கலித்தொகை – அரிய
செய்தி – 26 - 27
தாய்ப்பால்
பாலோடு அலர்ந்த
முலை மறந்து முற்றத்துக்
கால் வன் தேர் கையின்
இயக்கி நடை பயிற்ற
மருதன் இளநாகனார். கலித். 81 : 8 - 9
பாலோடு விம்மின முலையிலே பால் பருகவும் மறந்து ; முற்றத்திலே
தேரை உருட்டி விளையாடுகின்ற கையாலே தள்ளியவாறு நடை பயின்றனன்.
எம் முலை பாலொடு வீங்க – 82
தீம்பால் பெருகும் – 83
மென்முலை பால் பழுதாக – 84
மேற்சுட்டியுள்ள கலித்தொகைப் பாடல்களில் தாய்ப்பால் பருகும்
புதல்வன் - மழலைப் பருவத்தினன் என்று எண்ணி விடக்கூடாது. புதல்வன் புத்தேளிர் கோட்டம்
வலம் செய்தும் – விளையாடியும் – கடவுட் கடிநகர் வலம் கொண்டுவரும் வயதினன் என்பதை அறிதல்
வேண்டும். அக்காலத்தே ஆண் குழந்தைகள் நான்கு
/ ஐந்து வயது வரை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
கலித்தொகை – அரிய
செய்தி – 27
குறும்பூழ்ப் போர்
செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம் ……….
மருதன்
இளநாகனார். கலித். 95 : 5- 6
செறிந்து விளங்குகின்ற வெள்ளிய பல்லினை உடையாய் – யாம் புதிய
குரும்பூழ் வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம். ( சங்க கால மக்கள் பொழுதுபோக்காகப்
பல விளையாடுக்களைக் கண்டு மகிழ்ந்தனர் ; குறும்பூழ்ப் போரும் அவற்றுள் ஒன்று. ) இவ்விளையாட்டு
இன்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருவதை இணையவழியில் அறியலாம். குறும்பூழ் – காடை
/ சிவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக