சனி, 11 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-33 நற்சொல் கேட்க..!


தன்னேரிலாத தமிழ்-33

நற்சொல் கேட்க..!

திங்கள் அமிர்த கிரணம் மிகச் சீதளமே
திங்களினும் சந்தனமே சீதளமாம் இங்கு இவற்றின்
அன்பு அறிவு சாந்தம் அருள் உடையார் நல்வசனம்
இன்பம் மிகும் சீதளம் ஆமே.” ---நீதிவெண்பா.

திங்களின் அமுது போன்ற ஒளி குளிர்ச்சியைத் தரும்; அதைக் காட்டிலும் குளிர்ச்சியைத் தரக்கூடியது சந்தனம் ; திங்கள், சந்தனம் ஆகிய இரண்டைக் காட்டிலும் மிகுந்த குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை அன்பு,அறிவு, பொறுமை, அருள் ஆகியவற்றை இயல்பாய் பெற்றிருக்கின்ற நல்லவர்களின் நல்ல உள்ளங்களில் இருந்து எழும் நல்ல சொற்களே.

 அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு உடைமை நோக்கி மற்று அதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்….”அகநானூறு.

 அறமும் பொருளும் வழுவாத வகையை ஆராய்ந்து தனது தகுதியை உணர்ந்து, அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர் செயலாம்.

 சொல் வன்மை உண்டு எனில் கொன்னே விடுதல்
நல்வினை கோறலின் வேறு அல்ல வல்லைத் தாம்
ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ
வாக்கின் பயன் கொள்பவர். ---நீதிநெறிவிளக்கம்.

கேட்பார் பிணிக்கும் சொல்லாற்றல் ஒருவனுக்கு உண்டு என்றால் அவன் ஆற்றலைப் பயன்படுத்தாமல் வீணே கைவிடுதல், நல்ல செயல்களுக்குக் கெடுதல் செய்வதைப் போன்றதாம். எனவே சொல்லாற்றலின் பயனை உணர்ந்தவர்கள், தம்முடைய செல்வம் அனைத்தும் விரைந்து அழியும் என்றாலும் அதற்காக அஞ்சி அவ்வாற்றலைப் பயன்படுத்தாமல் விடார்.

கண்ணோக்கு அரும்பா நகைமுகமே நான்மலரா
இன்மொழியின் வாய்மையே தீம்காயாவண்மை
பலம் நலம் கனிந்த பண்புடையார் அன்றே
சலியாத கற்ப தரு.நீதிநெறிவிளக்கம்.

 அருள் நிறைந்த கண் பார்வையே மொட்டு ஆகவும், மகிழ்ச்சி நிறைந்த இனிய முகமே அன்றலர்ந்த மலர் ஆகவும், உண்மையான இனிய சொற்களே தித்திக்கும் காய் ஆகவும்,

ஈகையே பழம் ஆகவும் மிகுந்த பெருந்தன்மை மிக்க செல்வந்தர்களே சலிப்பு இல்லாமல் வழங்கும் கற்பகத்தரு ஆவர்.


ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந்நாடு
வேற்று நாடு ஆகா தமவே ஆம்…”பழமொழி.

ஆன்ற கல்விஅறிவுடையார்தம் சொல், செல்லாத நாடு, நான்கு திசைகளிலும் இல்லை; அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா ; அவருடைய நாடுகளேயாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக