சனி, 19 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1111


திருக்குறள் -சிறப்புரை :1111

112. நலம் புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். ----- ௧௧௧௧

மோப்பக் குழையும் அனிச்ச மலரே..! நீயே மலர்களுள் இயற்கையிலேயே மென்மைத் தன்மையைப் பெற்றிருக்கிறாய்; ஆனாலும் வாடிப்போகும் தன்மை உடையாய் ; நீ வாழ்வாயாக ! ஆயினும் என் காதலியோ உன்னைவிடச் சிறந்த மென்மைத்தன்மையான இயல்பை உடையவளாவாள்.

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோ நீ யறியும் பூவே.” –குறுந்தொகை.

 பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும் உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே..! என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதைக் கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக ; நீ அறியும் மலர்களுள்  எழுமையும் என்னோடு நட்புடன் பொருந்திய, மயில் போன்ற சாயலையும் நெருங்கிய அழகமைந்த பற்களையும் உடைய, இப்பெண்ணின் கூந்தலைப்போல, நறுமணம் உடைய பூக்களும் உளவோ, சொல்வாயாக..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக