வியாழன், 17 ஜனவரி, 2019

சல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 3

சல்லிக்கட்டு…… வரலாற்றுப் பார்வை ~ 3

ஆய்ச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்

ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது [4]. குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது…. (விக்கிபீடியா.)
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்
சோழன் நல்லுருத்திரன். கலித். 103:63 ~ 64
……………………………………………………
கொல்லும் இயல்புடைய காளையின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை இப்பிறப்பில் மட்டுமன்று மறு பிறப்பிலும் தழுவமாட்டாள் ஆயமகள்
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார்
சொல்லும் சொல் கேளா அளைமாறி யாம்வரும்
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே
சோழன் நல்லுருத்திரன். கலித். 106:43 ~ 45
தோழி……! இவள் கணவன் கொல் ஏறு தழுவி இவளைக் கொண்டான் என்று ஊரார் சொல்லும் சொல்லைக் கேட்டவாறே யான் மோர் விற்று வருகின்ற இன்பத்தை என் காதலன் எனக்குத் தருவானோ…?
ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது…..(விக்கிபீடியா.) …… தொடரும்…..

1 கருத்து:

  1. தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஐயா. உங்களின் இப்பதிவுகளைப் படிக்கும்போது களத்தில் உள்ளதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது ஐயா.

    பதிலளிநீக்கு