திங்கள், 26 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 38 - 39

கலித்தொகை – அரிய செய்தி – 38 - 39
 உயிர்களைப் படைத்தவன்
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
 பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் ….
     நல்லந்துவனார். கலித் . 129 : 1 - 2
 பல உலகங்களிலும் உள்ள உயிர்களை எல்லாம்  (அயனாய்) படைத்த முதல்வன் – தொல் ஊழிக் காலத்தே அவ்வுயிர்கள் எல்லாம் (அரனாய) தன்னிடத்தே தொகையாக வந்து ஒடுங்குதலைச் செய்வன்.
கலித்தொகை – அரிய செய்தி – 39
நெய்தல் – ஊஞ்சல்
இன மீன் இகல் மாற வென்ற சினமீன்
 எறிசுறா வான் மருப்புக் கோத்து நெறிசெய்த
 நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்து கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இனவண்டு இமிர்ந்த ஆர்ப்பி
தாழாது உறைக்கும் தடமலர்த் தண் தாழை
வீழ் ஊசல் தூங்கப் பெறின்
நல்லந்துவனார். கலித் . 131  : 6 - 11


தன் இனமான மீன்களுள் தன்னை எதிர்த்த அனைத்தையும் மாற்பாடு கெடத் தாக்கி – வென்ற சினத்தை உடையது எறிசுறாமீன். அச்சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்து அமைத்த ஊசற் பலகை – புறவிதழ் நெய்தற் பூவின் நெடிய நாரினால் கயிறு தொடுத்து அழகுற கட்டினேன்.கை மீட்டும் யாழினது ஓசையைத் தம்மிடத்துக் கொண்ட வண்டினங்கள் ஆர்ப்பரவம் செய்தன. நெய்தல் மலர்களை நாரால் கட்டி அழகு செய்து தாழையின் விழுதால் திரித்த ஊசற் கயிறு அமைத்து ஊஞ்சலைக் கட்டியுள்ளேன் – அவ்வூஞ்சலில்  நீ அமர்ந்து ஆடுவாய். ( ஊசலில் ஆடுங்கால் இசையுடன் பாடும் மரபு காணப்படுகின்றது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக