வெள்ளி, 2 அக்டோபர், 2015

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 5 - 6

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 5 - 6
தந்ததும் கொண்டதும்
உற்றோர் மறவா நோய் தந்து
கண்டோர் தண்டா நலம் கொண்டனனே.
கபிலர். ஐங். 278 : 4 – 5
தோழி! நம் காதலன்  தன்னொடு நட்புற்றோர் என்றும் மறக்க முடியாத பெருந் துன்பத்தை நமக்குத் தந்து ; அதற்கு ஈடாக ஒருகால் கண்டோர் மீண்டும் மீண்டும் காண விழையும் நம் பேரழகைத் தான் கொண்டேகினான் ! – ( காதலன் நமக்குத் தீமையைக் கொடுத்து விட்டு நம்மிடமிருந்த நன்மையை எடுத்துக் கொண்டான் என்னே இவன் பண்பு என எள்ளும் வகையில் கூறினாள்.
 ஒப்பு நோக்குக -
( மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன் . நற். 278 --  மீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன் – குறுந். 54. இவ்வழகிய உவமையால் பெயர் பெற்ற  புலவர் – மீனெறி தூண்டிலார்.)
பாலைத் திணை - ஓதலாந்தையார்
 ஐங்குறுநூறு – அரிய செய்தி – 6
எழுத்துடை நடுகல்
விழுத் தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
 எழுத்துடை நடுகல் ……………….
ஓதலாந்தையார். ஐங். 352 : 1 – 2
விழுமிய அம்பு தொடுத்தலை உடைய மறவர் தம் வில்லினின்று விடுத்த அம்பினால் உயிர் நீத்து வீழ்ந்த கரந்தை வீரர் பொருட்டுப் பெயரும் பீடும் பொறித்து நட்ட நடுகல். ( அக்காலத்துத் தமிழ் எழுத்துப் பற்றிய வரலாறு இதனாற் புலப்படும். மேலும் காண்க : அகம். 53 . 131 ; புறம்.264 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக