வியாழன், 19 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 173

 

தன்னேரிலாத தமிழ் - 173

1033

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

உழைப்பால் உழவுத் தொழில் செய்து, தான் உண்டு பிறரும் உண்ண உணவளித்துவரும் உழவர்களே, இவ்வுலகில் உரிமையுடன் வாழத் தகுதியுள்ளோராவர்.  மற்றையோர் அவரைத் தொழுது, உணவுண்டு ,அவர் அடிதொழுது பின்செல்பவராவர்.

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

 வீற்றிருந்த வாழ்வும் விழும்  அன்றே ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு. “ ----நல்வழி, 12.

ஆற்றங் கரையில் இருக்கின்ற மரத்தின் வாழ்வும் ஓர் அரசின்கண் சிறப்பாக வீற்றிருந்தவருடைய  வாழ்க்கையும் நிலைத்திராமல் அழியும். உழுதொழில் அல்லாத மற்றத் தொழில்களுக்குப் குற்றங்குறைகள் உண்டு. ஆனால், உழுது பயிர்செய்து வாழ்பவருடைய உயர்ந்த வாழ்வுக்கு ஒப்பாக வேறோர் வாழ்க்கை இல்லை.

 

1 கருத்து: