நற்றிணை – அரிய
செய்தி – 26- 27
ஓரை விளையாட்டு
விளையாடு ஆயமோ டோரை ஆடாது
இளையோர் இல்லிடத் திற்செறிந் திருத்தல்
அறனும் அன்றே……………….
விரான் சாத்தனார். நற்.68: 1- 3
ஆயமகளிரொடு கூடிச் சென்று
ஓரை முதலியன விளையாடாமல் ; இளமகளிர் மனையின்கண்ணே செறிப்புண்டிருத்தல் அறமாகாது.
ஓரை
என்பது நீர் விளையாட்டு வகையுள் ஒன்று; பற்பலரும்
கரையில் நிற்க; ஒருவர் ஒரு சிறு குச்சியைக் கால் விரலின் இடையில் செருகிக் கொண்டு நீர்க்குள்
குதித்து மூழ்கி விட்டுவிடுவர். அது நீர்ப்பரப்பில் வெளிப்பட்டு மிதக்கக் காண்பவர்
தாம் நீரில் குதித்து நீந்தி அதனை எடுத்து வந்து கரையவர்பால் சேர்ப்பர்; தவறுவோர் பலருடன்
நீரில் இறங்கி ஒவ்வொருவரையும் தீண்ட முயல்வர்; நீந்துதல் வல்லவர்கள் அவர் கைப்படாமல்
நெடிது செல்வதும் நெருங்கியவழி நீர்க்குள் மூழ்கிப் பின் வேறிடத்தில் வெளிப்படுவதும்
செய்வர்.; இஃது இக்காலத்து ஓரையாட்டு.
நற்றிணை – அரிய
செய்தி – 26 அ
புறவின் குரல்
……………………. செல்வர்
வகையமை நல்லில் அகவிறை உறையும்
வண்ணப் புறவின் செங்காற் சேவல்
வீழ்துணைப் பயிரும் தாழ்குரல் கேட்டொறும்
வண்ணப்புறக் கந்தரத்தனார். நற்.71 : 6-9
செல்வர் கட்டிய பலவேறு வகைகள் அமைந்த நல்ல வீட்டின்; இறைப்
பக்கத்தில் அமைந்த கூட்டில் வாழும் வண்ணப் புறாவினது சிவந்த
காலையுடைய ஆண்; தான் காதலிக்கும் பெடைப் புறாவை அழைக்கும் தாழ்ந்த ஓசையுடைய குரலைக்
கேட்குந்தோறும்……… புறாவின் தாழ்குரல் என்றது – அதனைக் கேட்குங்கால் கேட்போர் உள்ளத்தில்
காதலுனர்ச்சி எழுதலின் கேட்டொறும் என்றார். வண்ணப்புறவின் செங்காற் சேவல் – என்று பாடியதால்
கந்தரத்தனார் ; வண்ணப்புறக் கந்தரத்தனார் எனப்பட்டார்.
நற்றிணை – அரிய
செய்தி – 27
சாய்க்காடு
பூக்கெழு படப்பைச் சாய்க்கா டன்னஎன்
மூலங்கீரனார். நற். 73 : 9
தாமரை முதலிய நீர்ப்பூக்களையுடைய
தோட்டக் கால்கள் பொருந்திய சாய்க்காடு என்னும் ஊர்……… காவிரி கடலொடு கலக்கும் இடத்திலுள்ள காவிரிப்பூம்
பட்டினத்தின் மேலைப்பகுதி மேலும் காண்க – அகம். 220 . 174
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக