சனி, 31 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 170

 

தன்னேரிலாத தமிழ் - 170

1073

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.

தேவராகிய மேலோர் போன்றவர்கள் கயவர்கள். எப்படியெனின் தேவரும் கயவரும் மனம்போன போக்கில் தாம் விரும்பியவற்றை விரும்பியவாறே செய்யும் இயல்புடையவர்கள்.

ஏட்டைப் பருவத்தும்  இற்பிறந்தார் செய்வன

மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்கோட்டை

வைரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி

செயிர் வேழம் ஆகுதல் இன்று.நாலடியார்.

வாள் போன்ற கண்ணை உடையவளே..! நற்குடியில் பிறந்தார் பொருள்வளம் இழந்த காலத்திலும் செய்கின்ற நற்செயல்களைக் கயவர்கள் பொருள்வளம் கொண்ட காலத்திலும் செய்யமாட்டார்கள். பன்றியின் கொம்பில் பூணைப் பூட்டினாலும் அது வீரம்கொண்ட யானை ஆகிவிடாது. மேலோர் இயல்பும் கீழோர் இயல்பும் மாறா என்பது கருத்தாம்.

 

வியாழன், 29 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 169

 

தன்னேரிலாத தமிழ் - 169

1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாஉண்டேல் உண்டாம் சிறிது.

அச்சப்பட்டுக்கிடப்பதே கீழ்மக்களின் இயல்பாகும். அஞ்சி ஒடுங்குவது ஒழித்து உழைத்துப் பொருளை ஈட்டவேண்டும் என்று ஆசைப்பட்டாலே  ஒரு சிறிதாவது அச்சம் ஒழியும்.  

அச்சம் உள்ளடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சம் அற்று  ஏமாந்து இருக்கை நன்றே.”வெற்றிவேற்கை, 40.

அச்சத்தை மனத்தில் கொண்டு, கொஞ்சங்கூட அறிவில்லாத புதல்வர்களைப் பெற்றெடுப்பதைவிடக் குலம் தழைப்பதற்கு வழித் தோன்றல்கள் இல்லாமல் போனாலும் போகட்டும் என்று மகிழ்ச்சியாக இருப்பதே நல்லதாம்.   

புதன், 28 அக்டோபர், 2020

 

தன்னேரிலாத தமிழ் - 168

409

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு.


கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும் அவர்கள், தாழ்ந்த குடியில் பிறந்து கல்வியறிவில் மேம்பட்டார் எய்திய பெருமைகளைப்  பெற முடியாதவர்களே.


 ( “ உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.” ~~~ பரிமேலழகர்.)


எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்

  அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.” –வெற்றிவேற்கை, 38.


எந்தக் குலத்தில் பிறந்தாலும் யாராக இருந்தாலும் கல்வியறிவு பெற்றவர்களே எந்த இடத்திலும் மதிக்கப்படும் பேறு பெற்றவர்கள் ஆவர்.

 

வெள்ளி, 23 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 167

 

தன்னேரிலாத தமிழ் - 167

1028

குடிசெய்வார்க்கு  இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்.

தான் பிறந்த குடியின் பெருமையை உயர்த்த நல்ல நேரம் என்று ஒன்றில்லை ;  நல்ல நேரம் வரட்டும் என்று சோம்பி இருந்தால் மானம் அழிய, பிறந்த குடியின் பெருமையும் கெட்டு அழியும்.

கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல்

எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர்ஒல்லை

இடுநீற்றாற் பையவிந்த நாகம்போல் தத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு.”—நாலடியார்.

மறைமொழி ஓதி இடும் திருநீற்றால் விரித்த படத்தை விரைந்து சுருக்கிக் கொள்ளும் பாம்புபோல், பெரியோர் தங்கள்  உயர் குடிப் பிறப்பின் பெருமையால் வருத்தமுற்றுக் கீழ் மக்களின் வாயிலிருந்துவரும் கல் எறிந்தாற் போன்ற கொடுஞ் சொற்களை எவரும் அறியுமாறு பொறுத்துத் தம் பெருமையைக் காப்பர்.

வியாழன், 22 அக்டோபர், 2020

தன்னேரிலாத தமிழ் - 166

 

தன்னேரிலாத தமிழ் - 166

974

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

கற்பு நெறி வழுவாது தன்னைக் காத்துப் பெருமை பெறும் மகளிரைப்போல், ஒருவன் தன்னுடைய தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவானாயின் அவனும் பெருமை பெறுவான்.

தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்

உறுதிக்கு உறுதி உயிர் ஓம்பி வாழ்தல்

அறிவிற்கு அறிவு ஆவது எண்ணின் மறுபிறப்பு

மற்று ஈண்டு வாரா நெறி.—அறநெறிச்சாரம்.

ஆராய்ந்து பார்த்தால் தன்னிடத்தில் குற்றங்குறைகள் இருக்குமாயின் ஒருவன் அவற்றை உணர்ந்து தன்னைத்தானே நொந்து கொள்ளலே அஞ்சாமையாம் ; பிற உயிர்களை மதித்துப் போற்றிப் பாதுகாத்து வாழ்தலே நல்ல செயலாம் ; இவ்வுலகில் மீண்டும் வந்து பிறந்து உழலாமல் இருப்பதற்குத் துணைசெய்யும் உயர்ந்த நெறியின்கண் நின்று ஒழுகுதலே சிறந்த அறிவாம்,