ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 30

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 30
தெய்வத்திற்கு மடை கொடுத்தல்
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி
குரல் புணர் நல்யாழ் முழவொடு ஒன்றி
நுண்நீர் ஆகுளி இரட்ட பலவுடன்
ஒண்சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நல்மா மயிலின் மென்மெல இயலி
 கடுஞ்சூல் மகளிர் பேணி கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப
                          மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 604 – 610
யாழ் முறுக்காணியின் நரம்பினை அதன் தண்டில் கட்டி, செவ்வழி என்னும் பண்ணை இசைப்பர், குரல் எனும் நரம்புடன் பொருந்திய யாழிசைக்கு ஏற்ப முழவும் பொருந்தி ஒலிக்கும், மெல்லிய தன்மையுடைய சிறுபறை ஒலிக்கும், ஒள்ளிய சுடர் விளக்கம் முற்பட்டுத் தோன்ற, பூசைக்கு வேண்டும் பொருள்கள் பலவற்றுடன் முதற் சூலினை உடைய மகளிர், பால்சோறு முதலிய படையல் பொருள்களை ஏந்தி, நன்றாகிய பெருமையுடைய, மயில் போல மெத்தென நடந்து சென்று கையால் தொழுது, பெரிய தோளினையுடைய தேவராட்டியோடு வழங்குவர்.
  முதற் கருவுற்ற மகளிர்வழிபாடு ;  மாலையில் செவ்வழிப்பண்ணும், காலையில் மருதப் பண்ணும் இசைக்க வேண்டும் என்பது இசைநூல் மரபு.
( கடுஞ்சூல் – முதற் சூல் ; திவவு – வார்க்கட்டு ; செவ்வழி – மாலைப் பண் ; ஆகுளி – சிறுபறை ; சாலினி –  தேவராட்டி (தெய்வம் ஏறி ஆடுபவள்) ; வெறியாட்டு – முருகப் பெருமானுக்கு உரிய வேலினை ஏந்தி வழிபடுபவன் வேலன், அவன் தெய்வம் ஏறி முருகனாகவே நின்று ஆடுதல் வெறியாட்டு எனப்படும்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக