இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…64.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை. )
”உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா”
இயற்கையின்
படைப்பாகிய இவ்வுலகில் மாறாதது என்று எதுவுமே இல்லை. எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன
; மாற்றம் ஒன்றே வளர்ச்சி ஆகும். வாழ்க்கையில் செல்வம் சேர்தலும் ;வறுமை வருதலும் இயல்பான
நிகழ்வுகளே.காலத்தின் கோலத்தில் செல்வம் சேர்த்தவன் வறியவன் ஆதலும்; வறுமையில் வாடியவன்
செல்வச் செழிப்புடன் வாழ்தலும் கூடும்.எதுவுமே நிலையானதில்லை; இரவும் பகலும் மாறி மாறி
வருதல் போல வாழ்க்கையில் நன்றும் தீதும் மாறி மாறி வரும்.
“வைகல் தோறும் இன்பமும் இளமையும்
எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து” – …………நற்றிணை:46.
வில்லினின்று
எய்யப்படும் அம்பின் நிழல் எப்படி நொடிப்பொழுதில் மறையுமோ அப்படி இவ்வுலகத்தில் நாள்தோறும்
இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக