செவ்வாய், 15 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 62 - 64

நற்றிணை – அரிய செய்தி – 62 - 64
நில்லா வாழ்க்கை
 கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர் …….
காமக்கணிப் பசலையார். நற். 243 : 5-6
  அறிவுடையீர் ! சூதாடு கருவி பெயர்ந்து விழுவது போன்று நிலையில்லாதது பொருள் ‘ இப்பொருளை ஈட்டுதலே வாழ்க்கையெனக் கொண்டு நும் காதலியரைப் பிரிகின்ற செயல் புரியாது சேர்ந்திருங்கள்.
நற்றிணை – அரிய செய்தி – 63
அசுணம்  பறவையா.. விலங்கா ?
விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
கூற்றங்குமரனார். நற். 244 : 1 – 4
 மழைபெய்த பெரிய குளிர்ச்சியான சாரலில் கூதிர்க்காலத்தில் கூதளம் மலரும். அதில் தேன் உண்டு மணம் வீசும் அழகிய வண்டு இசை எழுப்பும் ;கேட்டற்கு விருப்பம் தரும் அதன் இசையை யாழோசை என்றுகருதி – மணம் வீசும் பலைப்பிளவில் தங்கியிருக்கும் அசுணப் பறவை செவி கொடுத்துக் கேட்கும்.         ( இனிய இசையைக் கேட்டு மகிழும் இப்பறவை கொடூர இசையைக் கேட்டால் அவ்விடத்திலேயே உயிர்விடும் என்பர். சங்க இலக்கியங்களில் இடம்பெறும் இப்பறவை அசுணம் என்றும் அசுணமா என்றும் குறிக்கப்படுகிறது – விலங்கியல் வழி ஆய்க)
நற்றிணை – அரிய செய்தி – 64
பசலை – தோல் நோய்
…………………….. நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே.
பரணர். நற். 247: 8- 9

தலைவியின் நல்ல நெற்றியில் பசலை நோய்  புதிதாகத் தோன்றித் தங்கியது. அந்நோய்க்கு நீயே மருந்து – வேறு மருந்தும் இல்லை என்பதுணர்ந்து  அவளைப் பிரிந்து செல்வாயாக. ( மருந்தின்றிக் குணமாகும் இந்நோய் குறித்து ஆய்க )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக