வியாழன், 31 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-204.

 

தன்னேரிலாத தமிழ்-204.

வீங்கிழை நெகிழ விம்மி ஈங்கே

எறிகண் பேதுறல் ஆய்கோடு இட்டுச்

சுவர்வாய் பற்றும் நின்படர் சேண்நீங்க

வருவேம் என்ற பருவம் உதுக்காண்

தனியோர் இரங்கும் பனிகூர் மாலை…” ---குறுந்தொகை, 358.

செறிந்து விளங்கிய அணிகலன்கள் நெகிழ்ந்து உழலுமாறு அழுது,  நீர்த்துளிகளை வெளிப்படுத்தும் கண்களோடு ஈங்கு மயங்கற்க, ஆராய்தற்குக் காரணமாகக் கோடுகளைச் சுவரில் இட்டு, அதனைப் பற்றி நின்று கொண்டிருக்கும் உன்னுடைய துன்பம் நெடுந்தூரம் விலகிச் செல்லுமாறு, யாம் வருதும் என்று தலைவன் தெளிவித்த கார்ப்பருவ வருகையை இதோ காண்பாயாக …!-–தோழி, தலைவிக்குக் கூறியது.

செவ்வாய், 29 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-203.

 

தன்னேரிலாத தமிழ்-203.

““பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன

நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்

பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு

உடனுயிர் போகுகதில்ல கடனறிந்து

இருவே மாகிய உலகத்து

ஒருவே மாகிய புன்மை நாம் உயற்கே.” ----குறுந்தொகை, 57.

தமக்கிடையே பூ ஒன்று இடைப்புகுந்து, ஒன்றையொன்று காணமுடியாமல் மறைப்பதாயினும் ஓர் ஆண்டு கழிந்தது போல, நீரில் வாழ்கின்ற மகன்றில் பறவைகளின் சேர்க்கை விளங்குவதாகும். ஓருயிர் இரண்டு உடல்களில் வாழ்வதுபோல் நாங்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தலைவன் பிரிந்தபோது, அவரின் வேறாக, ஓர் உயிர் ஓர் உடலில் வாழ்வது போன்ற இழிவு நேர்ந்துவிடும், அவ்விழிவினின்றும் நீங்குவதற்காகப் பிரிதற்கு அருமையுடைய, துய்த்தல் அடங்காத காமத்துடன் கடப்பாடு அறிந்து, காதலர் பிரிந்தவுடன் என் உயிரும் உடன் நீங்குவதாகுக, அதுவே என் விருப்பமாகும். –தலைவி, தோழிக்குச் சொல்லியது.

வியாழன், 24 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-202.

 

தன்னேரிலாத தமிழ்-202.

வளர்பிறை போல வழிவழிப் பெருகி

இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு

குழை பிசைந் தனையேம் ஆகிச் சாஅய்

உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்

மழையும் தோழி மான்று பட்டன்றே

பட்ட மாரி படாஅக் கண்ணும்

அவர்திறத்து இரங்கும் நம்மினும்

நம்திறத்து இரங்கும் இவ்வழுங்கல் ஊரே.”—குறுந்தொகை, 289.

தோழி…! வளர்கின்ற பிறையைப்போல, மேலும் மேலும் பெருக்கம் எய்தி,  தோள் சந்தில் அணிந்த வளை நெகிழ்வதற்குக் காரணமாகிய பிரிவுத் துன்பமாகிய நோயினால், தளிரைத் தேய்த்த தன்மை போல உடம்பு மெலிவுற்றது. அந்நோயைத் தீர்ப்பதற்குரிய தலைவன், நம் பக்கத்தில் இல்லாமையால், நாம் துன்பப்படுகின்றோம் . அதுவன்றியும் மழையும் பருவம் மயங்கிப் பெய்தது. இங்ஙனம், மழை பெய்வதற்கு முன்னரே, கெடுதலையுடைய ஊரினர், தலைவரை எண்ணி வருந்தும் நம்மைவிட, நம் பொருட்டு அவரைப் பல சொல்லித் தூற்றுகின்றனரேயான் அதற்கு ஆற்றேன்..! –தலைவி, தோழிக்குக் கூறியது,

புதன், 23 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-201.

 

தன்னேரிலாத தமிழ்-201.

நினையும் என் உள்ளம் போல் நெடுங்கழி மலர் கூம்ப

இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற

சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப

போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய

காலன் போல் வந்த கலக்கத்தோடு என்தலை

மாலையும் வந்தன்று…..” ---கலித்தொகை, 143.

காதலரை நினையும் என் உள்ளத்தைப்போல், நெடிய கழியில் மலர்கள் குவிந்துள்ளன; வருந்தும் என் நெஞ்சைப்போல், ஆயர்தம் குழலோசை தோன்றுகின்றது ; குலைவுபெற்ற என் சொற்கள் போலச் செவ்வழியாழ் இசையும் சீர் கெட்டுள்ளது ; அழிந்த என் அழகுபோல் பகல் பொழுதின் ஒளி மங்கிற்று ; கலக்கத்தோடு வந்த காலனைப்போல, என் மேல் மாலைக் காலமும் வந்தது ; இனி எங்ஙனம் ஆற்றுவேன்…? –தலைவி கூற்று.

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-200.

 

தன்னேரிலாத தமிழ்-200.

மாலை நீ  ஈரமில் காதலர் இகந்து அருளா இடம் நோக்கிப்

 போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல்

ஆரஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ..!” -----கலித்தொகை, 120.

மாலைப் பொழுதே…! நீ, அன்பு இல்லாத காதலர் விட்டு நீங்கி, அருள் செய்யாத காலம் பார்த்துப் போரிலே தோல்வி உற்றாரை, அவர்பட்ட தோல்வியை இகழ்ந்து சிரிப்பாரைப் போலப் பொறுத்தற்கரிய வருத்தமுற்ற என்னை, வருத்துதற்கு வந்தனையோ..? நீ, கொடிய மாலைப் பொழுதாக இருந்தனையே..! –கண்டார் கூற்று.

வெள்ளி, 18 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-199.

 தன்னேரிலாத தமிழ்-199.

எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத்

துள்ளூ தாவியற் பைப்பய நுணுகி

மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து

இதுகொல் வாழி  தோழி என்னுயிர்

விலங்கு வெங் கடுவளி எடுப்பத்

துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே.” –அகநானூறு, 71.

 தோழி….! செம்மையாக இயற்றப் பெற்ற உருவங் காணும் கண்ணாடியின் முன்னே, ஊதிய ஆவி முன் பரந்து, பின் சுருங்கினாற் போல, என் வலிமை சிறிது சிறிதாகக் குறைந்து,  மாய்தல் வேண்டி நிற்க,  கடிய சூறைக்காற்று அலைப்ப,  அசையும் மரத்திலுள்ள பறவை போல, யானும் மிகவும் அழிவுற்று , என் உயிர் இவ்வுடலைத் துறந்து செல்லும்  காலம் இதுவே போலும். தோழி, தலைவிக்குச் சொல்லியது.

வியாழன், 17 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-198.

 

தன்னேரிலாத தமிழ்-198.

எண் அரு நலத்தினாள் இனையள் நின்றுழி

கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.

கம்பராமாயணம், 1:10: 35.

அழகின் எல்லை இதுதான் என, மனத்தால் நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை, மாடத்தின்கண் நின்றபொழுது, ஒருவர் கண்களோடு மற்றொருவர் கண்கள் கவர்ந்து பற்றிக்கொண்டு, ஒன்றை ஒன்று ஈர்த்து இன்புறவும்  இருவரது உணர்வும் (தத்தம் இடங்களில்) நிலைபெற்று இருக்காமல் (ஒன்றையொன்று கூடி) ஒன்றுபடவும் அண்ணலும் (இராமன்) நோக்கினான் அவளும்  (சீதை) நோக்கினாள்.

புதன், 16 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-197.

 

தன்னேரிலாத தமிழ்-197.

உள்ளிக் காண்பென் போல்வல் முள் எயிற்று

அமிழ்தம் ஊறும் செவ்வாய்க் கமழ் அகில்

ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்

பேரமர் மழைக்கண் கொடிச்சி

மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.” ---குறுந்தொகை, 286.

முள்ளைப்போன்ற கூரிய பற்களையும்;  அமிழ்தம் ஊறுகின்ற அழகிய செவ்விய  வாயையும்;  மணம் வீசுகின்ற அகிற்புகையும் சந்தனப்புகையும் மணக்கின்ற கருமணலைப்போலக் கரிய கூந்தலையும்;  பெரிய அமர்த்த கண்களையும்; உடைய தலைவியின்  புன்னகையோடு, செருக்கின பார்வையை, நினைத்துப் பார்ப்பேன் போல்வேன். –தலைவன் கூற்று.

செவ்வாய், 15 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-196.

 

தன்னேரிலாத தமிழ்-196.

செல்வம் கடைகொளச் சாஅய் சான்றவர்

அல்லல் களைதக்க கேளிருழைச் சென்று

சொல்லுதல் உற்று உரைக்கல்லாதவர் போலப்

பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின்

மெல்ல இறைஞ்சும் தலை. “ ----கலித்தொகை, 61.

அறிவுடையோர், தம் செல்வம் தீர்ந்துவிட, வறுமையடைந்து துன்புற்றுத் தம்முடைய வருத்தத்தைக் களைதற்குரிய தக்க உறவினரிடத்தே சென்று தம் குறையை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்னர் அதனை  முழுதும் சொல்ல இயலாது, ,தயங்கி நிற்பாரைப் போல, இவனும் நின்றனன் ; தான் கூறக் கருதியதனைக் கைவிட்டுப் பலமுறையாகப் பார்க்கும்; பின்னை யான் அவளைப் பார்க்கின் அவள் மெல்லத் தலை இறைஞ்சி நின்றனள், என்றாள். –தோழி, தலைவிக்குக் கூறியது.

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-195.

 

தன்னேரிலாத தமிழ்-195.

கொலை உண்கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி

இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார்

நில உலகத்து இன்மை தெளி….” –கலித்தொகை, 108.

கொலைத் தொழிலை உடைய மையுண்ட கண்ணையும்; கூரிய எயிற்றினையும் ; தளிர்போன்ற மேனியையும்; கண்டார் வருத்தும் அழகினையும்; உடைய மாயோளே..! நின்னைக்காட்டிலும் அழகில் சிறந்தார் மண்ணுலகத்து இல்லை என்பதை,  நீயே தெளிவாய்..! –தலைவன் கூற்று.