தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -51.
முனைவர் இரெ. குமரன்:
2.குறுந்தொகை, :
தொல்தமிழரின் - விழாக்கள்:
மருதம் :
” மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என்கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகளமகனே.”
- ஆதிமந்தி, குறுந். 31.
இப்பாடல், ஆதிமந்தியார் தன் கணவன் ஆட்டனத்தியைக் காவிரிப் புனல் விழாவில் இழந்தவழி, தேடிச் சென்றபோது கூறியதாகப் புறப்பாடல் போல அமைந்திருந்தாலும் அகப்பாடலாகவே கொள்ளப்படும்.
பாடல் கருத்து :
மாட்சிமை பொருந்திய தகுதியுடைய என் தலைவனை, வீரர்கள் கூடி எடுக்கும் வில்விழாவின் கண்ணும், மகளிர் தத்தமக்குரிய மள்ளரைத் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும், இவையல்லாத பிற இடத்தும் தேடியும் காணக் கிடைத்திலேன் ; யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே ; என் கையில் உள்ள சங்கு அறுத்துச் செய்யப்பட்ட வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே.
(மள்ளர் - வீரர்.; விழவு - வில் விழா. ; துணங்கை - ஆடவரும் மகளிரும் தழுவி ஆடும் கூத்து. ; கோடு - சங்கு. ; குரிசில் - ஆடவரில் மேம்பட்டவன்.)
........................................தொடரும்....................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக