வெள்ளி, 6 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :29.செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :29.செல்லூர்க் கோசிகன் கண்ணனார்.

மக்கட்பேறு.

”இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

மறுமை உலகமும் மறுவின்றி எய்துப

செருநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

சிறுவர் பயந்த செம்மலோர் எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்

வாயே யாக்குதல் வாய்த்தனம் தோழி…” – அகநானூறு,66 : 1 -6.

பகைவரும் விரும்பும் குற்றமற்ற அழகினையுடைய மக்களைப் பெற்ற தலைமையுடையோர், இவ்வுலகத்துப் புகழொடும் விளக்கமுற்று, மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர், என்று பல்லோர் கூறிய பழமொழியெல்லாம் உண்மையாதலைக் கண்கூடாகக் காணப் பெற்றோம்,  என்று மகிழ்ந்து கூறினாள் தலைவி.

( இம்மை உலகம் – இவ்வுடம்புடன் வினைப்பயன் நுகரும்  உலகம் ; மறுமை உலகம் – உயிர் இவ்வுடம்பின் நீங்கிச்சென்று வினைப்பயன் நுகரும் உலகம், மறுவின்று எய்துப என்பதனால் அது நல்லுலகம் என்பது பெற்றாம்.

புதன், 4 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :28. கதம்பிள்ளைச்சாத்தனார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :28. கதம்பிள்ளைச்சாத்தனார்.

நல்ல நாள் பார்த்து, புத்தரிசி உணவு உண்ணல்.

“நல்நாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாது வித்திய பரூஉக் குரல் சிறுதினை

முந்து விளையாணர் நாள் புதிது…” – புறநானூறு: 5 -7.

                 விதைத்தற்கும் விளைந்த தானியத்தை உண்பதற்கும் நல்ல நாள் பார்ப்பது பண்டைத் தமிழரின் வழக்கமாகும். இதனை நன்னாள் வருபதம் நோக்கி என்றும் சிறு தினை முந்து விளை யாணர் (புதிய வருவாய்) நாள் புதிது உண்மார் என்று கூறினார்.

நம் பொங்கல் பண்டிகையின் முன்னோட்டமாகக் கொள்க.

 

செவ்வாய், 3 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :27. கோப்பெருஞ்சோழன்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :27. கோப்பெருஞ்சோழன்.

நல்வினை ஆற்றலே நன்றாம்.

”யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் இல் எனின்

மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்

மாறிப் பிறவார் ஆயினும்…..

எவ்வாற்றானும் நல்வினை செய்தல் நன்றே.” –புறநானூறு, 214. 4 – 12.

யானையை வேட்டையாடச் சென்றவன் எளிதாக அதனைப் பெறவும் கூடும் ; குறும்பூழ்ப் பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு ; அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் நல்வினை ஆற்றியோர் உலகில் இன்பம் கூடும் ; அஃது  கூடாயின் மாறிப் பிறத்தலால் பிறப்பில்லாமையை அடையக் கூடும் ; ஓங்கிய சிகரம் போன்று தமது புகழை நிலைநிறுத்தி பழியற்ற உடலோடு இறத்தல் நன்று ; எவ்வாறாயினும் நல்வினை ஆற்றலே நன்றாம்.

திங்கள், 2 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :26.சிறுவெண்தேரையர்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :26.சிறுவெண்தேரையர்.

தாரை வார்த்துக் கொடுத்தல்.

“ஆக்குரல் காண்பின் அந்தணாளர்

நான்மறைக் குறி……..யின்

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ

கைபெய்த நீர் கடற்பரப்ப…’- புறநானூறு. 362.

                           அந்தணாளர்களே ….! நான்கு மறைகளிலும்…….. புறத்துறையாகிய பொருள் குறித்தலின் அறநூல்களிலும் குறிக்கப்படுவதும் அன்று, மருக்கையினின்றும் நீங்கி மயக்கத்தையும் போக்கி, கொடுத்தற்பொருட்டுப் பார்ப்பார்தம் கைகளில் பெய்த தாரை நீர் கடல் அளவும் பரந்து சென்றது.

”ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து..”ஒளவையார், புறநானூறு. 367. பொருளை யாசித்து நின்ற பார்ப்பார்க்கு, குளிர்ந்த கை நிறையும் வண்ணம் பொற்பூவும் பொற்காசும் தாரை (நீர்) வார்த்துக் கொடுத்தும்.

 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி :25. மாறோக்கத்து நப்பசலையார்.

 

சான்றோர் வாய் (மை) மொழி :25. மாறோக்கத்து நப்பசலையார்.

பொருநன் பாடுங்காலம்.

”ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்று எழுந்து

தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்

நுண்கோல் சிறுகணை சிலம்ப ஒற்றி

நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தி..”- புறநானூறு: 383,1 – 4.

     ஒள்ளிய பொறிகளை உடைய சேவல் எழுப்பத் துயில் உணர்ந்து எழுந்து, குளிர்ந்த பனிதுளிர்க்கும் புலராத விடியற்காலத்தே, நுண்ணிய கோல்கொண்டு,தடாரிப் பறையை முழங்க அடித்து, நெடிய வாயிற்கடை நின்று, பலவாகிய உழவு எருதுகளை வாழ்த்தி……. பொருநன் பாடுவான்.