தன்னேரிலாத தமிழ்-29
செய்ந்நன்றி அறிதல்
“செய்ந்நன்றி
அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த.” – சிறுபாணாற்றுப்படை.
நல்லியக்கோடனின் புகழுக்கு,
அவனின் செய்ந்நன்றி மறவாமையும்
சிற்றினம் சேராமையும்
இரவலர்மாட்டு இன்முகமுடைமையும் எவரிடத்தும் இனியனாம் தன்மையும்
ஆகிய அருங்குணங்களே
காரணம் என்று
புகழ்வர் சான்றோர்.
“ நன்றி சாம் நன்றி அறியாதார் முன்னர்ச் சென்ற
விருந்தும் விருப்புஇலார் முன்சாம் -அரும்புணர்ப்பின்
பாடல்சாம் பண்ணறியாதார்
முன்னர் ஊடல் சாம்
ஊடல் உணரார் அகத்து” – நான்மணிக்கடிகை.
பிறர் செய்யும்
நன்மைகளை, நன்மையெனத் தெரிந்துகொள்ளாதவர்பால் செய்ந்நன்றி கெடும்
; அன்பில்லாதவர்களிடத்தில் வந்த விருந்தினரும் வருந்துவர் ; பண் இசையை அறியாதவர்களிடத்தில் அரிய இசையுடைய பாடல்கள் கெடும் ; ஊடல் இனிமையைத் தெரிதல் இல்லாத கணவரிடத்தில் ஊடுதல் கெடும்.
“ கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த
நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும் ….” --- நான்மணிக்கடிகை.
பிறர்செய்த தீமைகளை மறத்தல்
வேண்டும் ; பிறர் செய்த நன்மைகளைப்
பெரிதும் நினைத்தல்
வேண்டும்.
“ செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம்தன்னை
வைததை உள்ளி விடும் ” – நாலடியார்.
சான்றோர்கள் பிறர்
செய்த நன்மையை
மட்டுமே நினைத்துக்கொண்டிருப்பார்கள் ; கயவர்கள் பிறர் தம்மை
வைததை மட்டுமே
நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
“ நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம் பாடிற்றே ஆயிழை கணவ .” ---- புறநானூறு.
நிலம் தலகீழாகப்
பெயர்வதாயினும் ( உலகம்
அழியும் காலத்தே
தீவினைகள் அழியும்
ஆயினும் அக்காலத்தும்
) ஒருவன் செய்த
நன்றியை மறந்தவர்க்கு
அத்தீவினையிலிருந்து உய்வதற்கு
வழியில்லை என்று
அறநூல் கூறும்.
ஒப்பிட்டுப் படிக்கும் உயர்ந்தவரின் தளம்
பதிலளிநீக்குஒப்புரவுத் தளம்