செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-243.

 

தன்னேரிலாத தமிழ்-243.

அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும்

        அழகும் வெற்றியும் தத்தம்

குடியும் மானமும் செல்வமும் பெருமையும்

        குலமும் இன்பமும் தேசும்

படியு மாமறை ஒழுக்கமும் புகழுமுன்

        பயின்றகல்வியுஞ் சேர

மடியு மால்மதி யுணர்ந்தவர் சூதின்மேல்

        வைப்பாரோ மனம் வையார்.” –வில்லிபாரதம், 11: 64.

அறிவுடையோர் சூதாடுவதை விரும்புவாரோ..? தலைமையும் ஆண்மையும் படையும் அழகும் வெற்றியும் குடிப்பெருமையும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் புகழும் நான்மறை ஒழுக்கமும் கற்றகல்வியும் இன்ன பிற நற்பயன்கள் யாவும் சூதினால் அழியும்.

திங்கள், 22 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-242.

 

தன்னேரிலாத தமிழ்-242.

கள்ளுண விரும்புதல் , கழகம் சேர்தல், மால்

உள்ளுறப் பிறன்மனை நயத்தல் ஒன்னலர்க்கு

எள்ளரும் ஞாட்பினுள் இரியல் செய்திடல்

வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே.” –நைடதம், ..

 அரசனே…! கள் குடித்தலை விரும்புதலும் சூதாடும் இடம் சேர்தலும் உள்ளம் மயக்கமடைய பிறர் மனையாளை விரும்புதலும் பகைவர்களுக்கு அஞ்சி இகழ்ச்சியில்லாத போர்க்களத்தில் பின்னிட்டு ஓடலும் ஆகிய இவைகளால்  அறநெறி பிறழும் என்பர் பெரியோர்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-241.

 

தன்னேரிலாத தமிழ்-241.

அனைத்தையுந் தோற்றனை அருவிபாய்  கவுள்

சினக் களி மால் களிறனைய சீற்றத்தோய்

மனத்திடை நினைக்குவது என்னை வல்லைநின்

புனக்கொடிக்கு இயைந்து இனிப் பொருதும் யாம் என்றான்.-நைடதம், ..

 நளனே…! அனைத்தையும் சூதாடித்  தோற்றுவிட்டாய், மலையருவியானது பாயும் கபோசலத்தை உடையவனே, சினம் கொண்ட பெருமை பொருந்திய  யானையை ஒத்த தோற்றத்தினை உடையோய்…!  இனியும் நீ மனத்தில் நினைக்குவது என்னை  ?  விரைந்து வா ..உன் மனையாளைப் பணையமாக வைத்துச்  சூதாடுக என்றான் புட்கரன்.

சனி, 20 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-240.

 

தன்னேரிலாத தமிழ்-240.

ஐய நீ ஆடுதற்கு அமைந்த சூது மற்று

எய்து நல்குரவினுக்கு இயைந்த தூது வெம்

பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்ற தாய்

மெய்யினுக்கு உறுபகை என்பர் மேலையோர்.”நைடதம், ..

அரசனே..! சூதானது வறுமைக்குத் தூதும் பொய்க்கு உதவியும்  இழிதொழிலுக்குத் தாயும்  வாய்மைக்குப் பகையும் ஆகும் என்பர் பெரியோர்கள்.

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-239.

தன்னேரிலாத தமிழ்-239.

மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிதே

தானம் அழியாமைத் தான் அடங்கி வாழ்வினிதே

ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது.”இனியவைநாற்பது, 40.

மாந்தர்க்கு உயிரினும் சிறந்த மானம் போனபின் வாழாமை இனிது ; தன் நிலையில் தாழாமல் அடக்கம் உடையவராய் வாழ்தல் இனிது ; எக்குறையும் இல்லாது உயர்ந்த செல்வராய் வாழ்தல் எல்லார்க்கும் இனிது. 

வியாழன், 18 பிப்ரவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-238.

 

தன்னேரிலாத தமிழ்-238.

ஆர்கலி வானம் தலைஇ நடுநாள்

கனைபெயல் பொழிந்தெனக் கானக் கல்யாற்று

முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்

விருந்தின் தீம்நீர் மருந்தும் ஆகும்

தண்ணென உண்டு கண்ணின் நோக்கி

முனியாது ஆடப்பெறின் இவள்

பனியும் தீர்குவள் செல்க..” ---நற்றிணை, 53.

வானுயர்ந்த பெரிய மலைப்பக்கத்தே, மிக்க இடியுடன் மேகம் மழை பெய்யத் தொடங்கிற்று, நள்ளிரவில் செறிந்து பெய்யும் மழையினால் கற்கள் நிரம்பிய காட்டுவழியே பெருகி ஓடும் ஆற்றிலே, மரங்களிலிருந்து உதிரும் சருகுகளும் பூக்களும் அடித்து வரப்பெறுகின்றன. அவ்வாறு பெருகிவரும் புத்தம் புதிய நீரானது இவளுடைய நோயைத் தீர்ப்பதாகும். அந்நீரினைக் குளிர்ச்சி பெறப் பருகி , ஆண்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு, வெறுப்பின்றி நீராடினால் மேனி நடுக்கம் தீரும் ஆதலால் அங்குச் செல்வீராக.