தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -52.
முனைவர் இரெ. குமரன்:
2.குறுந்தொகை, :
தொல்தமிழரின் - வழிபாடு: சூரர மகளிரோடு உற்ற சூள்.
மருதம் :
”எம் அணங்கினவே மகிழ்ந முன்றில்
நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன்துறை
நேர் இறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோடு உற்ற சூளே.”
- கோபெருஞ்சோழன், குறுந். 53.
தலைவனே.....! இல்லத்தின் முன்னே உள்ள, அரும்பு முதிர்ந்த புன்க மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரவிக் கிடக்கும் வெள்ளிய மணற்பரப்பு, வேலனால் அழகுபெற அமைக்கப்பட்ட வெறியாட்டு நிகழ்த்தப்பெறும் இடங்கள் தோறும், செந்நெல்லின் வெள்ளிய பொரியைச் சிதறினாற் போன்ற தோற்றத்தைத் தரும் மணல் மேடுகள் செறிந்த நம் ஊரில் உள்ள அகன்ற அந்நீர்த்துறையில், நுண்ணிய மூட்டுவாயுடன் விளங்கும் கையின் முற்பகுதியைப் பற்றிக்கொண்டு தெய்வ மகளிரை முன் நிறுத்தி நீ கூறிய சூளுரைகள் எம்மைத் துன்புறுத்தின.
( மணல் மேடு தலைவன் தலைவியுடன் விளையாடிய இடம் வியன் துறை, தலைவன் சூரர மகளிரை முன் நிறுத்திச் சூள் உரைத்த இடம். தலைவியிடம் தெய்வன் சான்றாக ‘நின்னை இரைவில் வந்து மணம் முடிப்பேன்’ எனக் கையைப் பற்றிக் கூறிய சூளுரைகள் ; வரைவு நீட்டித்தமையால் பொய்யாயின.)
(அணங்கின - வருத்தி.; மகிநன் - மருத நிலத்தலைவன். ; நனை - அரும்பு. ; உற்ற சூள் - உரைத்த சூள்கள். ; வெறி அயர்தல் - மறியறுத்துக் குரவையாடி முருகனுக்கு வழிபாடு செய்தல். ; வேலன் - வேல் ஏந்தி ஆடுபவன். ; வியன் துறை - அகன்ற நீர்த்துறை.)
.............................தொடரும்..........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக