ஞாயிறு, 6 டிசம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-189.

 

தன்னேரிலாத தமிழ்-189.

அழியல் ஆயிழை அன்பு பெரிதும் உடையன்

பழியும் அஞ்சும் பயமலை நாடன்

நில்லாமையே நிலையிற்று ஆகலின்

நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சின்

கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்

தங்குதற்கு உரியதன்று நின்

அம்கலுழ் மேனிப் பாஅய பசப்பே. “----குறுந்தொகை, 143.

ஆராய்ந்து அணிந்த அணிகலன்களை உடையாய்…! பயன் தரும் மலைநாட்டின் தலைவன், நின்னிடம் மிகுதியாக அன்புடையவன். நின்னைக் களவில் நுகர்ந்து, வரையாது ஒழுகும் பழியையும் அஞ்சுபவன். பல்லாற்றானும் நில்லா உலகத்தில் நிலையாக உள்ளது, நிலையாமை ஒன்றேயாகும். ஆதலின் உலகம் நன்று எனக்கொண்ட புகழை விரும்பும்  ஒழுக்கமுடைய உள்ளத்தோடு கூடிய, ஒப்புரவாளன் ஈட்டிய செல்வம் போல, நினது அழகு ஒழுகும் மேனியின்கண் பரவிய பசலை, நிலையாகத் தங்குவதற்கு உரியதன்று. ஆதலின் நீ வருந்தற்க. –தோழி, தலைவிக்குக் கூறியது.

1 கருத்து: