இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…73.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை. )
”இருவர்தம் சொல்லையும் எழு தரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையா ராயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்
மனம் உருகி நின்று அழுத கண்ணீர்
முறை உறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே.”
நீதி வழங்கும் தீர்ப்பாளர் இரு கட்சிக்காரர்களின் முறையீட்டையும் ஒரு முறை,
இருமுறை அல்ல பல முறை கேட்டு, இரு கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும்படி நீதி
நெறிமுறை வழுவாது தீர்ப்பு அளிக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் ஒரு
கட்சியினருக்கு ஆதரவாக முறையின்றித் தீர்ப்பு அளித்தால், வழக்கில் தோற்ற
நேர்மையாளர் அழுத கண்ணீர் , தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் குடியை அவருடைய
தலைமுறையும் அழிந்துபோக அழிக்கும் வாளாகிவிடும். அந்த நீதிபதியைக்
கடவுளாலும் காப்பற்ற
முடியாது.
“வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் .‘ -இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் : காதை;11.
வாய்மை தவறாமல் உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத
அரும்பொருள் என்று ஏதேனும்
உண்டோ..? இல்லை என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக