செவ்வாய், 31 டிசம்பர், 2019

நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் -- அன்புடன் இரெ. குமரன். 

வியாழன், 12 டிசம்பர், 2019


முப்பத்திரண்டு ஓமாலிகையாவன

இலவங்கம் பச்சிலை கச்சோலம் ஏலம்
குலவிய நாகனங் கொட்டம்நிலவிய
நாகமதா வரிசி தக்கோலம் நன்னாரி
வேகமில் வெண்கோட்டம் மேவுசீர்
போகாத கத்தூரி வேரி யிலாமிச்சம் கண்டில்வெண்ணெய்
ஒத்தகடு நெல்லி உயர்தான்றி துத்தமொடு
வண்ணக் கச்சோலம் அரேணுக மாஞ்சியுடன்
எண்ணும் சயிலேக மின்புழுகு  - கண்ணுநறும்
புன்னை நறுந்தாது புலியுகிர் பூஞ்சரளம்
பின்னு தமாலம் பெருவகுளம்பன்னும்
பதுமுகம் நுண்ணேலம் பைங்கொடு வேரி
கதிர்நகையா யோமாலிகைஎன்னுமிவை.

( 32 ஓமாலிகை, அகராதியிலும் பொருள் காண்டல் அரிதாயிற்றுமூலிகை ஆய்வாளர்களிடத்துப் பொருள் அறிந்து கொள்க. )

செவ்வாய், 10 டிசம்பர், 2019


மூடநம்பிக்கைகளில் முற்றித்திரண்ட மூளையில்
எழுத்தாணியை இறக்கிய திருவள்ளுவர்...!

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையான் காணப் படும். –--- ௨௯அ

உள்ளுக்குள் நிறைந்த அழுக்கை (கொலை, களவு, காமம்….) வைத்துக்கொண்டு, குளித்து மூழ்கிப் பூசுவன பூசுவதால் மட்டும் ஒருவன் தூய்மை உடையவனாக முடியாது ;   அப்பழுக்கற்றவன்,  உண்மையைப் பேசும் உயர் குணத்தால் மட்டுமே அறியப்படுவான்.
புற அழுக்கை நீரால் கழுவு ; அக அழுக்கை வாய்மையால் கழுவு.

எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்
செய் தொழிலால் காணப்படும்.” ---நாலடியார்.

எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும் செய்யும் தொழில்களைக் கொண்டு அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


ஞாயிறு, 8 டிசம்பர், 2019

”ஓங்கு பரிபாடல்”


ஓங்கு பரிபாடல்இது தமிழ் மொழிக்கே சிறப்புரிமையாகப் பெற்ற அகப் பொருள்புறப் பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவிப் புலமைச் சான்றோரால் ஆக்கப்பட்ட செவ்விய நூலாகும்.

இந்நூல் முழுமுதற் கடவுளராகிய திருமாலையும் செவ்வேளாகிய முருகப்பெருமானையும் உலகு புரந்தூட்டும் உயரிய ஒழுகலாற்றைக் கொண்ட , வையைப் பேரியாற்றையும் வாழ்த்துதலாக உட்பொருள் கொண்டு  இடையிடையே நம் தமிழகப் பண்பு ,அன்பு ,காதல், வீரம் , அறம், காவிய ஓவியத் திறங்களை விளக்கிச் செல்லும் பெருமை மிக்கது. அந் நூற்பாடல்களுள் நம் தமிழ் மாநிலத்துச் சிதைந்தன போக எஞ்சிய ( 22 ) பாடல்களே இன்றுகாறும் நம்மிடையே நின்று நிலவுகின்றன.

பரிபாடலில் முருக வணக்கம் என்னும் கட்டுரை, பரிபாடல் கூறுகிற முருக வழிபாடு, உலக இன்ப வாழ்க்கையைப் பெறுவதற்காகவே மக்கள் முருகனை வழிபட்டனர், வீடு பேற்றை (முத்தியை)க் கருதி மக்கள் வழிபடவில்லை என்பதையும் அக்காலத்தில் முருகன் வீடுபேறு அளிக்கிற தெய்வமாகக் கருதப்படவில்லை என்பதையும் கூறுகிறது.” – மயிலை சீனி. வேங்கடசாமி, (அணிந்துரை, பேராசிரியர் நா. வானமாமலை, தமிழர்பண்பாடும் தத்துவமும் –)

சனி, 7 டிசம்பர், 2019

மணி மகுடம்


மணி மகுடம்
பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
…………………………………
காதல் தானும் கடலினும் பெரிதே.
……………….. நற். 166.
 இப்பாடலை இயற்றிய புலவரின் பெயர் தெரியவில்லை. சொற்சுவையும் பொருட் சுவையும் மலிந்து காதல் சிறப்புரைக்கும்பாடலாகத் திகழ்கிறது.

இனி இச்செய்யுட்கு ஒப்பான சிறந்த செய்யுள் கிடைத்தல் அரிது: தமிழ் இலக்கியத்தின் மணிமுடியாக இதனைக் கொள்ளலாம்என்கிறார் உரையாசிரியர் பொ. வே. சோமசுந்தரனார்.

  பத்து அடிகளைக் கொண்ட இப்பாடல்- முதல் ஐந்து அடிகளில் தலைவனுக்குக் காணுந் தோறும் இன்பம் தரும் தலைவியின் அழகு வருணிக்கப் படுகின்றது’; எஞ்சிய ஐந்து அடிகள் பொருளினும் காதலே சிறந்தது எனக் கூறித் தலைவன்  பிரியேன்எனக் கூறுதலை விளக்குகின்றன.

செவ்வாய், 3 டிசம்பர், 2019

நன்றி கலந்த வணக்கம்.

உலகத் தமிழ் ஆர்வலர்களின் அன்புக்குத் தமிழ் வணக்கம். மீண்டும் சந்திப்போம்.. நன்றியுடன்....முனைவர் இரெ.குமரன்.