வியாழன், 22 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 30 - 31

கலித்தொகை – அரிய செய்தி – 30 - 31
கள் உண்ணல்
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
 திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
  மருதன் இளநாகனார். கலித். 99 : 1- 3
கள்ளை உண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும்  - அதனை உண்ணுதலை நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக் கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்துபவர் அந்தணராகிய வியாழ குருவும் வெள்ளி குருவும். இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச் செய்துள்ள அரசியலைக் கூறும் நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சிபுரிபவன் நீ. ( அந்தணர் இருவர் என்றது தேவருக்குக் குருவாகிய வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய வெள்ளியும் ஆவர். வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம். வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன் கள் உண்ணக்கூடாது என்றும் ; வெள்ளி கள் உண்ணலாம் என்றும் தம் நூலுள் கூறியுள்ளனர்.)
 முல்லைக் கலி -- சோழன் நல்லுருத்திரன்
கலித்தொகை – அரிய செய்தி – 31
ஏறு தழுவுதல்
 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
  புல்லாளே ஆயமகள்.
சோழன் நல்லுருத்திரன். கலித்.103:  63 - 64

 கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை மறுபிறப்பினும் தழுவ மாட்டாள் ஆயமகள். (ஏறுதழுவுதல்  முல்லை நிலத்தின் வீர விளையாட்டு; தொல்காப்பியத்தில் இடம் பெறாத ஒன்று.ஏறு தழுவிய பின்னர்க் குரவைக் கூத்து நிகழும்; தெய்வ வாழ்த்தும் இடம் பெறும். )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக