வியாழன், 28 ஏப்ரல், 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 1

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 1
அறத்தொடு நிற்றல் - முகவுரை
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல்
ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறு பல் உருவின் கடவுட் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நன்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்புவந்து அலைப்பவும்
உள்கரந்து உறையும் உய்யா அரும்படர்
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்
                              கபிலர், குறிஞ்சிப் . 1 – 12
தாயே ! வாழ்வாயாக…
தாயே ! யான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக….!
                                   ஒளி பொருந்திய நெற்றியையும் தழைத்த மெல்லிய கூந்தலையும்,  பிறர் நிறத்தினை வெல்லும் வெற்றியுடைய நிறத்தினையும் உடைய என் தோழி, தன் மனத்திற்குள், தன் உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய ஆற்றுதற்கரிய நினைவினை மறைத்தாள் ; அதனால் அவள் அணிந்திருந்த அணிகள் நெகிழப்பெற்றன. மருந்துகளால் நீக்குதற்கரிய கடிய இந்நோயை நினக்குச் சொல்லுதல் எளிதன்று, வலிமையுடத்து, ஆதலால் யான்  அதனை வெளிப்படுத்தாமல் என்னுள் அடக்கி வைத்தேன், அவளுடைய நல்ல அழகு கெட்டது, நறிய தோள்கள் மெலிந்தன,வளை கழன்றமையால் பிறர் அவள் நிலையை அறிந்தனர். தனிமைத் துயரம், அவளை மிகவும் வருத்தியது ; இந்நிலையை யான் , நினக்கு அறிவிக்காமல் மறைத்துக் காத்தனன்.
                                     நீயும் மனம் வருந்தி, அகன்ற இடத்தையுடைய இவ்வூரில் கட்டினானும் கழங்கினானும் எண்ணிக் கூறுவாரை அழைத்துத்  தலைவியின் துயரத்திற்கான காரணத்தை அறிய விரும்பினை, ; அவர்களும், தலைவியின் வருத்தம் தெய்வத்தால் வந்தது எனக் கூறினர். அதனைக் கேட்ட நீ, வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களுக்கு மணப் புகை , சந்தனம் முதலியன கொடுத்துப் பரவியும் வணங்கியும் பல நிறப் பூக்களைச் சிதறியும் வழிபட்டும் செய்த முயற்சிகளால், அந்நோய்க்கான காரணத்தை அறிய இயலாது மயங்கி வருந்துகிறாய்..!
(ஒலி – தழைத்த ; படர் – நினைவு ; புள் – வளை ; புலம்பு – தனிமை ;  வீவு அருங் கடுநோய் – போக்குதற்கரிய காம நோய் ; எய்யாமை – அறியாமை ; மயல் – மயக்கம் ; அகலுள் – அகன்ற இடம் ;  அறியுநர் – கட்டுவிச்சி / வேலன் ; நறை – மணப்புகை ; விரை – நறுஞ் சந்தனம்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக