வெள்ளி, 18 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 71 - 73

நற்றிணை – அரிய செய்தி – 71 - 73
ஆண்மகன் அல்லன்
நீயே பெரு நலத்தையே அவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி
தண்கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே.
மதுரை மருதனிள நாகனார். நற். 290 : 6 _ 9
  தலைவி ! நீயோ சிறந்த நலமான பண்புகளை உடையவள் ; அவனோ நெடிய நீரை உடைய பொய்கையில் நள்ளிரவின்கண் சென்று அங்கு குளிர்ந்ததாய் மணம் கமழும் புதிய மலரில் தேனை உண்ணுகின்ற வண்டு போன்றவன் எனக் கூறுவர் ; அவனை நல்ல ஆண்மகன் என்று யாரும் கூறமாட்டார்கள். ஆதலின் அவனோடு நீ ஊடுதல் வேண்டா.
நற்றிணை – அரிய செய்தி – 72
பன்னாட்டு வாணிகம்
வேறு பல் நாட்டுக் கால்தர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறை
ஒளவையார். நற். 295 : 5 – 6
 பல்வேறு நாடுகளிலிருந்தும் காற்றுச் செலுத்தலால் வந்து சேர்ந்த பல்வகைத் தொழில்களையும் மேற்கொள்ளுதற்கு இயைந்த கலங்கள் விளங்கித் தோன்றும் பெரிய துறைமுகம்.
நற்றிணை – அரிய செய்தி – 73
நிறம் மாறும் பூ
 வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
 நறை நிறம் படுத்த நல் இணர்த்  தெறுழ் வீ
   மதுரை மருதனிள நாகனார். நற். 302 : 4 -5

 பெரிதாகப் பெய்கின்ற மழையை நோக்கிப் பூத்திருக்கின்ற எறுழ மலர்கள் நீலமணி போன்ற நிறம் கொண்டவை. அடர்ந்த புதர்களில் உள்ள நல்ல பூங்கொத்துக்களை உடைய இவை மழைக்காலம் நீங்கியதால் தம் இயல்பான நீல நிறத்தினின்று மாறி வெண்மை நிறமாக மாறியிருக்கின்றன. தெறுழ்வீ –( எறுழ மலர்)

2 கருத்துகள்: