.................This Blogger For Sale..kalappal. Blogspot. Com .................
Please visit : Analytical Report-2026 –Goole.
தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -42.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - வழிபாடு - தெய்வம் காக்கும் மலை: ”
குறிஞ்சி:
திரு நல உருவின் கொல்லிப்பாவை:
மலை உறை குறவன் மகள் காதல் மட மகள்
பெறல் அருங்குரையள் அருங்கடி காப்பினள்
சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள்
உள்ளள் கூடாது என்றோய் மற்றும்
செவ்வேர்ப் பலவின் பயம்கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு
அவ்வெள் அருவிக் குட வரையகத்து
கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறுபல தோன்றினும்
பெருநிலம் கிளரினும் திருநல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.” - பரணர், நற். 201.
மலையில் குடியிருக்கும் குறவனுடைய அன்பு பொருந்திய இளமகள், அரிய காவலை உடையவள்; அதனால் பெறுவதற்கு அரியவள் ; நீ கூறும் காதல் மொழிகளை உணரும் இயல்பினள் அல்லள் ; மிகவும் இளையவள் ; அத்தன்மையுடையவளைக் கருதிக் காதல் கொள்ளாதே, என்று கூறும் என் நண்பனே..!
சிறந்த வேரையுடைய பலாமரங்களின் பழங்கள் பொருந்தியதும் தெய்வத்தால் பாதுகாக்கப்பட்டுத் தீமையில்லாது விளங்கும் நெடிய மலைச் சிகரங்களை உடையதும், அழகிய வெண்மையான அருவி வீழ்வது்மான கொல்லி மலையின் சாரல் ; அவ்விடத்தில் காற்று மோதி அடித்தாலும் மழை விரைந்து மிகக் கடுமையாக் கொட்டினாலும் இடி முழக்கத்துடன், இடித்தாலும் இவை போன்ற இயற்கைப் பேரழிவு நேர்ந்தாலும் இவையேயன்றி பெரிய இவ்வுலகமே சினத்துடன் எதிர்த்து நின்றாலும் தன் அழகு நலம் நிறைந்த வடிவு கெடாத இயல்புடைய பாவை உள்ளது. அந்தக் கொல்லிப் பாவை போல என் காதலியும் என் நெஞ்சினின்று நீங்கும் தன்மையள் அல்லள் அவளை மறத்தல் கூடுமோ..? என்று உரைத்தான் தலைவன்.
( பயம் - பழம்(பயன்) ; கோடு - சிகரம்.; கதழ் - விரைவுக் குறிப்பு.; உறை - மழைத் துளி. ; உரும் - இடி. ; திரு - அழகு.)
...........................தொடரும்................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக