தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -53.
முனைவர் இரெ. குமரன்: 2.குறுந்தொகை, :
தொல்தமிழரின் - வழிபாடு: கருங்கண் தெய்வம்:
மருதம் :
”பாஅடி உரல பகுவாய் வள்ளை
ஏதில மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன்கொல் இப் பேதை ஊர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வ குடவரை எழுதிய
நல்லியல் பாவை அன்ன இம்
மெல்லியல் குறுமகள் பாடினள் குறினே.”
- பரணர்,குறுந். 89.
அச்சம் மிகுவதற்குக் காரணமாகிய கொல்லி மலை பெரிய அணிகலனை உடைய சேரனுக்கு உரியது ; கரிய கண்களை உடைய தெய்வத்தால் அம்மலையின் மேற்குப்புறத்தில் எழுதப்பட்ட நல்ல இயல்புடைய பாவையைப் போன்ற மெல்லிய இயல்புடையவள் தலைவி ஆவள் ; அவள், பரந்த அடிப்பகுதியை உடைய உரலில் பகுத்து வாயால் பாடும் வள்ளைப்பாடி உலக்கையை ஓச்சி இடிக்கும் போது ; அயலார் குறை கூறுதலும் செய்வர், இத்தைய அறிவின்மையை உடைய ஊரினர் கூறும் சொற்களுக்காக வருந்திப் பயன் என்ன..?
( கொல்லி மலை, வல்வில் ஓரி என்னும் வள்ளலுக்கு உரியது. காரி என்பவன் ஓரியைக்கொன்று அம்மலையைச் சேரனுக்கு ஈந்தமையால் அது சேரனுக்கு உரியதாயிற்று. இம்மலையின் மேற்குப்புறத்தில் ஞாயிற்றின் கதிர் படுமாறு மேற்கு நோக்கியதாகத் தெய்வத்தால் அமைக்கப்பட்ட பாவை ஒன்று இருந்ததாக நூல்கள் கூறுகின்றன. இப்பாவை, கொல்லிப் பாவை எனப்பட்டது, இது கண்டோரை மயக்கி வீழ்த்தி உயிர்விடச் செய்யும் ஆற்றல் உடையதாகக் கூறப்பட்டது. அழியாத அழகுடைய தலைவிக்குக் கொல்லிப் பாவை உவமையாகக் கூறப்படும். தலைவி வள்ளப்பாட்டில் தலைவன் பெயரைக்கூறி இடித்தமை அறிந்த ஊரார் அவனைத் தலைவியோடு தொடர்புபடுத்தி அலர் மொழிந்தனர். தலைவன் மறைந்து நின்றபோது தோழி தலைவிக்குக் கூறுவதைப் போல அவனை வரைந்து கொள்ள வேண்டுதல் இவ்வள்ளைப் பாட்டின் நோக்கமாகும்.)
சொற்பொருள்:
( பாஅடி - பரந்த அடிப்பகுதி. ; பகுவாய் வள்ளை - பகுத்து வாயால் பாடும் வள்ளைப்பாட்டு. ‘ வள்ளை - உரல், உலக்கைப் பாட்டு.: ஏதில் மாக்கள் - அயலார் / பரத்தை. ; நுவறலும் நுவல்ப - கூறுதலைச் செய்வர்.; பெரும் பூண் - பேரணிகலன், வென்ற ஏழு அரசர்தம் முடிகளால் ஆனதை, சேரன் மார்பில் அணிந்திருந்தான் ; பொறையன் - சேரர் மரபுப்பெயர்.; பேஎம் முதிர் - அச்சம் மிகுதற்குக் காரணமாகிய. ; கருங்கண் தெய்வம் - கரிய கண்ணையுடைய தெய்வம் ,தேவ கணத்தில் ஒன்று , பூதம்.)
...........................தொடரும்.........................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக