புதன், 9 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1101


திருக்குறள் -சிறப்புரை :1101

111. புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்  ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள. ----- ௧௧0
(உண்டு உயிர்த்து ; உற்று அறியும் ; ஒண் தொடி.)

கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் நுகர்ந்தும், மெய்யால் தழுவியும் துய்க்கப்பெறும் இன்பம் யாவும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இப்பெண்ணிடத்தே இருக்கின்றன. அஃதாவது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒரே நேரத்தில் துய்க்கப்பெறும் காம இன்பத்தைக் குறித்தார் என்க.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும். ----தொல்காப்பியம்.

இன்பம் என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் பொருந்திவரும் விருப்பம் உடைமை ஆகும்.

அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதான், மக்களும் தேவரும் நரகரும் மாவும் புள்ளும் முதலிய எல்லா உயிர்களுக்கும் மனத்தின்கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயினும், ஆணும் பெண்ணுமென அடுக்கிக் கூறுதலுடைத்தாய் நுகர்ச்சி நிகழும் என்றவாறு. –நச்சினார்க்கினியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக