வியாழன், 7 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 27

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 27
மாலை மலரும் இந்நோய்
காதல் இன்துணை புணர்மார் ஆயிதழ்த்
தண் நறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நல்நெடுங் கூந்தல் நறுவிரைகுடைய
நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென் நூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப
பெண் மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர்
               மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 550 – 555
கணவர் தம்மைப் பிரிதலால், அவருடன் கூட்டத்தை விரும்பியிருந்த மகளிர், தம் மேல்  காதலையுடைய தமக்கு இனிய கணவரைக் கூடுதற்கு விரும்பினர். அவர்கள், ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த மணம் கமழும் செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டினர். அணிகலன்களை அணிந்து கொண்டனர், நன்றாகிய நெடிய மயிரில் பூசிய மணம் வீசும் மயிர்ச் சந்தனத்தை நீராடி நீக்கினர் – கத்தூரி, நறிய சந்தனம் ஆகியவற்றை அரைத்தனர், மெல்லிய நூலால் செய்த ஆடைகளுக்கு மணம் கமழும் அகிற்புகையை ஊட்டினர். குணச்சிறப்பால், உலகத்துப் பெண்ணினத்தாரும் விருப்பமுறும் மான் பிணை போன்ற நோக்கினையுடைய மகளிர்.
( துணைப்ப – கட்டும்படியாக ; நறுவிரை – மயிர்ச் சந்தனம் ; நரந்தம் – கத்தூரி ; கலிங்கம் – ஆடை .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக