புதன், 9 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 45-- 46

நற்றிணை – அரிய செய்தி – 45-- 46
கண்கள் கூறும் கருத்து
 நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும்
 பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்
 நும்மினும் அறிகுவென்..........
………………. நற். 160 : 1-3
  குவளை மலரின் பிணையலைப் போ ன்றது செவ்வரி பரந்து மதர்த்து விளங்கும் இவளுடைய கண்கள். அக்கண்களை யான் காணும் முன்பாக என்னிடம் -  யாருடனும் நெருங்கிப் பழகும் உறவும் சுற்றந் தழுவலும் நட்பும் நாணம் நன்குடைமையும் பிறர்க்கு உதவும் பயனறிதலும் நன்னெறிக்கன் படரும் பண்பும் உலகநடை அறிந்தொழுகும் பாங்கும்  நும்மைவிடச் சிறந்திருந்தன. இப்போது இவள் கண்களைக் கண்ட பின்னர் அவையாவும் எம்மிடம் இல்லையாயின -  ( இனி எல்லாப் பண்புகளும் இவள் பொருட்டாயின என்றனன் என்க.)
     நற்றிணை – அரிய செய்தி – 46             
மழை வழிபாடு
அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது
பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன்
அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக்
கடவுள் ஓங்குவரை பேண்மார் வேட்டு எழுந்து
கிளையொடு மகிழும் குன்ற நாடன்
…………………. நற். 165 : 1 – 5
 அமர்த்த கண்ணை உடைய ஆமானின் அரிய மார்பிடத்தே பாய்ந்து தங்காது குறிதவறி நீங்கிவிட்ட அம்பின் போக்கை நினைந்து – காடவன்

” இம்மலையில் தெய்வம் தோன்றி நின்றது மழை பெய்தால் அத்தெய்வத்தின் வீறு தணியுமாகலின் மலையை மழை வந்து சூழ்வதாக “ என்று மலை மேலதாகிய கடவுளை வழிபடும் பொருட்டுத் தன் சுற்றத்தோடு விரும்பி எழுந்து மலைக்குப் பலியை இட்டு நீர் வளாவினான் ( படையலில் நீர் வளாவுதல் இன்றும் உண்டு ) மலை. அப்பலியை உண்ணுமாறு நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக