுப்படை.

பொருநர், புலவர், மறை ஓதும் அந்தணர் முதலியோர் வருகையை நோக்கிக் கடவுள் உறையும் மேருமலை, ஒரு கண்ணை விழித்துப் பார்ப்பது போல், எப்பொழுதும் திறந்தே இருக்கும்  நல்லியக்கோடனின் அரண்மனை வாயில்…!

விருந்து விருப்புறூஉம் பெருந்தோள் குறுமகள்
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்கநற்றிணை.

 என் இனிய துணைவி, வரும் விருந்தினரை வரவேற்று மகிழும் இனிய பண்புடையவள்; பெரிய தோளுடையாள்; அவள் மின்னல் போல் ஒளிவிட்டுத் திகழ்கின்றஅணிகளை அணிந்தவளாய், நம் நல்ல மாளிகை பொலிவு பெற விளங்குவள்.

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
 முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள்….” --- நற்றிணை.

தலைவி, நள்ளிரவாயினும் விருந்தினர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் பண்புடையவள் ; கற்பிற் சிறந்தவள் ; மென்மையும் இளமையும் நிறந்தவள்.


முன் துத்தும் துத்தினை நாளும் அறம் செய்து
பின் துத்துத் துத்துவர் சான்றவர்அத்துத்து
முக்குற்றம் நீக்கி முடியும் அளவு எல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.” ---- நாலடியார்.

முதலில் உண்ணும்படியான உணவினை, நாள்தோறும் பிறருக்குக் கொடுத்தலாகிய அறத்தினைச் செய்து, எஞ்சிய உணவையே உண்பர் சான்றோர்;  அப்படி உண்ணும் உணவு காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் நீக்கி வாழ்வார்க்கு, அவர் சாகுமளவும் வாழ்வில் துக்கம் இல்லாதிருக்கும்படியான நிலையைப் பெறுவர்.1 கருத்து: