புதன், 21 அக்டோபர், 2015

சிங்கப்பூரில் சில நாள்கள்…

வணக்கம்
Welcome – Pl. visit – kalappal.blogspot.com
A Blogger for Ancient Tamil
தமிழ் - ஆர்வலர்களுக்கும் ; ஆய்வாளர்களுக்கும்

சிங்கப்பூரில் சில நாள்கள்….
                         சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு வணக்கமும் வாழ்த்தும். 2001 ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரின்  வியத்தகு விரைவு வளர்ச்சியைக் கண்டு களிப்பவன். இவ்வார இறுதியில் தாயகம் திரும்பவுள்ளேன்.
சிறப்புயர் சிங்கப்பூர்
                           ஒரு சிறிய நாட்டில் மக்களுக்கென ஒரு மாபெரும் குடியரசை உருவாக்கிய மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் – சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி – அன்னாரின் புகழ் ஓங்குக ! அவர் -  தன் குழந்தையை நேசித்து வளர்த்ததைப் போல்  தன் நாட்டையும் நேசித்து வளர்த்தவர் என்பதை மக்கள் அறிவர். சாதி சமய இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் ஒருநிலை என்னும் ”மக்கள் கொள்கை ”ஒன்றினை முன்னெடுத்துச் செல்லும் சிங்கப்பூர் அரசினை எவ்வளவு பாராட்டினும் தகும்.
                                     மறைந்த மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தமிழர்களையும் தமிழையும் போற்றியவர் ; அதனாலன்றோ தமிழீழப் போராளிகள் வென்றெடுக்க விரும்பிய தமிழீழத்தை ஆதரித்துக் குரல் கொடுத்தார்; அக்குரலை மண்ணும் மனித உறவுகளும் மறந்திடக் கூடுமோ..அது காலத்தால் அழியாத கனவுக்குரல் – ஒருநாள் மெய்ப்படும். அன்னாருக்குத் தமிழும் தமிழ் மக்களும் நன்றிக்கடன் பட்டவராவோம்.
                       சிங்கப்பூர் அரசு – மக்களுக்கான அரசு; மக்களின் நாடித் துடிப்பை – எதிர்பார்ப்புகளை அளந்தறிந்து செயலாற்றும் அரசு. மக்களின் நலவாழ்வும் – நல்வாழ்வும் சிங்கப்பூரின் அடையாளங்கள். உலகத் தமிழ்மக்களுக்கு வேறெங்கும் கிடைக்காத உண்டி- உடை- உறையுள் ஆகிய இம்மூன்றும் காத்தளித்த  உலக நாயகர் திரு லீ குவான் யூ அவர்களின் கனவை நனவாக்கிய தமிழ் உள்ளங்கள் தொடர்ந்து நற்பணியாற்றிச் சிங்கப்பூரின் செழுமைக்குப் பங்களிக்க வேண்டும். சிறுபான்மையினராகிய தமிழர்களின் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிய மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் தமிழன்னையின்  தவப்புதல்வர்; தமிழ் நிலந்தோறும் அவர்தம் புகழ் நிலைத்து நிற்கும். அன்னார்தம் ஆன்ம ஒளியில் தழைதிருக்கும் தமிழ் மக்களுக்குச் சிங்கப்பூர் புகுந்த வீடு ! தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிக் காப்பாற்றவும் பிறந்த வீட்டின் பெருமை விளங்கவும் வாழ்ந்து காட்டுங்கள்.
அன்புள்ள தமிழா…
                            வாழ்வது ஒரு முறை – வாழ்த்தட்டும் தலைமுறை ; வாழவந்த வீட்டில் வீழ்த்தும் அடாவடித்தனங்களை விட்டொழியுங்கள். நமது நாடு நமது வீடு  என்று பெருமை கொள்ளுங்கள்.  “ சுற்றித் திரியாதீர்” – ”போத்தலில் பீர் விற்பனைக்குத் தடை ” போன்ற அறிவிப்புகள் பெரிதும் வருத்தமடையச் செய்கின்றன.
   உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்கள் சிங்கப்பூரில் உள்ளன. கல்வியறிவால் மேம்பட்ட நாட்டில் வாழ்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் கூத்தாடி அரசியலை இங்கு கொண்டாடி மகிழ வேண்டாம். சிங்கப்பூரின் சட்ட திட்டங்களை மதித்துப் போற்றி வாழ முற்படுங்கள். அரசின் முன்னேற்றத் திட்டங்களோடு இணைந்து உழைத்து முன்னேறுங்கள். வீடு வாசல் உற்றார் உறவினர் என எல்லாவற்றையும் உதறிவிட்டு உழைத்துப் பிழைக்கவந்த நாட்டின் அருமை பெருமைகளை அறிந்து உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை நல்ல காலமாக்கிக் கொள்ளுங்கள். நல்வாழ்த்துக்கள்.
 
                             நன்றியுடன்

  இரெ. குமரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக