வெள்ளி, 30 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. ---- ௭௯
தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் செய்தாரையும் தண்டிக்காது அருள் நோக்கோடு அக்குற்றத்தைப் பொறுத்து  அவரைக் காப்பது தலைசிறந்த பண்பாகும்.
” கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா
நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே
கனவினும்…….” பதிற்றுப்பத்து.
கண்ணால் மகிழ்ந்து பார்த்து, உள்ளத்திலே வஞ்சக உணர்வுகொண்ட பகைவரிடத்தும் கனவினும் பொய் கூறுதலை அறியாதவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.


வியாழன், 29 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :578
கருமஞ் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.-----௭௮
ஆற்றும் கடமையில் இழுக்கு நேராவண்ணம் கருணை புரிய வல்லார்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
“ தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்
தாம் அறிந்து உணர்க என்ப மாதோ.”---- நற்றிணை.
கொடிய தீமை செய்வோரைக் கண்டவிடத்தும், அவர் உள்ளம் வருந்தி உணருமாறு, இனி அவ்வாறு செய்யாதிருக்க என்று பலமுறை எடுத்துக்கூறிப் பொறுத்திருப்பர் பெரியோர்.


புதன், 28 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :577
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். --- ௭௭
கண் உடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதவர்களாக இருப்பதில்லை ;கண்ணோட்டம் இல்லாதவர்கள்  கண் உடையவர்கள் அல்லர்.
‘ பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணுத் தக்கன்று அது காணுங்காலை.” --- நற்றிணை.

ஒழுக வேண்டிய நெறியில் ஒழுகாது இருப்போரைப் பெரியோர் எனக் கூறுவது நாணத்தக்கதாகும்.

செவ்வாய், 27 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :576
மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்து கண்ணோடா தவர். ---- ௭௬
கண்ணிருந்தும் அருளொடு பொருந்திய பார்வை அற்றவர்கள் மண்ணொடு பொருந்திய மரத்திற்கு ஒப்பாவர்.
“ அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
  மக்கட்பண்பு இல்லா தவர்.--- குறள். 9997.

அரத்தைப் போலும் கூர்மையான அறிவுடையரே ஆயினும்  ஆறறிவு உடைய மக்களுக்குரிய பண்பு இல்லாதவர்  ஓரறிவு உடைய மரத்திற்கு ஒப்பாவர்

திங்கள், 26 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :575
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும். ----- ௭௫
கண்ணுக்கு அழகு ஒளி, (பார்வை) அந்த ஒளிக்கு அணிகலனாக அமைவது கருணையே, கருணை இல்லாக் கண் முகத்தில் அமைந்த புண் என்றே உணரப்படும்.
” குளத்துக்கு அணிஎன்ப தாமரை பெண்மை
நலத்துக்கு அணிஎன்ப நாணம் தனக்கு அணியாம்
தான்செல் உலகத்து அறம்.” – நான்மணிக்கடிகை.

குளத்துக்கு அழகு தாமரை ; பெண்மைக்கு அழகு நாணம் ; ஒருவன், மறுமைக்கு ஆற்றும் அறங்கள் அவன் ஆண்மைக்கு அழகாம்.

ஞாயிறு, 25 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். ---- ௭௪
துன்புறும் ஒருவரைப் பார்த்த அளவில் அவரின் தேவை அறிந்து, கருணையோடு உதவி செய்யாதவர் முகத்தில் கண்கள் இருந்து என்ன பயன்..? ஒரு பயனும் இல்லை என்பதாம்.
“ இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினை செய்வார்.” – பரிபாடல்.
இரப்போருடைய வறுமையை அவர்தம் மெய்ப்பாடு கண்டு உணர்ந்து, அவர் வாய் திறந்து கேட்பதற்குமுன் ஈதலைச் செய்வார் சான்றோர்.


சனி, 24 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :573

திருக்குறள் – சிறப்புரை :573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். --- ௭௩
பாடலோடு பொருந்தி வராத பண்ணால் என்ன பயன் அதைப்போல அருள்நோக்கு இல்லாத கண்ணால் என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை என்பதாம்.
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர்க்
கிடந்து உண்ணப் பண்ணப்படும்” – நாலடியார்.
 நிலையற்ற இந்த உடம்புக்கே உதவி செய்துகொண்டு வாழாமல் இறந்தபின் செல்லும் மேலுலகில் இருந்து இன்பம் நுகர்வதற்கான செயல்களையே செய்தல் வேண்டும்.வெள்ளி, 23 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :572

திருக்குறள் – சிறப்புரை :572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. --- ௭௨
மக்கள் வாழ்க்கைமுறையே கண்ணோட்டத்தில்தான் அமைந்துள்ளது ; கண்ணோட்டம் இல்லாதார் உண்மையில் இந்த நிலத்திற்குப் பெரும் சுமையே.
“ தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
ஆற்றும் துணையும் அறம் செய்க.” –பழமொழி.

அரிதாகிய மக்கள் பிறப்பைப் பெற்றதனால், இயன்றவரை அறம் செய்க.

வியாழன், 22 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :571
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. ------ ௭௧
அன்புநோக்கு ஆகிய கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற  அழகுநிறைந்த மிகச் சிறந்தகுணம் மக்களிடையே இருப்பதால்தான் இந்த உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்.. மணிமேகலை.

எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டல் வேண்டும்.

ஞாயிறு, 18 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :570

திருக்குறள் – சிறப்புரை :570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. ---- ௭0
கொடுங்கோலன், கல்வியறிவில்லாத மூடர்களையே தன் சுற்றமாகக் கொள்வான் ; அம்மூடர்கூட்டத்தைத் தவிர நிலத்திற்குச் சுமையாக இருப்பது வேறு ஒன்றுமில்லை.
“ நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச்சாம்
குலனும் குடிமையும் கல்லாமைக் கீழ்ச்சாம்.” – நான்மணிக்கடிகை.

அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப் பெருமையும் கல்லாமையால் கெடும்.

சனி, 17 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். ---- ௬௯
 போர் வந்துற்றபோது பாதுகாப்பு அரண்களை அமைக்கத் தவறிய மன்னன், போர் முகங்காண அச்சமுற்று அடங்கி விரைந்து அழிவான்.
“ வாழாமையின் வழிதவக் கெட்டுப்
 பாழாயின நின் பகைவர் தேஎம்” – மதுரைக்காஞ்சி.

வேந்தே,,! நின்னுடைய ஏவலைக் கேட்டுப் பணி செய்து வாழாது நிலைகெட்டுப் பகைத்தமையால் அவர்தம் நாடுகள் பாழாயின.

வியாழன், 15 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறின் சிறுகும் திரு, ----- ௬௮
சுற்றமாக அமைந்த சான்றோர்தம் அறிவுரைகளைக் கேட்டு அறநெறிவழி ஆட்சி நடத்தாத அரசன், அறிவிழந்து சினத்துடன் சீறி எழுவானாயின் அவனுடைய செல்வம் யாவும் தேய்ந்து சுருங்கும்.
“ மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்றுஅறி உள்ளத்துச் சான்றோர்…”  -பதிற்றுப்பத்து.
மக்களைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.


புதன், 14 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :567

திருக்குறள் – சிறப்புரை :567
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். --- ௬௭
கடுமொழி உரைத்தலும் குற்றத்தின் தன்மை ஆராயாது அளவுக்கு அதிகமாகத் தண்டனை அளித்தலும் ஆகியன அரசன் பகைவரை  வெல்வதற்குரிய (இரும்பினை ஒத்த) வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.
” உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
 ஒற்கம் இலாமை இனிது.” …… இனியவை நாற்பது.

பேராசைகொண்டு அறவழியிலிருந்து நீங்குதற்கு ஏதுவாகிய மனத் தளர்ச்சி இல்லாதிருத்தல் இனிது.

செவ்வாய், 13 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :566

திருக்குறள் – சிறப்புரை :566
கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். ---- ௬௬
   அரசன், சுடுசொற்களால் இழித்துரைப்பதையும் இரக்கமின்றி மக்களை வதைப்பதையும் இயல்பாகக்கொண்டு ஆட்சி புரிவானாயின் அவன் முன்னோர் வழிவந்த பெரும் செல்வம் மேலும் வளராது அழிந்து போகும்.  
“ ஒத்தகுடிப் பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை. “ – நாலடியார்.

அறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்த போதிலும் ஒரு பொருளும் இல்லாதவர் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவர்.

திங்கள், 12 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :565

திருக்குறள் – சிறப்புரை :565
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. ----
காட்சிக்கு எளியனாக இல்லாதவனாகவும் கருணையற்ற கொடுமுகம் கொண்டவனாகவும் விளங்கும் அரசன் பெருஞ் செல்வம் உடையவனாயினும்  அவனைப் பார்ப்பது ஒரு பேயைப் பார்ப்பதைப் போன்றதாம்.
“ நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்… --- அகநானூறு.
ஒருவருக்கும் பயனின்றி வறிதே இறத்தலின்றிப் பிறர் பயன் கொள்ளுமாறு தம் பொருளை விடுத்து இறந்தோர், நல்வினை செய்தோராவர்.ஞாயிறு, 11 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :564

திருக்குறள் – சிறப்புரை :564
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். ----- ௬௪
 ‘எம் அரசன் கொடியவன்’ என்று மக்கள் தூற்றும் கொடுஞ்சொற்களை அரசன் பெறுவானாயின் அவன் வாழ்நாளும் நாளும் குறைய விரைந்து அழிவான்.
“ பாவமும் ஏனைப் பழியும் படவருவ
 சாயினும் சான்றவர் செய்கலார்….” --- நாலடியார்.

மானமுள்ளவர்கள் செத்துப் போவதாயிருந்தாலும் மானம் கெடவரும் பழி, பாவச் செயல்களைச் செய்ய மாட்டார்கள்.

சனி, 10 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :563

திருக்குறள் – சிறப்புரை :563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். --- ௬௩
மக்களைத் துன்புறுத்திக் கொடுங்கோல் ஆட்சி நடத்தும் அரசனாயின் அவன் விரைந்து அழிவான்.
” குடி அலைத்து இரந்து வெங்கோலொடு நின்ற
 முடியுடை இறைவரும் மூர்க்கனும் பதரே.”

குடிமக்களை வருத்தும் கொடுங்கோல் அரசனும் மூடனும் நன்னிலத்தில் விளைந்த பதர் போல்வர்.

வெள்ளி, 9 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :562

திருக்குறள் – சிறப்புரை :562
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். ---- ௬௨
தேடிய செல்வம் நெடுங்காலம் தம்மைவிட்டு நீங்காதிருக்க வேண்டுபவர்கள் குற்றவாளியைத் தண்டிக்கும்போது,  முதலில் அவன் அஞ்சுமாறு அச்சுறுத்திப் பின் மென்மையாகத் தண்டிக்க வேண்டும்.
“ சாம்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
 ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம். – வாக்குண்டாம்.வியாழன், 8 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :561

திருக்குறள் – சிறப்புரை :561
வெருவந்த செய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ---- ௬௧
 குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அத்தகைய குற்றத்தை மீண்டும் செய்யா வண்ணம் குற்றத்திற்குத் தகுந்த தண்டனையை அளிப்பவனே அரசனாவான்.
” முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்.” – கலித்தொகை.

முறை எனப்படுவது குற்றம் புரிந்தார் எவராயினும் இரக்கம் காட்டாது, குற்றத்திற்கேற்ப உயிரைப் பறித்தலும் குற்றமாகாது.

புதன், 7 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :560

திருக்குறள் – சிறப்புரை :560
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். ---- 0
மன்னன், மக்களைக் காக்கத் தவறினான் எனின் நாட்டில் பசுக்கள் பால்தரா, ஆறுவகைப்பட்ட தொழில்களைச் செய்வோர் தாம் கற்றவற்றை மறந்துவிடுவர். (வேறு தொழில் நாடிச் செல்வர்.)
“ பெரிய ஓதினும் சிறிய உணராப்
 பீடுஇன்று பெருகிய திருவின்
  பாடுஇல் மன்னரைப் பாடன்மாரே.” – புறநானூறு.

பலவாறு எடுத்துக் கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் அறிவில்லாத, பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள, பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பாராக.

செவ்வாய், 6 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :559

திருக்குறள் – சிறப்புரை :559
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். ---- ௫௫
நீதிநெறிமுறையின்படி ஆட்சி செய்யத் தவறிய மன்னவன் நாட்டில் பருவமழையும் பெய்யாமல்  போகும்.
“ மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம். – புறநானூறு.

மழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம் அரசரைப் பழித்துரைக்கும்.

திங்கள், 5 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :558

திருக்குறள் – சிறப்புரை :558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். ---- ௫௫
நீதிநெறி தவறிய அரசனின் கீழிருந்து வாழும் செல்வ வளமுடைய வாழ்க்கை, கொடிய வறுமை சூழ்ந்த வாழ்க்கையைவிடக் கொடுமையானதாகும்.
“” குடிகொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா
மடிகொன்று பால் கொளலும் மாண்பே குடிஓம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.” --- நீதிநெறி விளக்கம்.


வெள்ளி, 2 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :557

திருக்குறள் – சிறப்புரை :557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு ~~~ ௫௫
மண்ணில் மழைத்துளி இன்றேல் உயிர்கள் எத்தகைய கொடிய துன்பத்தைத் துய்க்குமோ  அத்தகைய கொடிய துன்பத்தை மக்களுக்குத் தரக்கூடியது அரசனின் அருள் இல்லாத ஆட்சிமுறை.
“ அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது எனப்
பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.” ~ சிலப்பதிகாரம்.

ஆற்றலுடைய அரசர்கள் முறையாக ஆட்சி செய்தாலன்றிப் பெரும் புகழுடைய பெண்டிர்க்குக் கற்பு நெறியும் சிறப்பாக அமையாது என்பது பண்டைய சான்றோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.

வியாழன், 1 ஜூன், 2017

திருக்குறள் – சிறப்புரை :556

திருக்குறள் – சிறப்புரை :556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. ~~~ ௫௫
மன்னர்க்கு நிலைத்த புகழைத் தருவது மக்களுக்கு நல்லாட்சி நல்கும் செங்கோலே ; செங்கோல் கொடுங்கோலானால் மன்னர்க்கு  வாழுங்காலத்தேயும்  புகழ் இல்லையாம்.
“ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
 தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே” ~~ புறநானூறு.
நிலையில்லாத இவ்வுலகத்தில் நிலைபெற விரும்பியோர் . தம் புகழை நிலைநிறுத்தித் தாம் மாய்ந்தனரே.