புதன், 28 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :803

திருக்குறள் -சிறப்புரை :803
பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. --- ௮0௩
(நட்பு எவன்)
நண்பர்கள் உரிமையோடு செய்தவற்றைத் தாமே செய்ததாகக் கருதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், பழகிய நட்பு என்ன பயனைத் தரும் ?
“ நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
  அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.”—நாலடியார்.

நல்லவர் என்று கருதி, நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர், நல்லவர் அல்லர் எனக் கண்ட போதிலும் குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல்  அவரை, நண்பராகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :802

திருக்குறள் -சிறப்புரை :802
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.--- ௮0௨
(நட்பிற்கு உறுப்பு; மற்று அதற்கு; உப்பு ஆதல்.)
நட்பிற்குச் சிறந்த உறுப்பாவது நண்பர் உரிமையுடன் செய்யும் செயல்களே ; அத்தகைய செயல்களுக்கு உடன்பட்டு ஒன்றுபடுதல் சான்றோர்தம் கடமையாகும்.
” கோட்டுப் பூப்போல் மலர்ந்து பின் கூம்பாது
 வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி.”--- நாலடியார்.
             

மலர்ந்து பின் கூம்பாது மலர்ந்தபடியே இருக்கும் மரத்தில் மலரைப்போல, இறுதிவரையிலும் விருப்பத்துடன் தொடர்வதே நட்பின் சிறப்பாகும்.

திங்கள், 26 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :801

81. பழைமை
திருக்குறள் -சிறப்புரை :801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழைமையைக் கீழ்ந்திடா நட்பு. --- ௮0௧
பழைமை எனப்படுவது யாது என்றால், பண்பிற்சிறந்த பழைய நண்பர்கள் நட்புரிமையால் செய்த எந்தச் செயலையும் மறக்காமல் மனம் கொள்வதே நட்பாம்.
“ போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை.” –கலித்தொகை.
போற்றுதல் என்பது நட்பாகக் கூடினாரைப் பிரியாதிருத்தல்.



புதன், 21 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :800

திருக்குறள் -சிறப்புரை :800
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. --- ௮00
குற்றமற்றவர்தம் நட்பினைத் தேடிக்கொள்ள வேண்டும்; போற்றும் பண்பில்லாதவரின் நட்பை, அவர் வேண்டும் ஒன்று எதுவாயினும் அதனைக் கொடுத்து, அவர் நட்பினை விட்டொழிக்க வேண்டும்.
“முயறலே வேண்டா முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக.” –பழமொழி.

முயற்சியின்றியே முனிவரேயானாலும் அவர் இத்தகையவர் என்பதை, அவர் கூடி இருக்கும் இனத்தாலே அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :799

திருக்குறள் -சிறப்புரை :799
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.--- ௭௯௯
ஒருவன், துன்புறும் காலத்தில் அவனைக் கைவிட்டு நீங்கியவர் நட்பினைத் தன்னுயிர் பிரியும் காலை நினைத்தாலும் உள்ளம் கொதிக்கும்..
“ நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென் ..” –புறநானூறு.

ஆதனுங்க…! நின்னை யான் மறவேன் ; நின்னை யான் மறக்கும் காலமாவது, என் உயிர் உடம்பைவிட்டு நீங்கும் காலத்தில்தான். என்னை யான் மறக்கும் காலம் உண்டாயின் அப்பொழுது என்னை மறப்பேனல்லது நின்னை மறவேன். 

திங்கள், 19 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :798

திருக்குறள் -சிறப்புரை :798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. – ௭௯௮
 சிறுமையான செயல்களைச் சிந்திக்காத உள்ளம் வேண்டும் ; அதுபோல தனக்கு ஒரு துன்பம் வந்துற்றபோது தன்னைக் கைவிட்டுச் செல்வாரது நட்பினைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
 சிறியன சிந்தியாத மனம் வேண்டும் ; நட்டாற்றில் கைவிடுபவன் நட்பு வேண்டாம்.
“உப்பின் பெருங் குப்பை நீர்படின் இல்லாகும்
நட்பின் கொழு முளை பொய் வழங்கின் இல்லாகும்.” –திரிகடுகம்.
உப்புக் குவியலில் நீர் புகுந்தால் ஒன்றும் இல்லாமல் போகும் ; வளர்ந்து வரும் நட்பாகிய மொட்டில் பொய்யாகிய நெருப்பைப் பெய்தால் நட்பு அழிந்து போகும்.


ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :797

திருக்குறள் -சிறப்புரை :797
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.--- ௭௯௭
ஒருவனுக்கு நன்மைதரும் செயலாவது, மூடருடன் கொண்ட நட்பினை ஒழித்து, அவரைக் கைவிடலே.
“இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்
மனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்சமூலம்.
மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.


சனி, 17 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :796
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். – ௭௯௬
  நண்பர்களைச் சரியாக இனம் கண்டுகொள்ள,  துன்பக் காலமே சரியான அளவு கோலாகும். துன்பத்திலும் நன்மை உண்டு. துன்பத்தில் துணை நிற்கும் நட்பே உண்மையான நட்பு.
“ நன்று அல் காலையும் நட்பில் கோடார்.” –அகநானூறு.

நட்பிற் சிறந்தோர், நண்பர்கள் ஆக்கம் இழந்து கெட்டபோதும் அவரிடம் கொண்ட நட்பில் ஒருபோதும் மாறுபாடு கொள்ளார்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :795

திருக்குறள் -சிறப்புரை :795
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல். ---- ௭௯௫
நன்னெறியினின்று நீங்கிச் செல்லும்போது, அழுது வருந்துமளவுக்கு இடித்துரைத்து, நல்லாரைப் போற்றும் உலக இயல்பை எடுத்துக்கூறும் வல்லார்தம் நட்பினை ஆராய்ந்து, தேர்ந்து கொள்ளல் வேண்டும்.
“…. ….. ….. பண்ணிய
யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் ..” – நான்மணிக்கடிகை.

நட்புடையார் இடித்துரைக்கும் கடுஞ்சொல் யாழோசை போலும் இனிமை உடையதாகும்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :794

திருக்குறள் -சிறப்புரை :794
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.--- ௭௯௪
(தன்கட்- தன்கண்)
 நல்ல குடியில் பிறந்து, தன்மீது விழும் பழிக்கு அஞ்சி ஒடுங்கும் தன்மைஉடைய ஒருவனை, என்ன விலை கொடுத்தாயினும் நட்பாக்கிக் கொள்ளல் வேண்டும்.
“…. …… …. சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே.”----குறுந்தொகை.
சான்றோர், தம்மை யார் புகழ்ந்தாலும் நாணுவர், அத்தகையோர் பழி ஏற்க நேர்ந்தால் எவ்வாறு தாங்குவர்?


புதன், 14 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :793

திருக்குறள் -சிறப்புரை :793
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்துயாக்க நட்பு. --- ௭௯௩
ஒருவனை நட்பாக்கிக் கொள்வதற்குமுன், அவன் குணநலன்களையும், குடிப்பிறப்பினையும்  குற்றங்குறைகளையும்  அவனோடு எப்போதும் பழகுபவர்களையும் ஆராய்ந்து அறிந்தபின்னரே அவனை, நட்பாக்கிக்கொள்ளல் வேண்டும்.
“ கரப்புடை உள்ளம் கனற்ருபவரே
செருப்பிடைப் பட்ட பரல்.” –பழமொழி.

பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர், செருப்பில் அகப்பட்ட பருக்கைக் கல் ஒப்பர்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :792

திருக்குறள் -சிறப்புரை :792
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரம் தரும்.--- ௭௯௨
பலவாறும் ஆராய்ந்து தேர்ந்துகொள்ளாதவன் கொண்ட நட்பு, சாகுவரை துன்பம் தரும்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரை
புல்லா விடுதல் இனிது.” –இனியவைநாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

திங்கள், 12 பிப்ரவரி, 2018

திருக்குறள் -சிறப்புரை :791

80. நட்பாராய்தல்
திருக்குறள் -சிறப்புரை :791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நாடாள் பவர்க்கு. --- ௭௯௧
( நட்பாராய்தல்- நட்பு ஆராய்தல்; கேடில்லை – கேடு இல்லை; வீடில்லை- வீடு இல்லை; நட்பாள்பவர்க்கு- நட்பு ஆள்பவர்க்கு.)
நட்பை விரும்பி ஒருவரோடு நட்புக் கொண்டபின், நட்பை முறித்துக்கொள்வது என்பது இயலாத செயலாகும். எனவே ஆராயாமல் நட்புக்கொள்வது போலக் கேடு தருவது வேறு ஒன்றுமில்லை.
“….. … …. ..பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே.” –நற்றிணை.
அறிவுடையோர், ஆராய்ந்து பார்த்தே நட்புக் கொள்வர் ; நட்புக்கொண்ட பின்பு ஆராய்ந்து பாரார்.


ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 790

திருக்குறள்- சிறப்புரை : 790
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.---- ௭௯0
(இவரெமக்கு- இவர் எமக்கு)
இவர் எமக்கு இத்தகைய அன்புடையவர் ; யாம் இவருக்கு இத்தகைய அன்பினர் என்று நட்பினைப் புனைந்து பேசிக்கொண்டாலும் நட்புச் சிறுமை உடையதாகிவிடும்.
“ உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே.” – மதுரைக்காஞ்சி.

ஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைப்பினும் அதனை விட்டொழித்து, வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன் நெடுஞ்செழியன்.

சனி, 10 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 789

திருக்குறள்- சிறப்புரை : 789
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.—௭௮௯
நட்பு வீற்றிருக்கும் இடம் யாதென்றால் (மனமே)  மாறுபாடு இல்லாமல் ஒரே நிலைத்தாகி இடம், பொருள், ஏவல் பாராது, உதவி வேண்டிய இடங்களில் எல்லாம் தயங்காது தாங்கி நிற்கும் தன்மையேயாம்.
“இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னொடு
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே.”—புறநானூறு.
பாரியே..! இப்பிறப்பின்கண் நீயும் நானும் நட்புடன் இன்புற்று இருந்தவாறு போல, மறுபிறப்பிலும் கண் முன்னே இடைவிடாது தோன்றும் நின் காட்சியோடு கூடி வாழ்தலை உயர்ந்த ஊழ் கூட்டுவதாகுக.



வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 788

திருக்குறள்- சிறப்புரை : 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. --- ௭௮௮
எதிர்பாராமல் இடை ஆடை அவிழ்ந்தபோது, தன்னை அறியாமலே கைகள் விரைந்துசென்று ஆடையைக் கைப்பற்றுவதுபோல, நண்பன் துன்புற்றபோது, தாமாகவே விரைந்து முன்சென்று இடுக்கண் களைவதே நட்பாகும்.
“சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல் புணர்வு உவத்தல்
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணமாக.” –ஏலாதி.

நண்பர்கள் இறந்தவிடத்துத் தாமும் பிரிவாற்றாது இறத்தலும் ; வறுமையுற்றபோது பொருள் கொடுத்து  உதவி செய்தலும்; இன்சொல் கூறுதலும்; கூடியிருத்தலை விரும்புதலும்; வருந்தும்போது வருந்துதலும்; பிரியும் காலத்தில் உள்ளம் கலங்குதலும் ஆகிய ஆறு இயல்புகளும் உண்மையான நண்பர்களுக்கு இருப்பனவாகச் சான்றோர் கூறுவர்.

வியாழன், 8 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 787

திருக்குறள்- சிறப்புரை : 787
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. – ௭௮௭
(அழிவினவை – அழிவின் அவை ; ஆறுய்த்து – ஆறு உய்த்து.)
அழிவைத்தரும் தீயவழிகளில் செல்லாது தடுத்து., நல்வழிப்படுத்தித் தவிர்க்க இயலாத துன்பம் வந்துற்றபோது அத்துன்பத்தில் தாமும் பங்கு கொள்வதே சிறந்த நட்பாகும்.
”துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்.” –புறநானூறு.
எம் தலைவன் நாஞ்சில் வள்ளுவன், வலிமை கொண்டு போர் செய்யவரும் பகைவர்களுக்கு நினைவுக்கு எட்டாத தொலைவில் இருப்பான் ; நட்புக்கொண்டு அன்பால் அடைந்தவர்க்கு அவரது உள்ளங்கை போல் நெருங்கி இருப்பான்.


புதன், 7 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 786

திருக்குறள்- சிறப்புரை : 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. --- ௭௮௬
உள்ளுணர்வு  இல்லாது முகத்தளவில் ஒருவருக்கொருவர் புன்முறுவல் காட்டிச் செல்வது நட்பன்று; உள்ளத்தில் உண்மையான அன்போடு  மனம் குளிர நட்புப் பாராட்டுவதே நட்பு ஆகும்.
எந்தை வாழி ஆதனுங்க என்
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே.” –புறநானூறு.
ஆதனுங்க..! என் நெஞ்சைத் திறப்போர், நின்னைக் காண்பர்.


செவ்வாய், 6 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 785

திருக்குறள்- சிறப்புரை : 785
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.--- ௭௮௫
ஒருவருக்கு ஒருவர் நெருங்கிப் பழகிப் புரிந்துகொண்டுதான் நட்புக்கொள்ள வேண்டும் என்றில்லை ; இருவரும் மனத்தால் ஒன்றினாலே, நட்பாகிய உரிமையைக் கொடுக்குமே.
உள்ளத்தால் ஒன்றினார் நட்பு…!
“பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே.” –புறநானூறு.
பிசிரோன்(பிசிராந்தையார்) என் உயிர் காக்கும் தோழன்,அவன் என்னிடத்தில் செல்வம் உள்ளபோது வாராமல் இருந்தாலும் யான் துன்புறுங் காலத்தே கட்டாயம் வருவான்.


திங்கள், 5 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 784

திருக்குறள்- சிறப்புரை : 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. --- ௭௮௪
ஒருவருக்கொருவர் நட்புக்கொள்வது சிரித்து மகிழ்ந்து பொழுதை வீணே கழிப்பதற்கன்று, நண்பர் நல்வழியினின்று விலகிச் செல்லுங்கால் அவரை இடித்துரைத்துத் திருத்துதற்கேயாம்.
“ சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி
வலியாகிப் பின்னும் பயக்கும்…” ---ஐந்திணை எழுபது.

நற்பண்புகள் நிறைந்த பெரியோர் நட்பானது என்றும் நிலைபெற்று அமைவதோடு, அடைந்தவர்க்கு வன்மைமிக்க துணையாகி மேலும் பல நன்மைகளை உண்டாகும்.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 783

திருக்குறள்- சிறப்புரை : 783
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. --- ௭௮௩
படிக்குந்தோறும் இன்பம் நல்கும் நூலைப்  (திருக்குறள்) போலப் பண்புடையாளர் நட்பு பழகுந்தோறும் இன்பம் பயக்கும்.
“குன்றிய சீர்மையர் ஆயினும் சீர் பெறுவர்
குன்று அன்னார் கேண்மை கொளின்.” –நாலடியார்.

பெருமை இல்லாதவர்கள், புகழில் மலைபோல் உயர்ந்து நிற்கும் சான்றோர்களின் நட்பைக் கொள்வார்களானால் அவர்களும் பெருமை பெற்று விளங்குவார்கள். 

சனி, 3 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 782

திருக்குறள்- சிறப்புரை : 782
நிரைநீர நிரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு. --- ௭௮௨
 சான்றோர் நட்பு, வளர்பிறை போல் நாளுக்குநாள் வளரும்; மூடர் நட்போ தேய்பிறை போல் நாளுக்குநாள் தேய்ந்து போகும் தன்மை உடையது
“பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நந்தும்….” –நாலடியார்.

பெரியோர்களுடன் கொள்ளும் நட்பு, பிறைபோல நாளும் படிப்படியாக வளர்ந்து சிறக்கும்.

வியாழன், 1 பிப்ரவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 781

79. நட்பு
திருக்குறள்- சிறப்புரை : 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. ---- ௭௮௧
தேர்ந்து நட்பைக் கொள்வதவிடச் செய்வதற்கு அரிய செயல்கள் யாவை உள ? அதைப்போலச் செய்யும் தொழிலுக்கு அரிய பாதுகாப்பும் ( நட்பைத் தவிர) வேறு எவை உள?.
“சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும் செய் விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு”.—நாலடியார்.
வயல்களில் பாய்ந்து வளம்தரும் நீரோடும் வாய்க்கால் போன்றவர்தம் நட்பை, அவர்கள் தொலைவில் இருந்தாலும் நாம் தேடிச்சென்று அவர்தம் நட்பைக்கொள்ளவேண்டும்.