நெடுநல்வாடை அரிய செய்தி : 8
அரசி படுத்திருக்கும்
வட்டக்கட்டில்
தசநான்கு
எய்திய பணைமருள் நோன்தாள்
இகல்
மீக்கூறும் ஏந்து எழில் வரிநுதல்
பொருது
ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும்
செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர்
உளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு
தூங்கு
இயல் மகளிர் வீங்குமுலை கடுப்ப
புடை
திரண்டிருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி
நோன் முதல் பொருத்தி அடிஅமைத்து
பேர்
அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில்
நக்கீரர், நெடுநல் . 7:
115 - 124
நாற்பது ஆண்டுகள்
நிரம்பப்பெற்றதும், முரசு போன்ற வலிமை வாய்ந்த திரண்ட கால்களைக் கொண்டதும், போரில்
தன்னுடைய ஆற்றலை மிகுத்துக் காட்டும் வலிமையுடையதும், சிறந்த அழகும், புள்ளிகளைக் கொண்ட
நெற்றியும் உடையதும், போரில் இறந்துபட்டதும் ஆகிய யானையின் தானே வீழ்ந்த தந்தங்களை
எடுத்து, அவற்றின் திரட்சியும் செழுமையும் விளங்குமாறு, இருபுறத்தையும், தச்சன் தன்னுடைய
கூர்மை வாய்ந்த சிற்றுளியால் நுட்பமாகச் செதுக்கி வட்டக்கட்டில் உருவாக்கப்பட்டது,
அக்கட்டில் பெரிய இலை வடிவம் இடையே விளங்குமாறு இயற்றப்பட்டது.
சூல் முற்றித் தளர்ந்த
இயல்புடைய மகளிரின், பால் முற்றித் திரண்ட முலையைப் போல, பக்கம் உருண்டிருக்கும் குடத்தை
உடையதாகக் கட்டிலின் கால் அமைந்திருக்கும்.
குடத்திற்கும் கட்டிலுக்கும்
நடுவே உள்ள இடம் உள்ளியின் வேர்ப் பகுதி போல நீண்டு விளங்கக் கட்டிலின் கால்கள் வலியவாய்
இயற்றப்பட்டன். அக்கட்டில் அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்டதாகும், பெரும் புகழ் உடையதாக
இவ்வட்டக் கட்டில் விளங்குவதாகும்.
( தசநான்கு
– நாற்பது ; பணை – முரசு ; நாகம் – யானை ; வல்லோன் - சிறந்த தச்சன் ; பாண்டில் – வட்டக் கட்டில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக